vendredi 30 mars 2012

பெருந் துறவு. 8


ஆறுஆண்டு கடுந்தவம்.

                    ஆலர காலமர் ஆச்சிரமத்தைகெளதமர் அடைந்ததும் அவரை அன்போடு வரவேற்றனர் ஆலர காலமரும் சீடர்கள்களும். பின்னர் காலமர் தமது தத்துவத்தை விளக்கினார். கெளதமரும் மிகவும் விரைவில் சித்தாங்களை கற்று அநுபவ பூர்வகமா அதன்படி நடக்க ஆரம்பித்தார்.


             காலாமர் கூறியதாவது, "ஐம்பொறிகளின் மூலங்களாகிய செயல்களையும், மனதின் செயலையும் உய்த்துணரும் நான் என்பது எது.. நான் இங்கு இருக்கிறேன் என்பது ஆன்மாவின் கூற்று. உன் உடல் ஆன்மா அன்று. ஆன்மாவின் உண்மையை உணராமல் முக்தியில்லை. அநுமானத்தால் ஆழ்ந்த ஆராட்சியில் இறங்கினால் உள்ளம் கலங்கி அவநம்பிக்கையே ஏற்ப்படும். ஆனால் ஆன்மாவை பரிசுத்தமாக்குவதன் மூலம் விடுதலைக்கு வழி கிடைக்கும். ஆசைகளை அகற்றி விட்டு, சடபொருளை உண்மையன்று என்பதை தெளிவாக அறிந்தால் கூட்டில் இருந்து தப்பும் பறவை போல, அகங்காரம் தன் தளைகளில் இருந்து விடுதலை தரும். இதுவே உண்மை முக்தி. ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களே இதை கற்று அறிய முடியும்..!" என்றார்.


              ஆனால் கெளதமருக்கு இந்த போதனையில் திருப்தி கிடைக்கவில்லை. "நான் என்ற அகங்காரத்தை அகற்றாததாலேயே மக்கள் பந்தங்களில் சிக்கியிருக்கின்றனர். நம் கருத்தில் நெருப்பில் இருந்து வெப்பத்தை பிரித்து காணலாம் ஆனால் நடைமுறையில் நெருப்பில் இருந்து வெப்பத்தை வேறுபடுத்த முடியாது. தாங்கள் குணங்களை பிரித்து விட்டுப் பொருளைத் தனியேவிட்டு விடலாம்..!" என்று கூறுகிறீர்கள்.


           "இந்த முடிவை ஆராய்ந்தால் உண்மை அப்படி இல்லை. நாம் ஸ்கந்தங்களின் சேர்க்கையாகவே இருக்கிறோம் அல்லவா..? மனித தூல, புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாகவே மனிதன் விளங்குகிறான். நான் இருக்கிறேன் என்னும் போதே மனிதரால் குறிக்கப் பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப் பொருளன்று, ஸ்கந்தங்களின் கூட்டுறவாளே அந்த அகங்காரம் தோன்றுகிறது. ஆன்மாவை தேடி அலைவதே தவறு. ஆரம்பம் தவறாக இருந்தால் வழியும் தவறாகவே இருக்கும்.!"


               "மேலும் அகங்காரம் நிலைத்திருக்கும் என்றால் என்றால் உண்மையான விடுதலையை பெறுவது எங்ஙனம். சுவர்க்கம் மத்தியம் பாதாளம் ஆகிய மூவுலகங்களில் எங்கேனும் அகங்காரம் புனர்ஜன்மம் எடுக்கும் என்றால், திரும்ப திரும்ப பிறப்பும் வாழ்க்கையுமாகவே இருக்கும். அகங்காரமும் பாவமுமாகிய வாழ்வில் சிக்குண்டுருப்போம். இது எப்படி முடிவான விடுதலையாகும்.!" என்று மறுத்து கூறினார்.


              காலாமர் அநுபவ பூர்வமாக எவ்வளவு அறிந்திருந்தாரோ அதே அளவு கெளதமரும் அறிந்துகொண்டார். அவர் மூலம் ஏழு சமாபத்திகளையே அறிந்து கொள்ள முடிந்தது. பிறகு குருவை அடைந்து, "காலாமரே.. தாங்கள் அறிந்து வைத்திருந்த சித்தாந்தத்தின் தன்மை இவ்வளவுதானா..?" என்று வினாவினார். "ஆம் இவ்வளவுதான்.. நான் அறிந்த சித்தாந்தந்தை நீர் அறிவீர், உமது சித்தாந்தந்தை நான் அறிவேன்.. ஆகவே இருவரும் நமது சீடர்களுக்கு குருவாக இருப்போம்..!" என்றார் காலாமர்.


             ஆனால் கெளதமர் அதற்கு இணங்க வில்லை. இந்த சித்தாந்தம் ஞானத்தை அளித்து, நிருவான முக்தியை செலுத்தவில்லை.வெறும் ஏழு சமாபத்திகளையே அளிக்கிறது.. என்று கருதி சத்தியத்தை நாடி வெளியேறிச் செல்ல விடை கொண்டார்.


