vendredi 30 mars 2012

பெருந் துறவு.9


 பூரண ஞானம் அடைதல்.

                  கடுந்தவ முறையால் துன்பங்களை அனுபவித்த கெளதமர் அப்போது எண்ணினார், தவசிகளும் பிராமணர்களும் அனுபவித்த வேதனைகளைவிட எனக்கு ஏற்பட்ட வேதனைகள் அதிகமாகவே இருக்க வேண்டும். ஆயினும் இத்தகைய கொடூரமான வழியிலும், அழியும் வாழ்வுக்கு மேற்பட்ட உண்மையான மெய்ஞ்ஞானத்தையும், உள்ளொளியையும் நான் பெறமுடியவில்லை. மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு இதைதவிர வேறு வழி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.


           அப்போது தம்முடைய சிறுவயதிலே நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. கபிலவாஸ்துவில் அவர் தந்தை பரிவாரங்களோடு பொன் ஏர் கட்டி உழுதுகொண்டிருக்கையில், அவர் நாவல் மரத்தடியில் தனியே தியானத்தில் அமர்ந்ததை இப்போது எண்ணி பார்த்தார். அந்த சமயத்தில் அறிவு தெளிவாக இருந்தது. உடலும் களைப்பின்றி ஊக்கமாக இருந்தது. இந்த கடும்தவத்தால் உடலும் உள்ளமும் தளர்ந்து போவதால் அற்ப ஆகாரமேனும் உட்கொள்ள வேண்டியது அவசியம் என்று தோன்றியது. கடும்தவத்தை கைவிட வேண்டும் என்றும் அரிசி கஞ்சியேனும் அருந்த வேண்டும் என்று தீர்மானித்தார்.


       வீணையின் தந்திகள் அதிகமாக முறுக்கேறினால் அறுந்து போகும், அதிகமாக தளர்ந்திருந்தில் அவற்றில் இசை பிறக்காது. ஆதலால் நடுநிலையில் வைத்திருக்க வேண்டும். என்பதுபோல், உடலாகிய வீணையையும் நிதான நிலையில் வைத்துக் கொண்டாலே அறிவாகிய இன்னிசை பிறக்கும் என்பது அவருக்கு தெளிவாகிவிட்டது. இந்த தெளிவே பிற்காலத்தில் அவருடைய பெளத்த தருமத்திற்கு அடிப்படை தத்துவமாக அமைந்தது.


      மெல்ல நடந்து அவர் நைரஞ்சரை நதியை அடைந்து நீரில் குளித்தார். ஆனால் உடல் நைந்து துவண்டிருந்தால், அவர் நீரைவிட்டு வெளியே கரையேற முடியவில்லை. அங்கிருந்த மரக்கொப்புகளைப் பிடித்துக் கொண்டு ஒருவாறு கரையேறினார். பின்பு பக்கத்திலிருந்த ஒர் அரச மரத்தடிக்கு சென்று அங்கே சிறிது நேரம் வீற்றிருந்தார்.


     அந்த நேரத்தில் அழகும் குணமும் ஒருங்கே அமைந்த நந்தபாலா என்ற சுஜாதை, ஆனந்தத்தோடும், ஆச்சரியத்தோடும் அவ்விடத்திற்கு வந்து அமலரைக் கண்டாள். ஒரு கையால் தன் கையால் தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ஒரு பொற் கிண்ணத்தில் பாலில் வெந்த பொங்கலை ஏந்திக் கொண்டிருந்தாள். மரத்தின் அடியில்  பணிப்பெண் ஒருத்தி களம் மெழுகிக் கோலமிட்டு வைத்திருந்தாள்.


   சுஜாதை என்ற சுகுண சுந்தரி அருகேயிருந்த சேனானி கிராமத்துத் தலைவரின் மனைவி. செல்வமும், சிறப்பும் பெற்று அவ்விருவரும் இல்வாழ்க்கை நடத்தி வருகையில், எளிமையும், பொறுமையும், இரக்கமுமுடைய அம்மாதரசி தனக்குக் குழந்தையில்லையே என்று கவலையடைந்து, பல தெய்வங்களுக்கும் நேர்ந்து கொண்டாள். ஆண் குழந்தை பிறந்தால் தங்கக் கிண்ணத்தில் பாலமுது படைத்து வணங்குவதாக அருகேயிருந்த காட்டின் தெய்வத்தையும் வேண்டிக் கொண்டாள். அவளுக்கு பொற்சிலை போன்ற புத்திரன் பிறந்து மூன்று மாதமாயிற்று.  முன் நேர்ந்த படியே இனிய உணவு சமைத்து காட்டு தெய்வத்திற்கு படைக்க குழந்தையுடன் புறப்பட்டாள். அவளது பணிப்பெண் முன்னாலேயே வந்து இடத்தை சுத்தம் செய்கையில் மரத்தடியில் மெய்மறந்து அமர்ந்திருந்த மாதவரைக் கண்டு, அவர் முகத்தில் தோன்றிய சோதியில் மயங்கி, அங்கிருந்து ஓடிச்சென்று, சுஜாதையை எதிர்கொண்டு அழைத்து, வனத்தில் வாழும் தெய்வமே அருள் வடிவாக மரத்தடியில் அமர்ந்திருக்கிறது. என்று அதிசயத்தோடு கூவினாள். அதைக்கேட்டுத்தான் சுஜாதை ஆவலோடு ஓடிவந்தாள்.


   வந்தவள் வள்ளலைக் கண்டாள். கண்கள் குளிர்ந்து உள்ளமும் குளிர்ந்தாள் பகவன் இந்த இன்னமுதை அருந்தி அருள் செய்ய வேண்டும் என்று கூறி போர்ட் கிண்ணத்தை அவர் அடியில் வைத்து உள்ளம் குழைந்து வணங்கி நின்றாள் அன்பும் அறிவும் நிறைந்த அந்த அழகுச் செல்வி அருகேயிருந்து பார்த்து அகம் மகிழும் வண்ணம் அகளங்க மூர்த்தியும் அவள் படைத்த அமுதை அருந்தி இன்புற்றார் . வாடி இளைத்து அவர் வருந்திய களைப்பெல்லாம் மாறி விட்டது! ஊக்கமும் ஒளியும் தோன்றின அழகு பொலியும் திருவதனத்தோடு அவர் சுஜாதையை வாழ்த்தியருளினார்.  அவள் மார்போடு அணைத்திருந்த மதலையின் உச்சியில் கை வைத்து செல்வா நீ நெடுநாள் இன்புற்று வாழ்வாயாக என்று ஆசி கூறினார் அதன்பின் தாம் யார் என்பதையும் சுஜாதைக்கு விளக்கிக் கூறினார்.


         பிறகு அவர் அம்மங்கையின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு தெரிந்து கொண்டார் கோடி கோடியான இந்திய பெண்களைப் போலவே தானம் தருமம் முதலியவற்றை நம்பிக்கை கொண்டு கொலுநனையை தெய்வமாக வணங்கி தூய சிந்தனையுடன் வாழ்க்கையின் துயரங்களை மறந்து நன்மை செய்தார்க்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள் அவள் கதையை கேட்ட கௌதமர், "அறிவிற் பெரிய ஆசிரி யர்க்கும்                  அறிவு புகட்டும்நல் அறிவுடை யவள்நீ..!"  என்று பாராட்டிப் புகழ்ந்தார். 


            அவளை போன்ற மெல்லிய மலர்கள் நிழலிலேயே பூத்து மலர வேண்டும் என்றும், சத்தியத்தின் பேரொளி அவளை போன்ற இளந்தளிர்களை வாடச் செய்து விடும் என்றும் அவர் எண்ணினார். உன் எண்ணம் நிறைவேறியது போலவே விரைவிலே நானும் என் சித்தியை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்து விட்டது ! என் கருத்து நிறைவேற வேண்டும் என்று நீயும் என்னை வாழ்த்தி விட்டுச் செல்வாயாக என்று அவர் கேட்டுக் கொண்டார். அவளும் அவர் சிந்தையின் எண்ணம் சித்தியடையும் படி வாழ்த்திவிட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.


     (கௌதமருடைய வாழ்க்கையில் அவர் எண்பது ஆண்டுகள் உண்ட உணவுகளில் இரண்டு உணவுகளையே அவர் மிகவும் பாராட்டி போற்றி இருக்கிறார். அவ்விரண்டில் ஒன்று அன்று சுஜாதை அளித்த அமுதமாகும். அதன் பெருமை சொல்லுந் தரமன்று கௌதமர்  ஞானமடையும்முன் அருந்திய கடைசி உணவு அதுவேயாகும்.)

                                            தெளிந்த அறிவும் திடமான மனமும் பெற்று அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று அன்று பகரத் பொழுதைச் சால மரங்கள் அடர்ந்திருந்த ஒரு சோலையிலே கழித்துவிட்டு மாலை நேரத்தில் ஆற்றோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மற்றொரு பெரிய அரச மரத்தின் அடியை அடைந்தார். அந்த மரமே பணைஐந் தோங்கிய பாசிலைப் போதி என்றும் மகாபோதி என்றும் பின்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகப் புகழ் பெற்று வரும் அசுவத்த மரம். பசும்புல் படர்ந்திருந்த அதனடியில் அமர்ந்து கொண்டு கௌதமர் தமது முடிவான பெருந்தவத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அப்போது புல் அறுக்கும் சுவஸ்திகா ( பாலியில் சோத்தியா ) என்பவன் அவ்வழியாக வந்து அவரைச் சந்தித்து எட்டுக் கைப்பிடி அளவு புல்லை அவருக்கு அளித்தான். அவர் அப்புல்லை மரத்தடியில் பரப்பிக்கொண்டு அதன் மீது கிழக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார். 


     அவரோடு வாழ்ந்து வந்த ஐந்து தபசிகளும் அவர் தவத்தின் மூலம் காணும் உண்மையை தமக்கும் உரைத்தருளுவார் என்று அவரை நம்பிக்கொண்டு இருந்தனர் ஆனால் அவர் பட்டினித் தவத்தை முறித்து உணவு உண்டு விட்டார் என்பதை அறிந்தும், அவர்கள் மீது வெறுப்புற்று அவரைத் தனியே விட்டுவிட்டு வேறிடத்துக்கு போய் விட்டனர் .

மெய்யறிவு மனிதனுக்கு எட்டும்படி மிக அருகிலேயே உள்ளது. ஆயினும் அதை அடைய எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது. அவனாகப் படைத்துக்கொண்ட "தான்" என்னும் அகங்காரம் பெரும்பூதமாக வளர்ந்து அவனையே ஆட்கொண்டு விடுகின்றது. அதனால் ஆசைகள் அவனப் பற்றிக்கொள்கின்றன.


        இன்பம் வேண்டி அவன் துடிக்கிறான் அதனால் துன்பமே விளைகின்றது. மரணம் அவனுடைய தனித் தன்மையை அளித்து விடுகின்றது. ஆயினும் அவனுக்கு அமைதி இல்லை. உயிர் வாழும் ஆசை அவனை விட்டு அகலுவதில்லை.மீண்டும் தனித் தன்மை பெற்று அவன் புது பிறவிகளை மேற்கொள்கிறான்.

                   உலகில் பாவமும் துக்கமும் பரவி நிற்கின்றன. மக்கள் உண்மையைப் பார்க்கிலும் மயக்கமே மேல் என்று கருதி வழி தவறிச் செல்கின்றனர். பாவமே பார்வைக்கு இனியதாய்த் தெரிகின்றது. ஏதோ செயல் செயல் என்று அவர்கள் கருமங்களைச் செய்து கொண்டேயிருக்கின்றனர். அவர்களுடைய செயல்களும் அவர்கள் அடையும் இன்பங்களும் நீர்குமிழிகளாகவே இருக்கின்றன. குமிழிகள் உடைந்தவுடன் அவற்றினுள்ளே எதுவுமே இல்லை.


   கௌதம முனி ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்த பிறகும் அவர் கொண்ட குறிக்கோளை அடைய முடியவில்லை.  உடலை வருத்துதல் வெண் வேலை என்று அவர் பிறருக்கெல்லாம் போதனை செய்தும் கடைசியில் அதையும் செய்து பார்ப்போம் என்று தாமே தாமே தமது திருமேனியை வதைத்துக் கொண்டார்.


             அதன் முடிவில் ஒரு வேளை அவருக்கே சந்தேகம் எழுந்திருக்கும். கண் முன்பு கண்ட நாடு சுற்றம் எல்லாம் துறந்து காட்டில் கிடந்தது வாடியும் இலட்சியம் கைகூட வில்லை. அது எட்டாத தாரகையாய் மேலும் மேலும் உயரே தள்ளி போய்க் கொண்டேயிருந்தது. ஒருவேளை எரி நட்சத்திரத்தையே உண்மைத் தாரகையாக எண்ணினார கானலை நீர் என்று கருதி அதன் பின்னே அலைந்து கொண்டிருகின்றார அவர் யாத்திரை முடிவற்ற நீண்ட யாத்திரையாகவே இருந்தது அவர் மனதில் தோன்றிய இயப்படுகளை யாரோ அளவிட்டுரைக்க முடியும் அதில் நடந்த போராட்டங்களை யாரோ புனைந்துரைக்க முடியும். 

                ஆனால் அவர் கலங்கவில்லை அவர் சித்தம் தெளிவாக வேயிருந்தது. மன உறுதிதான் அவருடைய மாசற்ற நண்பனாக விளங்கியது. அரச மரத்தின் அடியில் அமரும் போதே அவர் உறுதியுடன் சபதம் செய்து கொண்டு விட்டார். எனது இலட்சியம் கைகூடும்வரை நான் பூமியில் இந்த இடத்தை விட்டு எழப்போவதில்லை!அந்த சூளுரை கேட்டு வன விலங்குகளும் பறவைகளும் வாயடங்கி அயர்ந்து விட்டன, காற்றில் ஆடிய மரங்களும் அசைவற்று அமைதியாக நிற்கின்றன வானத்தில் மட்டும் மகிழ்ச்சி ஒலிகள் எழுந்தன!

                 மக்களுக்கு ஆசையூட்டி மயக்கும் சீல விரோதியாகிய மாரன் சாக்கிய முனிவரின் கொடிய உறுதியைக் கண்டு கலக்கமடைந்தான்! அவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று விட்டல் பின்னர் அவர் உபதேசம் கேட்டு மக்கள் அனைவரும் நன்னெரிகளில் நின்றுவிடுவார். அதனால் அவனுக்கு வேலை இல்லாமல் போகும் ஆதலால் அவருடைய முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என்ற முடிவுடன் அவன் அரச மரத்தை அணுகி வந்தான்.


        மரணத்தைக் கண்டு அஞ்சும் சத்திரிய வீர எழுவாய் எழுவாய்! முக்தி வழியை கைவிட்டு எழுவாய் எழுந்து இவ்வுலகையும் இந்திரன் உலகையும் வெற்றி கொள்வாய்! ஆண்டியாக வாழ்தல் உன் உன்னத மரபுக்கே இழுக்காகும் குல தர்மத்தைக் கடைப்பிடித்தலே உன் கடன்! என்று முழங்கிக்கொண்டு அவன் முனிவர் முன்பு தோன்றினான்!  


கௌதமர் நிலையில் மாற்றம் காணாமையால் அவன் கையிலிருந்த மலர் அம்பினைத் தொடுத்து அவர் மீது எய்தான் அவர் அசையவில்லை.  


          அதன் பின்னர் அவன் தன் படையினங்களை அவர் மீது ஏவினான்! கரடிகள் திமிங்கலங்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டைகள், புலிகள், சிங்கங்கள், யானைகள், ஒற்றைக் கண்ணும் பல தலைகளும் உள்ள விலங்குகள், பல நிற அரக்கர்கள் முதலிய படையினங்கள் வனத்தில் வந்து சூழ்ந்து கொண்டு பயங்கரமாகக் கர்ஜனை செய்தன! வானம் இருண்டது திசைகள் கறுத்தன புயல் எழும்பிற்று அனால் பாறைகளையும் மரங்களையும் பறித்தெடுத்த அரக்கர்கள் அவர் மீது அவைகளை வீசமுடியாமல் கைகள் முடங்கி நின்றனர்! வானத்திலிருந்து அவர் மீது பொழியப்பட்ட அனற் கங்குகள் அரச மரத்தடியில் செந்தாமரை இதழ்கலாகச் சிதறிக் கிடந்தன! போதிசத்துவர் அவைகளையெல்லாம் குழந்தைகளின் விளையாட்டாக எண்ணிப் பார்த்துக்கொண்டு இருந்தார். காகங்களின் நடுவே கருடன் அமைதியோடு அமர்ந்திருத்தல் போல  அவர் விளங்கினார் .


     மாரனுடைய குமாரர்களான கலக்கம் செருகு கேளிக்கை ஆகிய மூவரும் அவனுடைய குமாரிகளான காமம் களிப்பு வேட்கை ஆகிய மூவரும் போதிசத்துவரை அசைக்க முடியவில்லை. கௌதமர் மாறனைப் பார்த்து மேரு மலையைக் காற்று அசைக்க முடிந்தாலும் நீ என்னை அசைக்க முடியாது நெருப்பு குளிரலாம் நீரின் நெகிழ்ச்சி குன்றலாம் பூமியே உருகி ஓடலாம். அனால் பல்லாண்டுகளாக பல பிறவிகளிலே தேடிய தவ வலிமையுள்ள நான் என் தீர்மானத்தைக் கைவிடப் போவதில்லை இரு கட்டைகளை வைத்துக் கடைந்து கொண்டேயிருப்பவன், நெருப்பைக் காண்பான் பூமியை அகழ்ந்து கொண்டே செல்பவன் கடைசியில் தண்ணீரைக் காண்பான்!


    வானத்திலேயிருந்து பூமழை பொழிந்தது அவர் உறுதியுள்ள முனிவர் விரைவிலே  சத்தியத்தைக் கண்டு அதன் ஒளியால் கதிரவனைப் போல உலகின் இருளைக் கடிவார் என்று தேவர்கள் ஆர்த்தனர் !


   மாரனுடைய போராட்டங்களெல்லாம் மனத்துள் நடக்கும் போராட்டங்களே..! காமம், குரோதம் முதலிய தீயகுனங்களோடுபோராடி வெற்றி கொள்வதையே இவை உருவகப் படுத்திக் கூறுகின்றன.  


      அன்று பூர்ணிமை புன்னகையுடன் விளங்கும் பூவைப் போன்று சந்திரன் வானத்திலிருந்து தண்ணொளி பரப்பிக்கொண்டிருந்தான்! அகிலமெங்கும் அமைதி பரவிக்கொண்டிருந்தது!  கௌதமர் ஆசைகளையும் பாசங்களையும் அறவே களைந்து விட்டு ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ச்சியும் கூடிய மனதுடன் முதலாவது தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஏற்பட்டஆனந்த உணர்ச்சியால் அவர் மன நிலை மாறவில்லை! 


பிறகு சிந்தனையும் ஆராய்ச்சியும் நிகழாமல் தடுத்து உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி ஆனந்த உணர்ச்சியோடு இரண்டாவது தியானத்தில் அமர்ந்தார்!


பூரண அமைதியுடன் விழிப்பு நிலையிலேயே இருந்து கொண்டு மூன்றாவது தியானத்தில் அமர்ந்து இருக்கையில் அவருக்கு பேரானந்த உணர்ச்சி ஏற்பட்டது!  


பழமை எல்லாம் மறந்து இன்ப துன்பங்களை எல்லாம் விளக்கி அமைதியோடும் விழிப்போடும் அவர் நான்காவது தியானத்தையும் அடைந்தார் !


அப்போது அவர் தமது முற்பிறப்புக்களைப் பற்றி அறிய முடிந்தது! ஒவ்வொரு பிறவியுலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் தெளிவாக தெரிந்தன! இரவின் முற்பகுதியிலேயே இவைகளை அவர் அறிந்து கொண்டார். அந்நிலையில் அஞ்ஞானம் தொலைந்து அறிவு துலங்கிற்று இருள் மறைந்து ஒளி விளங்கலாயிற்று. 


     அதன் பிறகு உயிர்கள் தோன்றி மறைவதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். நல்வினை தீவினைகளுக்கு தக்கபடி உயிர்கள் பின்னால் நன்மையையும் தீமையையும் அடைவதை அவர் கண்டார் ஞான திருஷ்டியால் அவருக்கு எல்லாம் விளக்கமாகத் தெரிந்தன இவையெல்லாம் நள்ளிரவிலே ஏற்பட்ட அநுபவங்கள் .


      பின்னர் பிறவிக்கு காரணமான குற்றங்களை நீக்கும் வழியைப் பற்றிச் சிந்தனை செய்தார். அப்போது பின் கண்ட நான்கு சார் சிறந்த வாய்மைகளும் அவருக்குத் தெளிவாக விளங்கின. துக்கம், துக்க உற்பத்தி ,துக்க நீக்கம், துக்க நீக்க வழி.


             இவ்வாறு அறிய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கெளதமருக்குப் புலனாகிக் கொண்டிருந்தன. திரைமேல் திரையான அறியாமைத் திரைகள் அற்றொழிந்தன. அவித்தையின் தோடு உடைந்து சிதறி கோடிக் கிரணங்களுடன் பொன் மயமான மெய்யரிவுச் சூரியன் அவர் அகத்திலே உதியமாகி விட்டான். அவர் இனி அறிய வேண்டியது எதுவுமில்லை அன்றிரவு பொழுது விடியும் முன்பே கௌதமர் போதியடைந்து புத்தராகி விட்டார்! அவர் திரு முகத்தில் பூரண ஞானம் பொலிந்து விளங்கிற்று. அவர் பவம் ஒழிந்த பகவராகி விட்டார். அகங்காரமற்ற தவ ராஜாவாகி விட்டார் அறமுணர்ந்த தரும ராஜாவாகி விட்டார் அவரே ததாகதர் .


          தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். தென்றல் இனிமையாக வீசிற்று மண்ணகமெல்லாம் மகிழ்ச்சியடைந்தது, தேவர்கள் நாகர்கள் அனைவரும் தத்தம் உலகிலிருந்து போதி மரத்தடியில் வந்து சினேந்திரரை வணங்கிச் சென்றனர். மாரன் ஒருவனே மனத்துயர் கொண்டான். 

                                                                                                (பெருந் துறவு தொடரும்)

பெருந் துறவு. 8


ஆறுஆண்டு கடுந்தவம்.

                    ஆலர காலமர் ஆச்சிரமத்தைகெளதமர் அடைந்ததும் அவரை அன்போடு வரவேற்றனர் ஆலர காலமரும் சீடர்கள்களும். பின்னர் காலமர் தமது தத்துவத்தை விளக்கினார். கெளதமரும் மிகவும் விரைவில் சித்தாங்களை கற்று அநுபவ பூர்வகமா அதன்படி நடக்க ஆரம்பித்தார்.


             காலாமர் கூறியதாவது, "ஐம்பொறிகளின் மூலங்களாகிய செயல்களையும், மனதின் செயலையும் உய்த்துணரும் நான் என்பது எது.. நான் இங்கு இருக்கிறேன் என்பது ஆன்மாவின் கூற்று. உன் உடல் ஆன்மா அன்று. ஆன்மாவின் உண்மையை உணராமல் முக்தியில்லை. அநுமானத்தால் ஆழ்ந்த ஆராட்சியில் இறங்கினால் உள்ளம் கலங்கி அவநம்பிக்கையே ஏற்ப்படும். ஆனால் ஆன்மாவை பரிசுத்தமாக்குவதன் மூலம் விடுதலைக்கு வழி கிடைக்கும். ஆசைகளை அகற்றி விட்டு, சடபொருளை உண்மையன்று என்பதை தெளிவாக அறிந்தால் கூட்டில் இருந்து தப்பும் பறவை போல, அகங்காரம் தன் தளைகளில் இருந்து விடுதலை தரும். இதுவே உண்மை முக்தி. ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களே இதை கற்று அறிய முடியும்..!" என்றார்.


              ஆனால் கெளதமருக்கு இந்த போதனையில் திருப்தி கிடைக்கவில்லை. "நான் என்ற அகங்காரத்தை அகற்றாததாலேயே மக்கள் பந்தங்களில் சிக்கியிருக்கின்றனர். நம் கருத்தில் நெருப்பில் இருந்து வெப்பத்தை பிரித்து காணலாம் ஆனால் நடைமுறையில் நெருப்பில் இருந்து வெப்பத்தை வேறுபடுத்த முடியாது. தாங்கள் குணங்களை பிரித்து விட்டுப் பொருளைத் தனியேவிட்டு விடலாம்..!" என்று கூறுகிறீர்கள்.


           "இந்த முடிவை ஆராய்ந்தால் உண்மை அப்படி இல்லை. நாம் ஸ்கந்தங்களின் சேர்க்கையாகவே இருக்கிறோம் அல்லவா..? மனித தூல, புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாகவே மனிதன் விளங்குகிறான். நான் இருக்கிறேன் என்னும் போதே மனிதரால் குறிக்கப் பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப் பொருளன்று, ஸ்கந்தங்களின் கூட்டுறவாளே அந்த அகங்காரம் தோன்றுகிறது. ஆன்மாவை தேடி அலைவதே தவறு. ஆரம்பம் தவறாக இருந்தால் வழியும் தவறாகவே இருக்கும்.!"


               "மேலும் அகங்காரம் நிலைத்திருக்கும் என்றால் என்றால் உண்மையான விடுதலையை பெறுவது எங்ஙனம். சுவர்க்கம் மத்தியம் பாதாளம் ஆகிய மூவுலகங்களில் எங்கேனும் அகங்காரம் புனர்ஜன்மம் எடுக்கும் என்றால், திரும்ப திரும்ப பிறப்பும் வாழ்க்கையுமாகவே இருக்கும். அகங்காரமும் பாவமுமாகிய வாழ்வில் சிக்குண்டுருப்போம். இது எப்படி முடிவான விடுதலையாகும்.!" என்று மறுத்து கூறினார்.


              காலாமர் அநுபவ பூர்வமாக எவ்வளவு அறிந்திருந்தாரோ அதே அளவு கெளதமரும் அறிந்துகொண்டார். அவர் மூலம் ஏழு சமாபத்திகளையே அறிந்து கொள்ள முடிந்தது. பிறகு குருவை அடைந்து, "காலாமரே.. தாங்கள் அறிந்து வைத்திருந்த சித்தாந்தத்தின் தன்மை இவ்வளவுதானா..?" என்று வினாவினார். "ஆம் இவ்வளவுதான்.. நான் அறிந்த சித்தாந்தந்தை நீர் அறிவீர், உமது சித்தாந்தந்தை நான் அறிவேன்.. ஆகவே இருவரும் நமது சீடர்களுக்கு குருவாக இருப்போம்..!" என்றார் காலாமர்.


             ஆனால் கெளதமர் அதற்கு இணங்க வில்லை. இந்த சித்தாந்தம் ஞானத்தை அளித்து, நிருவான முக்தியை செலுத்தவில்லை.வெறும் ஏழு சமாபத்திகளையே அளிக்கிறது.. என்று கருதி சத்தியத்தை நாடி வெளியேறிச் செல்ல விடை கொண்டார்.


                அடுத்தாற் போல் அவர் உருத்திரகர் முனிவரிடம் உபதேசம் கேட்டார். உருத்திரகரும் அன்போடு தமது உபதேசத்தை விளக்கி கூறினார். அவர் கருமத்தை வற்புறுத்தினார். ஏற்ற தாழ்வுகளுக்கும் செல்வநிலைகளுக்கும் விதிக்கும் அவரவர் கருமமே காரணம்.! என்றும், அவரவர் கருமத்திற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்படுகிறது.. ஆன்மா ஜென்மங்கள் எடுப்பது கருமத்தின் விளைவு..! என்றார்.


               கெளதமர் மறுபிறப்பு பற்றியும், கருமத்தை பற்றியும் சிந்தித்தார். "கருமவிதி மறுக்க முடியாதே, அகங்காரம் ஆன்மா பற்றிய கொள்கைக்கு அடிப்படையில்லை..!" என்று கருதினார். உருத்திரக ராமபுத்திரரிடம் எட்டாவது சமாபத்தியை மட்டும் உபதேசமாக பெற்று அவரிடமும் இருந்து விடை பெற்றார்.


         இறுதியில் ஆசிரியரிடம் உபதேசம் கேட்டாகி விட்டது ஆனாலும் திருப்தி இல்லை. இனி தவத்தின் வகைகளை கொண்டு தாமே இயன்றவரை சமாதியில் இருந்து மெய்யறிவு பெற முடிவு கொண்டார். மகதநாட்டின் நைரஞ்சல் நதிகரையை அடைந்தார். அது இராமணீயமான இடம். அங்கு உருவேலா வனத்தில் தமது ஆரணியத்தை தொடங்கினார். இதுவே கடும் தமது கடும் தவத்துக்கு ஏற்ற இடம் என்று முடிவு எடுத்தார். பிச்சை எடுப்பதுக்கும் அருகில் கிராமம் இருந்தது. இங்கே தான் ஆறு ஆண்டு கடும் தவம் செய்ய நேர்ந்தது.


               அப்போது அவரைபோல மெய்யறிவில் நாட்டம் கொண்டு ஐந்து தாபதர்கள் அங்கு வந்து அவரோடு சேந்தனர். அவர்கள் கெளண்டியந்ய குலபுத்திரர், தசபால காசியபவர், பாஷ்பர், அசுவஜித், பத்திரகர் என்பவர்கள். அந்த ஐவரோடும் சேர்ந்து பிச்சை மேற்கொண்டு கடும் தவத்தை மேற்கொண்டார் கெளதமர். இறுதியில் பிச்சை ஏற்காமல் காடுகளில் கிடைக்கும் தானியங்கள் முதலியவற்றோடு உண்டனர். பின்னர் புல், பசுவின் சாணத்தை கூட உணவாக உண்டனர். பின்பு பலநாள் பட்டினிக்கு ஒரு இலந்தை பழம் மட்டும் புசித்தனர்.

                உடைகள் விஷயத்தில், கெளதமர் கிடைத்தவைகளை எல்லாம் உடுத்த ஆரம்பித்தார். சணல் முதலியவற்றால் நெய்த உடைகளையும், பிணங்கள் மீது போர்த்திய துணிகளையும் குப்பை மேடுகளில் கண்செடுத்த துணிகளையும், மரவுரிகளையும், கிழிந்த மான் தோல்களையும், புற்களையும், தலை ரோமம், குதிரை மயிர், ஆந்தையின் இறகுகள் முதலியவற்றால் செய்த உடைகளையும் வெவ்வேறு காலங்களில் அவர் அணிந்து வந்தார்.


                          அவர் தலை ரோமங்களையும், தாடி ரோமங்களையும், கையாலேயே முளையோடு பறித்தெடுத்து விடுவது வழக்கம். பல நாட்களாக உட்காராமல் நின்று கொண்டேயிருந்து பழகினார். முட்களைப் பரப்பி அவற்றின் மீது படுத்துப் பழகினார். நாள்தோறும் மூன்று வேளை குளித்துத் தண்ணீர்க்குள்ளேயே நெடுநேரம் இருப்பதும் வழக்கமாயிற்று. உடலைப் பொருட்படுத்தாமல் வதைப்பதில் எத்தனை முறைகள் உண்டோ அத்தனையையும் அவர் செய்து பார்த்தார். மாதக்கணக்காக அவர் குளியாமலேயே இருந்தார். பிறர் அவ்வுதவியை செய்ய வேண்டும் என்று அவர் நாடவில்லை. உடலுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படினும் அவர் எப்பொழுதும் போல் கருணையை மட்டும் கைவிடவேயில்லை. ஈ, எறும்பு, புழு, பூச்சிகள், கூடத் தம்மால் துயருறாமல் இருப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.


               ஏகாந்தமாக இருக்க வேண்டும் என்று தோன்றிய காலங்களில் அவர் இரவும் பகலும் புதர்களுக்குள்ளே போய் மறைந்திருப்பது வழக்கம். பழக்கமில்லாதவர்கள் அந்தப் புதர்களைக் கண்டாலே மயிர்க் கூச்செறியும் என்று அவரே கூறியுள்ளார். புல்லறுக்கவும், மரம் வெட்டவும், மாடு மேய்க்கவும் வரக்கூடிய மனிதர்கள் தம்மைப் பார்த்து விடாமலும், தாம் அவர்களைப் பார்த்து விடாமலும் இருப்பதற்காகவும், அவர்கள் காலோசை கேட்டதுமே தொலை தூரங்களுக்கு ஓடிப் போய்விடுவார். கோடை காலத்தில் வெய்யிலிலே காய்ந்தும் குளிர், மழை காலங்களில் சிறந்த வெளியில் கிடந்தும், வெயிலால் உலர்ந்து, பனியால் வாடியும் அவர் உடலைச் சித்திரவதை செய்து கொண்டு இருந்தார்.


