jeudi 29 septembre 2011

விவேகானந்தர் சிந்தனைகள்.

* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.


* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.


* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.


* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.


* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.


* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.


* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.


* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.


* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.


* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.


* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.


* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire