jeudi 29 septembre 2011

அனுபவத்தால் உணர்

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.
அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன். இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.
புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது  ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், “கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.

விவேகானந்தர் சிந்தனைகள்.

* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.


* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.


* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.


* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.


* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.


* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.


* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.


* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.


* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.


* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.


* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.


* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

jeudi 22 septembre 2011

புத்தர்கூட தடுமாறினார்

                             என்ன.. எல்லம் அறிந்த ஞானி புத்தர்கூட தடுமாறினாரா.. ஏன் வீண் யோசினை.. உடனே உங்கள் அவசர புத்திய காட்டுறீங்களே.. எல்லாத்துக்கும் உங்களுக்கு அவசரம்தான்.. ஒன்னும் அவசரம் இல்ல.. அதோ  புத்தர் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய ஆனந்தருடன் போகிறார்.. கொஞ்ச தூரம்தான்.. வாங்க நாமும் அவர்களோடு பயணிப்போம்..
                                                புத்தர் அந்த ஊருக்கு செல்ல தனது அரண்மனை வழியாக செல்லவேண்டியதாக இருந்கிறது. எப்படியும் அவரின் ஊர் வழியாக சென்றால், உற்றார் உறவினர், தம் குடும்பத்தாரை எல்லாம் சந்திக்க வேண்டிவருமே.. அப்படி அவர்களை  சந்தித்தால்.. அவர்கள் மிக வருந்துவார்களே..! முக்கியமாய் அவரின் மனைவி யசோதா இந்த செய்தியை  கேள்விப்பட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவாளே என்று வருந்தினார் புத்தர்.. இருந்தாலும்.. எல்லாரையும் தன் அன்பால் சமாதானப்படுத்திவிட முடியும் என்று முழுமையாய் நம்பினார்.. தன் பிறந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைத்ததும். மக்கள் குதூகலித்தனர்.. கூக்குரலிட்ட விழுந்து தொழுது எதேதோ செய்து தம் அன்பை  வெளிப்படுத்தினர்.

                                                 அப்போது புத்தரின் முக்கிய சீடர் ஆனந்தர் கேட்டார்.. உங்கள் நாட்டில் இப்படி அன்பான மக்கள் இருக்க.. எப்படி இவர்களைவிட்டு வர முடிந்தது..? புத்தர் சொன்னார்.. அவர்கள் அன்பை வெளியில் தேடியும்.., கண்டுகொண்டும்விடுகிறார்கள்... நானோ உள்ளே  தேடவேண்டி இருந்தது.. அதனால் வந்தேன்.. என்றார்.. புத்தர் மீண்டும் சொன்னார்.. ஆனந்தா.. நிச்சயம் நான் தடுமாற போகிறேன். என் பாதையை கவனி என்று புன்னகைத்தார்.

ஆனந்தருக்கோ ஆச்சரியம். மிகவும் சுத்தமான  புதிதாக இடப்பட்ட தெருவில் கண்ணுகெட்டிய தூரம்
வரை எந்த பள்ளமோ கல்லோ கட்டைகளோ இல்லை.. புத்தரும் தெம்பாய் தெளிவாய் நடக்கிறார். எப்படி தடுமாற போகிறார் என்று சிந்தித்தபடியே நடந்தார்.

அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிந்தது.. அடுத்த சில நிமிடங்களில்.திடீரென..ஒரு பெரும் கூட்டமாக மக்கள் அரண்மனையில் இருந்து வெளியே  ஓடிவந்தனர். புத்தரை நோக்கி கைக்கூப்பி நின்றனர்.. சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதனர்..

அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்.. வணங்குவதற்கான எந்த செய்கைகளும் இல்லாமல்.. புத்தரை நோக்கி வந்தாள்.. புத்தரும் நேரே சென்றவண்ணம் இருந்தார். அந்த பெண்ணின் கண்களில் நீர்விட ஆரம்பித்தார். கைகள் அதுவாக கூப்பிநின்றன.

அந்த அம்மையாரின் அருகில் வந்துநின்றார் புத்தர்.
¨நலமா..¨ என்றார் அந்த பெண்.
¨நலம் யசோதா..¨ என்றார் புத்தர்.
¨ஒரு கேள்வி கேட்கலாமா..?¨ என்றாள் யசோதா.
¨எங்கெங்கோ காடுமலைகள் சுற்றி திரிந்து அடைந்த ஒன்றை... இந்த  அரண்மனையிலேயே
அடைந்திருக்க முடியாதா..?¨ என்றார்.
புத்தர் வாயெடுத்தார்... ஆனால் சொல்வரவில்லை. முயன்றார். ஆனால் முடியவில்லை.
இப்போதுதான் ஆனந்தர் புத்தர் முதல்முறையாக தடுமாறுவதை பார்க்கிறார்.