                அடுத்தாற் போல் அவர் உருத்திரகர் முனிவரிடம் உபதேசம் கேட்டார். உருத்திரகரும் அன்போடு தமது உபதேசத்தை விளக்கி கூறினார். அவர் கருமத்தை வற்புறுத்தினார். ஏற்ற தாழ்வுகளுக்கும் செல்வநிலைகளுக்கும் விதிக்கும் அவரவர் கருமமே காரணம்.! என்றும், அவரவர் கருமத்திற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்படுகிறது.. ஆன்மா ஜென்மங்கள் எடுப்பது கருமத்தின் விளைவு..! என்றார்.


               கெளதமர் மறுபிறப்பு பற்றியும், கருமத்தை பற்றியும் சிந்தித்தார். "கருமவிதி மறுக்க முடியாதே, அகங்காரம் ஆன்மா பற்றிய கொள்கைக்கு அடிப்படையில்லை..!" என்று கருதினார். உருத்திரக ராமபுத்திரரிடம் எட்டாவது சமாபத்தியை மட்டும் உபதேசமாக பெற்று அவரிடமும் இருந்து விடை பெற்றார்.


         இறுதியில் ஆசிரியரிடம் உபதேசம் கேட்டாகி விட்டது ஆனாலும் திருப்தி இல்லை. இனி தவத்தின் வகைகளை கொண்டு தாமே இயன்றவரை சமாதியில் இருந்து மெய்யறிவு பெற முடிவு கொண்டார். மகதநாட்டின் நைரஞ்சல் நதிகரையை அடைந்தார். அது இராமணீயமான இடம். அங்கு உருவேலா வனத்தில் தமது ஆரணியத்தை தொடங்கினார். இதுவே கடும் தமது கடும் தவத்துக்கு ஏற்ற இடம் என்று முடிவு எடுத்தார். பிச்சை எடுப்பதுக்கும் அருகில் கிராமம் இருந்தது. இங்கே தான் ஆறு ஆண்டு கடும் தவம் செய்ய நேர்ந்தது.


               அப்போது அவரைபோல மெய்யறிவில் நாட்டம் கொண்டு ஐந்து தாபதர்கள் அங்கு வந்து அவரோடு சேந்தனர். அவர்கள் கெளண்டியந்ய குலபுத்திரர், தசபால காசியபவர், பாஷ்பர், அசுவஜித், பத்திரகர் என்பவர்கள். அந்த ஐவரோடும் சேர்ந்து பிச்சை மேற்கொண்டு கடும் தவத்தை மேற்கொண்டார் கெளதமர். இறுதியில் பிச்சை ஏற்காமல் காடுகளில் கிடைக்கும் தானியங்கள் முதலியவற்றோடு உண்டனர். பின்னர் புல், பசுவின் சாணத்தை கூட உணவாக உண்டனர். பின்பு பலநாள் பட்டினிக்கு ஒரு இலந்தை பழம் மட்டும் புசித்தனர்.

                உடைகள் விஷயத்தில், கெளதமர் கிடைத்தவைகளை எல்லாம் உடுத்த ஆரம்பித்தார். சணல் முதலியவற்றால் நெய்த உடைகளையும், பிணங்கள் மீது போர்த்திய துணிகளையும் குப்பை மேடுகளில் கண்செடுத்த துணிகளையும், மரவுரிகளையும், கிழிந்த மான் தோல்களையும், புற்களையும், தலை ரோமம், குதிரை மயிர், ஆந்தையின் இறகுகள் முதலியவற்றால் செய்த உடைகளையும் வெவ்வேறு காலங்களில் அவர் அணிந்து வந்தார்.


                          அவர் தலை ரோமங்களையும், தாடி ரோமங்களையும், கையாலேயே முளையோடு பறித்தெடுத்து விடுவது வழக்கம். பல நாட்களாக உட்காராமல் நின்று கொண்டேயிருந்து பழகினார். முட்களைப் பரப்பி அவற்றின் மீது படுத்துப் பழகினார். நாள்தோறும் மூன்று வேளை குளித்துத் தண்ணீர்க்குள்ளேயே நெடுநேரம் இருப்பதும் வழக்கமாயிற்று. உடலைப் பொருட்படுத்தாமல் வதைப்பதில் எத்தனை முறைகள் உண்டோ அத்தனையையும் அவர் செய்து பார்த்தார். மாதக்கணக்காக அவர் குளியாமலேயே இருந்தார். பிறர் அவ்வுதவியை செய்ய வேண்டும் என்று அவர் நாடவில்லை. உடலுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படினும் அவர் எப்பொழுதும் போல் கருணையை மட்டும் கைவிடவேயில்லை. ஈ, எறும்பு, புழு, பூச்சிகள், கூடத் தம்மால் துயருறாமல் இருப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.


               ஏகாந்தமாக இருக்க வேண்டும் என்று தோன்றிய காலங்களில் அவர் இரவும் பகலும் புதர்களுக்குள்ளே போய் மறைந்திருப்பது வழக்கம். பழக்கமில்லாதவர்கள் அந்தப் புதர்களைக் கண்டாலே மயிர்க் கூச்செறியும் என்று அவரே கூறியுள்ளார். புல்லறுக்கவும், மரம் வெட்டவும், மாடு மேய்க்கவும் வரக்கூடிய மனிதர்கள் தம்மைப் பார்த்து விடாமலும், தாம் அவர்களைப் பார்த்து விடாமலும் இருப்பதற்காகவும், அவர்கள் காலோசை கேட்டதுமே தொலை தூரங்களுக்கு ஓடிப் போய்விடுவார். கோடை காலத்தில் வெய்யிலிலே காய்ந்தும் குளிர், மழை காலங்களில் சிறந்த வெளியில் கிடந்தும், வெயிலால் உலர்ந்து, பனியால் வாடியும் அவர் உடலைச் சித்திரவதை செய்து கொண்டு இருந்தார்.


                                    சிலசமயங்களில் கெளதமர் மயானங்களினாலே பிணங்களின் எலும்புகளின் மீது படுத்து கொள்வார். அவ்வாறு இருக்கும் சமயங்களில் அவ்வழியாகச் செல்லும் ஆயர்கள் அவர்மீது உமிழ்ந்தும், களிமண்ணை வீசியும், அசுத்தப் படுத்திய தோடு, அவர் செவித்துளைகளில் வைக்கோற் குச்சிகளை நுழைத்து அவர் என்ன செய்கிறார் என்பது வழக்கம். ஆனால் கெளதமர் அவர்களுக்கு எதிராக ஒரு தீயசிந்தனை கூட எண்ணியது இல்லை. இவ்வாறு பின்னர் சாரீபுத்திரருக்கு கூறியிருக்கிறார்.


                         இன்னும் பயங்கரமான திட்டங்களையும் நிறைவேற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் முனைந்தார். மூச்சை அடக்கவும், உணவையே தீண்டாமல் விரதமிருக்கவும் மேற்கொண்டார். பற்களை இறுக்க கடித்து, மேல் வாயோடு நாவை அழுத்திக்கொண்டு, மனதிலே தீய எண்ணங்கள் தோன்றாமல், நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டு இருந்தார். பலமுள்ள ஒருவன் மெலிந்தவன் ஒருவனைத் தோள்களையும் தலைகளையும் பிடித்து கீழே தள்ளி அழுத்துவது போல், அவரும் இந்த முறையில் மனதோடு போராடிக்கொண்டு இருந்தார். எவ்வளவு வேதனையிலும் மனம் தளராது நின்றார்.


                               பின்னர் மூச்சை அடக்க பயிற்சி எடுத்தார். வாயாலும் நாசியாலும் மூச்சு வாங்கி விடுவதை அறவே நிறுத்தி விட்டார். காற்று வெளியேறுவதற்காக காதுகளின் வழியாக பெரிய இரச்சலுடன் கிளம்பி வந்தன. பின்னர் அறவே அவர் மூச்சை நிறுத்தினார். புலன்களை அடைத்ததால் உடலின் வாயு வெளியேற முடியாமல் ஒரேயடியாக மூலையைப் போய்த் தாக்க ஆரம்பித்தது. தலையில் தாங்க முடியாத வேதணை உண்டானது. மூச்சை அடக்கியதால் உடல் கொடிய எரிச்சலை அடைந்தது. அப்போதும் அவர் உறுதியை விட வில்லை.


                              பின்னர் சொற்ப ஆகாரத்தையும் நிறுத்தினார். அங்கள்கள் நாணல் குச்சிகளை போல் ஆகியது, முதுகெலும்பு முடிச்சு முடிச்சாக வெளியே தெரிந்தது. விலா எலும்புகள் இடிந்து போன கூரைகளாகியது. கண்கள் குழிவிழுந்தன. வயிற்றின் தோலை தொட்டால் முதுகெலும்பு தட்டுப்பட்டது. அவ்வாறு மெலிந்து போனார். எழுந்து நடக்க முற்பட்ட போது சுருண்டு விழுந்தார்..


          அப்போது தேவர்கள், சிலர் "துறவி கெளதமர் மாண்டு போனார்..!" என்றனர். சிலர், "இல்லை.. இறக்கவில்லை..!, இறக்கும் நிலை அடைந்து கொண்டு இருக்கிறார்..!" என்றனர். இன்னும் சிலர் "இது இறக்கும் நிலையல்ல.., இது அருகத்தின் நிலை இதுதான்..!" என்றனர்.


(பெருந் துறவு தொடரும்..)

Aucun commentaire:

Enregistrer un commentaire