samedi 3 mars 2012

பெருந் துறவு. 7


                           யாகம் தடுத்தலும் பிம்பிசாரின் வேண்டு கோளும்.


                            அடவி, மலை, ஆறுகளை எல்லாம் கடந்து இராஜகிருகநகரை அடைந்தார். பசிக்களை வாட்டியது. முதன் முதலாய் இராஜகிருக நகரில் பிச்சை எடுக்க சென்றார்.. திருவோட்டில் சேர்ந்த கதம்ப சோற்றுடன் அவர் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறத்தில் போய் உணவருந்த அமர்ந்தார். ஓட்டில் இருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போடுகிறார். வாய் குமட்டுகிறது. அரண்மனை அறுசுவை உணவு எங்கே.. கண்டவர் வீடுகளில் வாங்கிய கதம்ப சோறு எங்கே..? உணவு உள்ளே செல்ல மறுத்தது.. ஆனால் எம் பெருமான் வெளியே தள்ள மறுத்தார். உலகின் துன்பத்தை எல்லாம் ஒழித்துகட்ட வந்த உத்தமர் பிச்சை சோற்றுக்கு புறங்கொடுத்து ஒடுவாரா.. எப்படியோ உள்ளத்தை உரமேற்றி கொண்டு அவர் அதை உண்டார். 

                 அதன் இராஜகிருக நகரை அடுத்த இரத்தினகிரி என்ற குன்றில் சிறிது காலம் தங்கினார். இரத்தினகிரியின் சாரலிலே ஒரு நாள் முற்பகலில் கெளதமர் சோலைகளையும், அங்கே பாடித் திரிந்து கொண்டிருந்த பறவைகளையும் பார்த்துச் சிந்தனை செய்து கொண்டிருந்தார். "தாவரங்களும், பிராணிகளும் தங்களுக்கு அன்றன்று தேவையுள்ளவைகளை வெறுக்காமலும், அடைதற்கரிய பேறுகளை எண்ணிக்கொண்டு அவதிப்படாமலும் இருப்பதன் காரணம் என்ன..?  மானிடன் மட்டும் கைக்கு எட்டிய வாழ்வையும் கைவிட்டு காணாத ஒன்றுக்காகக் கவலை கொண்டு தன்னையே சித்திரவதை செய்து கொண்டிருப்பது ஏன்..? மனிதன் பகுத்தறிவைப் பெற்று ஜீவராசிகளுக்குத் தலைமை வகித்திருக்கிறான். தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் வதைத்து, உதிரத்தில் தோய்ந்து வளர்ந்த தன் அறிவினால் அவன் தன்னையும் வதைத்துக் கொள்ளுகிறான்..!" என்று கருதினார் கொதமர். 


          அவர் சிந்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில் கொடூரமாகக் காய்ந்துகொண்டிருக்கும் வெய்யிலிலே, மலைகளிலிருந்து ஓர் ஆட்டுமந்தை வந்துகொண்டிருந்தது. இருநூறு ஆடுகள் இருக்கும் அவைகள் புதர்களை நாடி ஓடாமல் இரண்டு ஆயர்கள் அவைகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். வழக்கமாக ஆடுகள் மாலை நேரத்திலேயே மலையிலிருந்து திரும்புவது வழக்கம். நண்பகலிலே அவைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்ட கெளதமர், அவைகளை எங்கு செல்கின்றன என்று ஆயர்களிடம் கேட்டார்.


          பிம்பிசார மன்னர் அன்று நடத்தும் வேள்விக்காக அந்த ஆடுகளையெல்லாம் அழைத்துச் செல்வதாக ஆயர்கள் கூறினர்.  அன்று மாலையோடு யாகம் முடிவடைவதாயும் தெரிவித்தனர்.