எதுவும் பேசாமல் புத்தர் மெளனமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றார். அனந்தருக்கோ ஆச்சரியம்.. புத்தரிடம் கேட்டார்.. ஏன் தடுமாறினீர்கள் புத்தரே..? புத்தர் சொன்னார்.. ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை என்று எனக்கு தெரியும்.. அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம்.
எங்கும் அடையலாம் என்று சொல்லி அவளுக்கு புரியவைக்கவும் முடியுமா..? அல்லது
அரண்மனையில் முடியாது என்று அவளிடம் பொய் சொல்லவும் முடியுமா..?என்றார் புத்தர்..

ஆனந்தர் தெளிவாய் புன்னகைத்தார்..புத்தருடன் பயணத்தை தொடர்ந்தார்..
நாமும் இவர்களோ தொடர்வோமா..!

அன்புடன் தபோ.

dimanche 18 septembre 2011

கண்ணனின் கேள்வி..?

துவாரகையில் மாயதுயில் கொண்டிருந்தான் மாயக்கண்ணன்.. போருக்கு உதவி கேட்பதற்காக துரியோதனன் உள்ளே சென்று.. ஆணவத்தோடு போய் தலை பக்கமாக உள்ள ஆசனத்தில் அமர்ந்தான்.. அதன் பிறகு சற்று நேரத்தில் அர்ஜுனன்  வந்து பணிவோடு கண்ணனின் பாதத்தின் பக்கமாக கையை கட்டிகொண்டு நின்றான். தூங்கி கொண்டிருந்த கண்ணன் விழித்ததும்.. முதலில் அர்ஜுனனை பார்த்தார்.., பிறகு திரும்பி ஆசனத்தில் அமர்ந்திருந்த துரியோதனனை பார்த்தார்.. அவர்களுக்கு நல்வரவுகூறி.. வந்த காரணத்தை விசாரித்தார்.
                                    துரியோதனன்  நானே முதல் வந்தேன் போருக்கு உங்களிடம் உதவி கேட்டு வந்தேன் என்றான். அதற்கு கண்ணன் நீ முதலில் வந்தாய் என்றாலும் நான் முதலில் அர்ஜுனனை பார்த்தாலும் வயதில் சிறியவர்களானவரின் விருப்பதை பூர்த்தி செய்வதே என் கடமை.. அதனால் முதலில்  அர்ஜுனனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.

அர்ஜுனா.. என்போன்ற சக்தி கொண்ட படைவீரர்கள் எண்ணிலடங்காதவர்கள் என்னிடம் இருக்கிறார்கள் அவர்களை கேட்கலாம்..  அல்லது ஒரு ஆயுதம் ஏந்தாமல் யுத்தம் புரியாத என்னையும் கேட்கலாம். எவை வேணும் என்றார் கண்ணன். அர்ஜுனன் சற்றும் தயங்காமல் "கண்ணா.. நீ வந்தாலே எனக்கு போதும்.. சாரதியாக எனக்கு வழிகாட்டுங்கள் கண்ணா.." என்றான். துரியோதனன் மகிழ்ச்சியோடு படைகளை பெற்று சென்றான். கண்ணனை மட்டும் கேட்ட அர்ஜுனனே கீதையும் பெற்று போரிலும் வென்றான்..

                       அதெல்லாம் சரி.. எப்பவோ நடந்த இந்த சம்பவம் இப்போ ஏன் என்று கேட்கிறீங்க.. என்ன அவசரம்.. சொல்லுறேன்.. அன்று அர்ஜுனன் முன் வைத்த கேள்வியைதான் இன்றும் எங்கள் முன் வைக்கிறான்.. நாமோ.. அவன் படையல்களை விரும்பி துரியோதனனை போல் தோல்வியை தழுவி விட்டு கடவுளை திட்டவே தயார்.. அந்த அர்ஜுனன் போல் கண்ணன் பாதமே சரணமடைந்து.. வெற்றி கொள்ள நாம் தாயாராக இல்லை... என்ன  நான் சொல்வது சரி தானே....?

samedi 17 septembre 2011

கெளதமர் சிந்தனை

ஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் முதன்மையானவன். - கெளதம புத்தர்