                                    சிலசமயங்களில் கெளதமர் மயானங்களினாலே பிணங்களின் எலும்புகளின் மீது படுத்து கொள்வார். அவ்வாறு இருக்கும் சமயங்களில் அவ்வழியாகச் செல்லும் ஆயர்கள் அவர்மீது உமிழ்ந்தும், களிமண்ணை வீசியும், அசுத்தப் படுத்திய தோடு, அவர் செவித்துளைகளில் வைக்கோற் குச்சிகளை நுழைத்து அவர் என்ன செய்கிறார் என்பது வழக்கம். ஆனால் கெளதமர் அவர்களுக்கு எதிராக ஒரு தீயசிந்தனை கூட எண்ணியது இல்லை. இவ்வாறு பின்னர் சாரீபுத்திரருக்கு கூறியிருக்கிறார்.


                         இன்னும் பயங்கரமான திட்டங்களையும் நிறைவேற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் முனைந்தார். மூச்சை அடக்கவும், உணவையே தீண்டாமல் விரதமிருக்கவும் மேற்கொண்டார். பற்களை இறுக்க கடித்து, மேல் வாயோடு நாவை அழுத்திக்கொண்டு, மனதிலே தீய எண்ணங்கள் தோன்றாமல், நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டு இருந்தார். பலமுள்ள ஒருவன் மெலிந்தவன் ஒருவனைத் தோள்களையும் தலைகளையும் பிடித்து கீழே தள்ளி அழுத்துவது போல், அவரும் இந்த முறையில் மனதோடு போராடிக்கொண்டு இருந்தார். எவ்வளவு வேதனையிலும் மனம் தளராது நின்றார்.


                               பின்னர் மூச்சை அடக்க பயிற்சி எடுத்தார். வாயாலும் நாசியாலும் மூச்சு வாங்கி விடுவதை அறவே நிறுத்தி விட்டார். காற்று வெளியேறுவதற்காக காதுகளின் வழியாக பெரிய இரச்சலுடன் கிளம்பி வந்தன. பின்னர் அறவே அவர் மூச்சை நிறுத்தினார். புலன்களை அடைத்ததால் உடலின் வாயு வெளியேற முடியாமல் ஒரேயடியாக மூலையைப் போய்த் தாக்க ஆரம்பித்தது. தலையில் தாங்க முடியாத வேதணை உண்டானது. மூச்சை அடக்கியதால் உடல் கொடிய எரிச்சலை அடைந்தது. அப்போதும் அவர் உறுதியை விட வில்லை.


                              பின்னர் சொற்ப ஆகாரத்தையும் நிறுத்தினார். அங்கள்கள் நாணல் குச்சிகளை போல் ஆகியது, முதுகெலும்பு முடிச்சு முடிச்சாக வெளியே தெரிந்தது. விலா எலும்புகள் இடிந்து போன கூரைகளாகியது. கண்கள் குழிவிழுந்தன. வயிற்றின் தோலை தொட்டால் முதுகெலும்பு தட்டுப்பட்டது. அவ்வாறு மெலிந்து போனார். எழுந்து நடக்க முற்பட்ட போது சுருண்டு விழுந்தார்..


          அப்போது தேவர்கள், சிலர் "துறவி கெளதமர் மாண்டு போனார்..!" என்றனர். சிலர், "இல்லை.. இறக்கவில்லை..!, இறக்கும் நிலை அடைந்து கொண்டு இருக்கிறார்..!" என்றனர். இன்னும் சிலர் "இது இறக்கும் நிலையல்ல.., இது அருகத்தின் நிலை இதுதான்..!" என்றனர்.


(பெருந் துறவு தொடரும்..)

samedi 3 mars 2012

பெருந் துறவு. 7


                           யாகம் தடுத்தலும் பிம்பிசாரின் வேண்டு கோளும்.


                            அடவி, மலை, ஆறுகளை எல்லாம் கடந்து இராஜகிருகநகரை அடைந்தார். பசிக்களை வாட்டியது. முதன் முதலாய் இராஜகிருக நகரில் பிச்சை எடுக்க சென்றார்.. திருவோட்டில் சேர்ந்த கதம்ப சோற்றுடன் அவர் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறத்தில் போய் உணவருந்த அமர்ந்தார். ஓட்டில் இருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போடுகிறார். வாய் குமட்டுகிறது. அரண்மனை அறுசுவை உணவு எங்கே.. கண்டவர் வீடுகளில் வாங்கிய கதம்ப சோறு எங்கே..? உணவு உள்ளே செல்ல மறுத்தது.. ஆனால் எம் பெருமான் வெளியே தள்ள மறுத்தார். உலகின் துன்பத்தை எல்லாம் ஒழித்துகட்ட வந்த உத்தமர் பிச்சை சோற்றுக்கு புறங்கொடுத்து ஒடுவாரா.. எப்படியோ உள்ளத்தை உரமேற்றி கொண்டு அவர் அதை உண்டார். 

                 அதன் இராஜகிருக நகரை அடுத்த இரத்தினகிரி என்ற குன்றில் சிறிது காலம் தங்கினார். இரத்தினகிரியின் சாரலிலே ஒரு நாள் முற்பகலில் கெளதமர் சோலைகளையும், அங்கே பாடித் திரிந்து கொண்டிருந்த பறவைகளையும் பார்த்துச் சிந்தனை செய்து கொண்டிருந்தார். "தாவரங்களும், பிராணிகளும் தங்களுக்கு அன்றன்று தேவையுள்ளவைகளை வெறுக்காமலும், அடைதற்கரிய பேறுகளை எண்ணிக்கொண்டு அவதிப்படாமலும் இருப்பதன் காரணம் என்ன..?  மானிடன் மட்டும் கைக்கு எட்டிய வாழ்வையும் கைவிட்டு காணாத ஒன்றுக்காகக் கவலை கொண்டு தன்னையே சித்திரவதை செய்து கொண்டிருப்பது ஏன்..? மனிதன் பகுத்தறிவைப் பெற்று ஜீவராசிகளுக்குத் தலைமை வகித்திருக்கிறான். தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் வதைத்து, உதிரத்தில் தோய்ந்து வளர்ந்த தன் அறிவினால் அவன் தன்னையும் வதைத்துக் கொள்ளுகிறான்..!" என்று கருதினார் கொதமர். 


          அவர் சிந்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில் கொடூரமாகக் காய்ந்துகொண்டிருக்கும் வெய்யிலிலே, மலைகளிலிருந்து ஓர் ஆட்டுமந்தை வந்துகொண்டிருந்தது. இருநூறு ஆடுகள் இருக்கும் அவைகள் புதர்களை நாடி ஓடாமல் இரண்டு ஆயர்கள் அவைகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். வழக்கமாக ஆடுகள் மாலை நேரத்திலேயே மலையிலிருந்து திரும்புவது வழக்கம். நண்பகலிலே அவைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்ட கெளதமர், அவைகளை எங்கு செல்கின்றன என்று ஆயர்களிடம் கேட்டார்.


          பிம்பிசார மன்னர் அன்று நடத்தும் வேள்விக்காக அந்த ஆடுகளையெல்லாம் அழைத்துச் செல்வதாக ஆயர்கள் கூறினர்.  அன்று மாலையோடு யாகம் முடிவடைவதாயும் தெரிவித்தனர்.


          அஜமேதம், அசுவமேதம், நரமேதம் முதலிய எத்தனை வித யாகங்கள், மனிதன் தான் செய்த பாவங்களையெல்லாம் வேறு ஜீவன்களின் மீது ஏற்றி, அவைகளின் தலைகளை வெட்டித் தெய்வங்களுக்குப் பலியளித்தால், தன் பாவங்கள் ஒளிந்து பேரின்பம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான். அந்தக் காலத்திலே அவரவர் பாவ புண்ணியங்களை அவரவர் அனுபவித்து தீர வேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்த கெளதமர், வாயில்லாப் பிராணிகளான ஆடுகளைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினார். அவைகளை தங்கள் தலைகளைக் கொலை வாளுக்கு இரையாகக் கொடுப்பதற்காகக் காட்டு வழியாக விரைந்து சென்று கொண்டிருந்தன. உயிரில் அவைகளுக்கு எவ்வளவு ஆசை இருந்தது. சாலையின் இருபுறத்தும் இருந்த செடிகளையும் தளைகளையும் உண்டு பசியாறுவதற்கு அவைகளுக்கு எவ்வளவு ஆசையிருந்தது. அவைகளுக்குள்ளே பெரிய ஆடுகள் குட்டிகளை அழைத்துச் செல்லும் அன்புக்கு ஓர் அவதியில்லாதிருந்தது.


           ஆட்டு மந்தைக்குப் பின்னால் ஒரு பெண் ஆடு ஒரு குட்டியுடன் மெல்ல மெல்ல் வந்து கொண்டிருந்தது. அதனுடைய மற்றொரு குட்டி கால் நொண்டியாயிருந்ததால் வெய்யிலில் நடக்க முடியாமல் தள்ளாடி வந்து கொண்டிருந்தது. தாய் ஆடு அதைவிட்டுப் பிரிய மனமின்றித் தயங்கித் தயங்கித் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தது. கருணையின் நிலையமாகிய கெளதமர்அந்தக் காட்சியைக் கண்டதும், ஓடிச்சென்று நொண்டிக் குட்டியைப் பரிவோடு தூக்கித் தமது தோளிலே வைத்துக்கொண்டார். நானும் வேள்வி காண வருகிறேன், என்று கூறி, அவரும் ஆயர்களோடு தலை நகருக்குப் புறப்பட்டார். 

                                  "மனேந்தும் ஈசன் உளம் நாண, ஆட்டின்       
                                  மறியேந்து பெருங்கணைப் புனித வள்ளல்" 

        மாலை நேரத்திலே மாநகரின் திருவாயிலை அடைந்தார். கருணையே உருவெடுத்துக் கால், கரங்களோடு நடப்பது போல் விளங்கிய அருளரசரை கண்ட மக்கள், அவர் முகப் பொலிவையும், தவக்கோலத்தையும் கண்டு சொக்கிப் போய்விட்டனர். வீதிகளையெல்லாம் தாண்டிச் சென்று ஐயனும் ஆயர்களும் வேள்விச் சாலையை அடைந்தார்கள்.                  வேள்விச் சாலையின் நடுவே மகத நாட்டு மன்னர் நின்று கொண்டிருந்தார்.  அங்கு அக்னி வளர்த்துக் கொண்டிருந்தனர். தரையிலே முன்னால் வெட்டிய ஆடுகளின் உதிரம் பாய்ந்து கொண்டிருந்தது. மற்றொரு புறத்திலே யாகத் தறியிலே ஒரு வெள்ளாடு கட்டப் பட்டிருந்தது. தீட்சிதர் ஒருவர் வாளேந்தி அதை வெட்டப் போகும் தருணத்திலே, கெளதமர் ஓடிச்சென்று, அக்கொலையினை தடுத்து, அரசரைப் பார்த்து, "ஆட்டினைக் கொல்லாது அருள் புரிய வேண்டும்." என்று கேட்டார். ஆட்டின் காலிலும், வாலிலும், கண்டத்திலும் கட்டியிறுக்கியிருந்த கட்டுக்களை அவிழ்த்து, அதை அவரே விடுதலை செய்துவிட்டார். வேள்வித் தீயின் ஒளியைப் பார்க்கிலும் விரிந்த சோதியோடு விளங்கிய அவர் திருமுகத்தை நோக்கிய வண்ணம் யாவரும் திடுக்கிட்டு நின்றனர்.


      பாவத்தைத் தொலைப்பதற்காகக் கொலையுடன் கூடிய யாகம் செய்தல் புதிய பாவத்தையே விளைவிக்கும். பிராணிகளின் உதிரத்தால் எவனும் தன்னைப் பரிசுத்தமாக்க முடியாது.தேவர்கள் நல்லவராயின், கொலையுடன் கூடிய ஊனுடைய வேள்வியால் உள்ளம் களிக்க மாட்டார்கள். அவர்கள் தீயோராயின், அத்தீயோரிடமிருந்து நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று வினவினர் விமலர்.


                                                  "வாழும் உயிரினை வாங்கிவிடல் இந்த               
                                                   மண்ணில் எவர்க்கும் எளிதாகும்,         
                                                   வீழும் உடலை எழுப்புதலோ ஒரு             
                                                   வேந்தன் நினைக்கினும் ஆகாதையா,         
                                                   பிள்ளையைக் கொன்று கறி சமைத்தீர்..!"


          உயிர்க்கொலையை தவிர்த்து உள்ளத்தால் ஊனமில் வேள்வியை நடத்தி வரும்படி மன்னர்க்கும் மற்றையோர்க்கும் பலவாறு உபதேசித்தார். யாகங்களால் மன்னர்க்குப் பெருமை என்றும், மறையோர்க்குப் புண்ணியம் என்றும், பலியிடப் பெறும் உயிர்களுக்குச் சொர்க்கம் என்றும் கூறுவர். பலியிடும் உயிர் உடனே சொர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியிட்டுச் சுவர்க்கத்திற்கு அனுப்பி விடலாமே,  அவரைவிடச் சிறந்த உயிர்தான் வேறு ஏது ஆதலால் உயிர்ப்பலி வேண்டாம். அவசியமானால் என்னையே பலியிடுங்கள் ஏழை ஆட்டின் உயிரை வாங்க வேண்டாம், என்று அவர் முரசு முழங்கியது போல் முழக்கம் செய்தார்.


        அருகே வந்து பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த மகத மன்னர், களங்கமற்ற மூர்த்தியைக் கண்குளிரக் கண்டு வணங்கி, செய்த பிழையைப் பொறுத்தருளும் படி வேண்டினார். இனி நாடெங்கிலும் கொலை தவிர்க்கும் படி நாளையே பறையறைவிப்பேன்.  என்று சபதமும் கொண்டார்.  வேதியர்களும் ஓம குண்டத்தீயை அவித்து விட்டு வேள்வியை நிறுத்திக் கொண்டனர்.


     பின்னர் உடல் நலம் பற்றி விசாரித்தார். கெளதமரும் இனிய முகத்துடன், தம் உள்ளமும் உடலும் செம்மை யுற்றிருப்பதாக மறுமொழி கூறினார். பின்னர் மன்னர் அவருக்குச் செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் செய்து அவரை தம்மோடு இருக்கும்படி வேண்டினார். ஆனால் கெளதம பிக்கு, தாம் வந்த காரியம் முடிந்ததென்று சொல்லிவிட்டு, மீண்டும் தன் குகை நோக்கி சென்றுவிட்டார். 


          சிரேணிய மன்னர் சித்தார்த்தருடைய துறவை எண்ணிக் கவலைப்பட்டார். இளம் வயதிலேயே மணிமுடி துறந்து, காவியுடுத்து முண்டிதமான தலையுடன் ஒளியுடன் விளங்கிய உருவத்தை அவர் சிறிது நேரம் கூட மறக்க முடியவில்லை. மறுநாட்காலை, அவர் மந்திர மறையோர்களையும், மந்திரிகளையும் அழைத்துக் கொண்டு கெளதமரை த் தரிசித்து வருவதற்காக வனத்தை நோக்கிப் புறப்பட்டார். 


       மலையின் மீது ஒரு மரத்தின் நிழலில் அசலம் போல அசைவில்லாமல் அமர்ந்திருந்த கொதமரை கண்டு அவர் வணங்கி, தம் உள்ளத்தில் இருந்ததை கூற தொடங்கினார். தங்களின் குலபெருமையை நன்கு நான் அறிவேன். இளமையும் எழிலும் கொண்ட தாங்கள் துறவு பூண்டது வியப்பாகவே இருக்கிறது. பலவீடுகளில் எப்படி பிச்சை எடுத்து உண்ண முடிகிறது. 


கெளதமர் சொன்னார்.., "முதலில் எனக்கும் கடினமாகவே இருந்தது இப்போது அவ்வாறு இல்லை, காவி உடையில் மனிதன் உடைக்கும் மனிதனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து விட்டேன். களங்கமற்ற மனம் இருந்தால் உண்ணும் உணவில் என்ன இருக்கிறது.கொலை களவாக எடுக்கும் தேனைவிட ஆற்று நீர் தித்திப்பாக இருக்கிறது எனக்கு.!"


    பிம்பசாரர் தொடர்ந்தார்.., "செங்கோல் பிடிக்க வேண்டிய தங்களின் கரங்களில் பிச்சை பாத்திரம் ஏந்தலாமா.. அண்டினோர்க்கு அபயமளிக்கு கரங்களுக்கு இது பொருத்தமில்லை.. தந்தையின் இராட்சியம் விரும்பா விட்டால் எனது இராட்சியத்தில் பாதியை ஆழலாம். தாங்கள் மனமுவந்து சம்மதிக்க வேண்டும். இன்பம், செல்வம், அறம் முண்றுமே அனுபவப்பவரே இளமை மனிதர். மூவுலகையும் வெற்றி கொண்டு ஆழுங்கள். முதுமைக்கே ஏற்றது துறவு. "


  மகத மன்னனின் அன்பு மொழிக்கு மறுமொழி கூறினார் கெளதமர், "விடங்கொண்ட நாகத்தைவிடவும்.. வானிலிருந்து விழும் இடியை விடவும் இந்த உலக இன்பங்களை கண்டு அஞ்சுகிறேன்.. இவை கானல் நீரே.. விறகிட்ட தீயைபோல் அதற்கு ஒய்வும் இல்லை அழிவும் இல்லை.. அதற்கு அடிமைப் பட்டவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் இல்லை. மயக்கத்தில் இந்த வலையில் வீழ்வதை அறிந்த பின் மீண்டும் எவ்வாறு அதை நாடுவேன்.. வையத்தை ஆண்டாலும் கடலுக்கு அப்பால் வேறு கண்டம் இருக்குமோ என்று அசைபடும் மனிதர் உள்ளம். அந்த ஆசையில் என்றுமே அமைதி இல்லை. ஆதலால் இன்பங்கள் என்ற கொடியவரோடு நான் உறவாட முடியாது."  


     "இராட்சியம் இல்லாமலே எனக்கு திருப்தி ஏற்பட்டு உள்ளது. திருப்தி உள்ள இடத்திலேயே பேதங்கள் மறையும். பிச்சையெடுத்து வாழும் துறவியை கண்டு இரங்கலாகாது. அவனே மரணத்தை வெல்லும் பாக்கியசாலி.. இவ்வுலகில் இணையற்ற ஆனந்தத்தையும் சாந்தியையும் அனுபவிப்பவன் அவனே. பெரும் செல்வத்தின் நடுவிலும் ஆசை அடங்காது சஞ்சலப்படுபவனுக்கே இரங்க வேண்டும். ஆதலால் இந்திர லோகத்தை ஆழும் பேற்றைகூட என்னால் ஏற்க முடியாது. பிறப்பும் இறப்பும் அற்ற உலகை அடைவதே மகோன்னதமான இலட்சியம். மரணம் எப்போது வரும் என்பதை அறியாத நிலையில் முதுமை வரட்டும் என்று காத்திருத்தல் ஆகாது."  


      "சத்தியத்தை நாடி ஞான குருவான ஆலர காலாமரை நான் சந்திக்க வேண்டும். அவரை தேடியே இங்கு வந்தேன், இன்றே புறப்பட வேண்டும். தங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்." என்று கூறிமுடித்தார். பிம்பசாரர் எழுந்து நின்று அவரை கைகூப்பி வணங்கி, "தங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். விரும்பிய சித்தியெல்லாம் பெற்ற பின், தாங்கள் என்னை மறவாது மறுபடி என் நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்.. என்று வேண்டிக்கொண்டார். கெளதமரும் அவ்வாறே வருவதாக உறுதிகூறி, அங்கிருந்து புறப்பட்டார். 


   ஆச்சிரமத்தில் ஆலர காலரும் சீடர்களும் கெளதமர் வருவதை கண்டு வணக்கம் கூறி அன்புடன் வரவேற்றனர்.  

                                                                                                (பெருந்துறவு தொடரும்..)

அன்புடன் தபோ.

பெருந் துறவு. 6


                                                             கபிலை சோகமும் சித்தார்த்தரின் உறுதியும்.


               சித்தார்த்தர் மெதுவாக நடந்து சென்று பார்க்கவரின் ஆச்சிரமத்தை அடைந்தார். அங்கு உள்ள தவமுனிவர்களை வணங்கினார். காவியுடையிலும் அவரது கம்பீரத்தையும் முகப் பொலிவையும் கண்டு தாபதர் எல்லோரும் அன்புடன் வரவேற்றனர். தாம் தவம் புரிய வேண்டும் என்பதால் பேச்சை ஆரம்பித்தார். "இன்று தான் என் வாழ்கையில் தவப்பள்ளியை காண்கிறேன். தவமுறை எதுவும் எனக்கு தெரியாததால் அதைபற்றி அடியேனுக்கு விபரமாக எடுத்துரைக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டார்.


                 வேதியராகிய பார்க்கவர் விளக்கிக் கூறினார். "உழுது பயிரிட்டு விளையும் உணவை நாம் உண்பது இல்லை, காட்டில் தாமாக விளையும் காய் கனிகள், தானியங்கள், கிழங்குளையே உண்போம். சிலர் புல்லை மட்டும் உண்கிறார்கள், சிலர் பாம்பை போல் காற்றை மட்டுமே சுவாசிக்கிறார்கள், சிலர் நீரிலும் நெருப்பிலும் நின்று தவம் புரிகிறார்கள். இப்படி உடலுக்கு கடுமையான துன்பங்களை கொடுப்பதனால் சுவர்க்கத்தை அடையலாம் என்று நம்புவதாக!" என்று பார்க்கவர் கூறினார்.


    ஆனால் சித்தார்த்தர் சிந்தித்தார். "இந்த தாபதர்கள் அடைவது அற்பமான சுவர்க்கமே.. அங்கும் மாறுதல்கள் இருக்கும். உலகவாழ்வில் ஆசை கொண்டவர்களுக்கும், சுவர்க்க ஆசை கொண்டவர்களுக்கும் என்ன பேதம். துன்பத்தால் புண்ணியம் என்றால் இன்பத்தை தேடுவதால் ஏன் புண்ணியமாகாது.!" என்று அவரது சிந்தனைகள் சிலநாட்கள் சென்றது, தவமுறைகளை அறிந்தபின் அங்கிருந்து புறப்பட முடிவெடுத்தார்.


                            அவர் அங்கிருந்து பிரிந்து செல்வதை விரும்பாது தங்களுடனே இருக்கும் படி தவசிகள் வேண்டி கொண்டனர். அதற்கு சித்தார்த்தர் "உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால் உங்கள் குறிக்கோள் சுவர்க்கம். எனது குறிக்கோள் பிறப்பை அறுத்தல். இரண்டும் வெவ்வேறு இலட்சியங்கள். அதனால் என் இலட்சியத்தை அடைய வெளியே செல்ல வேண்டும். எனக்கு விடை அழியுங்கள்..!" என்று வேண்டி கொண்டார். அப்போது அங்கிருந்த வேதியர்களில் ஒருவர் சித்தார்த்தரின் குறிகோளை பாராட்டி விந்திய கோஷ்தானத்தில் ஆலார காலாமரிடம் போய் உபதேசம் பெறுமாறு ஆலோசனை கூறிவிட்டு, ஆனால் அவரின் தத்துவங்களையும் கடந்து மெய்ஞானத்தை பெற்று உலகின் ஞானதேகராக விளங்க போகிறீர் என்று வாழ்த்தினார். "நல்லது அவ்வாறே செய்கிறேன்!" என்று கூறி அனைவரிடமும் விடைபெற்று கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் சித்தார்த்தர்.


                 மகதநாட்டு பாண்டார மலைக்குகையில் தவம்செய்யும் ஆலார காலாமரை சந்திப்பதற்காக, காட்டுவழியாக நடந்து களைத்து ஒரு மரத்தடியின் நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க உட்கார்ந்தார். அப்போது சித்தார்த்தரை தேடி வந்த அரசருடைய குலக்குருவும், மந்திரியும் அவரை கண்டு வணக்கம் கூறி அவர் அருகே அமர்ந்தனர். அவர்கள் சித்தார்த்தரை எப்படியாவது போராடி திரும்ப அரண்மனை அழைத்து வருவதாக சுத்தோதனருக்கு வாக்கு கொடுத்துவிட்டு வந்திருந்தனர். கபிலநகரின் சோகத்தை கூறலாயினர்.


                  சந்தகன் குதிரையோடு தலைநகருக்கு திரும்பிய போது நகர மக்களும் அரண்மனை ஆடவர், பெண்கள் அவனை பழித்து வெறுத்து பேசினர். அவன் அழுது கொண்டே சமாதானம் சொன்னான். ஆனால் யசோதரா உள்ளம் குமுறி கோபத்தால் "கொடியவனே என் நாதனை எங்கே விட்டு வந்தாய், இரக்கம் இன்றி எனக்கு துரோகம் செய்து அழைத்துப் போனதுக்கும் உன் கண்ணீருக்கும் என் சம்பந்தம்.. உன் செயலால் அரச வம்சத்திற்கே தாங்க முடியாத துயரம் வந்து விட்டது.!" என்று அழுது புலம்பினாள்.


                  சந்தகன் தேவியின் துயரம் தாங்காது நிகழ்ந்ததை விவரித்தான். "எல்லாம் தேவர்களின் செயல்..! என் செயலுக்கும் நான் பெறுப்பல்லை. என்னை செய்யும் படியாக தூண்டிய ஏதோ ஒரு கருவியாக நான் இருந்தேன். அரண்மனை கதவுகளையும், கோட்டை கதவுகளையும் திறந்து விட்டு அடைத்தது யார்..? கண்டகத்தின் குளம்புகளின் ஒசை கேட்காது தரையில் தேயாமல் ஓடும்படி செய்தது யார்..? ஆயிரக்கணக்கான காவலர் ஒரே சமயத்தில் உறங்கியது எப்படி..? என்னையும் கண்டகத்தையும் குறைகூறுவது வீண்பழியே ஆகும்..!" என்றான்.


    பச்சைக் குழந்தையையும் பரிதவிக்க விட்டு போனவர் மனம் இரும்பாகவே இருக்க வேண்டுமென தேவி கதறினாள். கன்றை பிரிந்த பசுவைப் போல் தாய் கெளதமி துடித்தாள். சுத்தோதனர் தனது சோகத்தை எல்லாம் அடக்கி கொண்டு தன் மைந்தன் மீண்டும் வர வேண்டுமென தவங்கிடந்தார். சந்தகன் தனியே வந்ததையும் மைந்தன் வனம் புகுந்ததையும் அறிந்து சித்தம் தடுமாற ஆரம்பித்தார். 


       குருவும் மந்திரியும் இத்தனையும் கூறி சில நீதிகளையும் சித்தார்த்தருக்கு விளக்கினர். "சிறிது காலம் ஆட்சி செய்துவிட்டு சாஸ்திரப்படி பின்னால் வனத்தை அடையலாம். அரசர் முதல் மக்கள் கடன் ஆற்ற வேண்டும், அரண்மனையிலேயே புலன் அடக்கத்துடன் உள்ளத்துறவு கொள்வதே சிறந்தது..!" என்று குலகுரு வற்புறுத்தினார். "நீ வெண் கொற்றக் குடையுடன் உன்னை ஒருமுறை கண்டு, அந்த மகிழ்ச்சியோடு நான் துறவு பூண்டு வனம் செல்ல வேண்டும்..!" என்று மன்னர் உனக்கு செய்தி அனுப்பியுள்ளார் என்றும் கூறினர்.


        சித்தார்த்தர் அரசரின் சோகத்திற்கும் மக்களின் துக்கத்துக்கும் நான் காரணம் இல்லை என்பதை விளக்கினார். "அறியாமையின் மயக்கத்திலே துக்கம் தோன்றுகிறது. உலகவிஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களே காலத்தை கவனிக்க வேண்டும். பேரின்பமான விடுதலைக்கு எக்காலமும் நற்காலமே. மரணம் காலத்தின் மீது முழு ஆதிக்கம் பெற்றிருப்பதால் மரணத்தை ஒழித்தால்தான் காலமும் மறையும்..!"


                    "செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்திற்கு இருப்பிடம். புத்திமான்கள் அங்கே வசிக்க மாட்டார்கள். அரசாட்சியையும் புலன் இன்பங்களையும் நான் புறக்கணித்து விட்டேன். சாந்தி நிறைந்த இந்த வனங்களை விட்டு மீண்டும் அரண்மனைக்கு வந்து இரவு பகலாக பாவ மூட்டைகளை பெருக்க நான் விரும்பவில்லை. மேலும் சாக்கிய மரபில் வந்த நான் முன்வைத்த காலை பின்வாங்குவது ஏளனமான இழி செயலே. அகத்திலே பேரின்ப ஆசையை வைத்து கொண்டு அரண்மனையில் வேடதாரியாக நடிக்க முடியாது. தீப்பற்றி எரியும் வீட்டில் இருந்து தப்பிய நான் மீண்டும் எவ்வாறு புகுவேன்..!"


                      "பிறப்பு, முதுமை, இறப்பு ஆகிய தீமைகளைக் கண்டு அவைகளால் விளையும் துக்கத்கதில் இருந்து தப்புவதற்காகத் துறவியான நான், மீண்டும் எவ்வாறு அவையுடன் குலாவுவேன். அரண்மனையில் இருந்து கொண்டே முக்தி பெற முயல்வது முடியாத காரியம். விடுதலை சாந்தியிலேயே விளையும், அரசனாயிருத்தல் துயரத்தையும் பாவத்தையும் பெருக்கிக் கொள்வதிலே முடியும். இவ்வாறு இருக்கையில் நான் எப்படி நாட்டுக்கு திரும்ப முடியும்..!" என்றார் சித்தார்த்தர்.


        சித்தார்த்தரின் காரணங்கள் பொருத்தமாக இருந்தாலும் வந்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதால் குருவும் மந்திரியும் மேலும் சிலதத்துவ நூல்களை எடுத்துரைத்தனர். "ஈசுவரனிடத்தில் இருந்தே சிருஷ்டி ஏற்படுவதால், ஜீவான்மா என்ன முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. உலகத்தை இயங்க வைப்பவனே அந்த இயக்கம் நிற்க வேண்டியதையும் கவனித்துக் கொள்வான்." என்றும் மேலும் பல விளக்கங்களை கூறினர்.


 சித்தார்த்தர் முடிவாக உறுதியாக கூறினார். "உண்மையாக உள்ளது எது என்பதை பற்றி நான் பிறருடைய கூற்றுக்களை நம்பியிருக்க முடியாது. தவத்தினால் அதைப் பற்றி அறிய கூடிய அனைத்தையும் நானே அறிந்து கொள்ள வேண்டும். நான் ஆராட்சியில்லாமல் ஏற்று கொள்வதற்கு இல்லை. பிறருடைய நம்பிக்கையில் எந்த அறிஞன் வாழ்வான். மனிதர் அனைவரும் குருடர் குருடருக்கு வழிகாட்டுவது போல குருட்டாட்டம் போடுகிறார்கள். எந்த சாஸ்திரமும் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. நம்பிக்கைக்கு உரியவர்கள் கூறியதே நன்மையாக இருக்கும்..!"


   "நம்பிக்கை என்பது மாசற்ற நிலையில் தோன்றுபவை. மாசற்றவர்கள் அசத்தியம் கூற மாட்டார்கள். ஆதலால் என் உறுதியை யாரும் கலைக்க முடியாது. கதிரவனே வானில் இருந்து மண்மீது விழுந்தாலும், இமயமலையே அசைந்தாலும் பெய்பொருளை அறியாது நான் அரண்மனைக்கு திரும்ப போவதில்லை. என் இலட்சியத்தை அடையாது அரண்மனைக்கு திரும்புவதை விட எரிகிற தழலில் மூழ்குவேன்..!" என்று இவ்வாறு கூறிய சித்தார்த்தர் அதை செயலில் காட்டுவதாக எழுந்து தனது வழியை நோக்கி நடந்து கொண்டு இருந்தார்.


   குலகுருவும் அமைச்சரின் கண்களிலும் மழைபோல கண்ணீர் பொழிந்து கொண்டு சித்தார்த்தர் செல்லும் திசையை அவர் மறையும் வரை பார்த்து கொண்டு நின்றனர்.


    அந்த உறுதியோடு காட்டு வழியாக இளவரசர் சித்தார்த்தராக ஓர் வனத்தில் புகுந்தவர் கெளதம பிக்குவாக வெளியே வந்தார். தேவர்கள் எல்லோரும் பூமாரி பொழிந்து வாழ்த்த,பெரும் தவமுனிவர் ஆனார். இனி அவரை கெளதமர் என்றே அழைப்போம்.

                                                                                (பெருந்துறவு தொடரும்..!)

அன்புடன் தபோ.