          அஜமேதம், அசுவமேதம், நரமேதம் முதலிய எத்தனை வித யாகங்கள், மனிதன் தான் செய்த பாவங்களையெல்லாம் வேறு ஜீவன்களின் மீது ஏற்றி, அவைகளின் தலைகளை வெட்டித் தெய்வங்களுக்குப் பலியளித்தால், தன் பாவங்கள் ஒளிந்து பேரின்பம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான். அந்தக் காலத்திலே அவரவர் பாவ புண்ணியங்களை அவரவர் அனுபவித்து தீர வேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்த கெளதமர், வாயில்லாப் பிராணிகளான ஆடுகளைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினார். அவைகளை தங்கள் தலைகளைக் கொலை வாளுக்கு இரையாகக் கொடுப்பதற்காகக் காட்டு வழியாக விரைந்து சென்று கொண்டிருந்தன. உயிரில் அவைகளுக்கு எவ்வளவு ஆசை இருந்தது. சாலையின் இருபுறத்தும் இருந்த செடிகளையும் தளைகளையும் உண்டு பசியாறுவதற்கு அவைகளுக்கு எவ்வளவு ஆசையிருந்தது. அவைகளுக்குள்ளே பெரிய ஆடுகள் குட்டிகளை அழைத்துச் செல்லும் அன்புக்கு ஓர் அவதியில்லாதிருந்தது.


           ஆட்டு மந்தைக்குப் பின்னால் ஒரு பெண் ஆடு ஒரு குட்டியுடன் மெல்ல மெல்ல் வந்து கொண்டிருந்தது. அதனுடைய மற்றொரு குட்டி கால் நொண்டியாயிருந்ததால் வெய்யிலில் நடக்க முடியாமல் தள்ளாடி வந்து கொண்டிருந்தது. தாய் ஆடு அதைவிட்டுப் பிரிய மனமின்றித் தயங்கித் தயங்கித் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தது. கருணையின் நிலையமாகிய கெளதமர்அந்தக் காட்சியைக் கண்டதும், ஓடிச்சென்று நொண்டிக் குட்டியைப் பரிவோடு தூக்கித் தமது தோளிலே வைத்துக்கொண்டார். நானும் வேள்வி காண வருகிறேன், என்று கூறி, அவரும் ஆயர்களோடு தலை நகருக்குப் புறப்பட்டார். 

                                  "மனேந்தும் ஈசன் உளம் நாண, ஆட்டின்       
                                  மறியேந்து பெருங்கணைப் புனித வள்ளல்" 

        மாலை நேரத்திலே மாநகரின் திருவாயிலை அடைந்தார். கருணையே உருவெடுத்துக் கால், கரங்களோடு நடப்பது போல் விளங்கிய அருளரசரை கண்ட மக்கள், அவர் முகப் பொலிவையும், தவக்கோலத்தையும் கண்டு சொக்கிப் போய்விட்டனர். வீதிகளையெல்லாம் தாண்டிச் சென்று ஐயனும் ஆயர்களும் வேள்விச் சாலையை அடைந்தார்கள்.                  வேள்விச் சாலையின் நடுவே மகத நாட்டு மன்னர் நின்று கொண்டிருந்தார்.  அங்கு அக்னி வளர்த்துக் கொண்டிருந்தனர். தரையிலே முன்னால் வெட்டிய ஆடுகளின் உதிரம் பாய்ந்து கொண்டிருந்தது. மற்றொரு புறத்திலே யாகத் தறியிலே ஒரு வெள்ளாடு கட்டப் பட்டிருந்தது. தீட்சிதர் ஒருவர் வாளேந்தி அதை வெட்டப் போகும் தருணத்திலே, கெளதமர் ஓடிச்சென்று, அக்கொலையினை தடுத்து, அரசரைப் பார்த்து, "ஆட்டினைக் கொல்லாது அருள் புரிய வேண்டும்." என்று கேட்டார். ஆட்டின் காலிலும், வாலிலும், கண்டத்திலும் கட்டியிறுக்கியிருந்த கட்டுக்களை அவிழ்த்து, அதை அவரே விடுதலை செய்துவிட்டார். வேள்வித் தீயின் ஒளியைப் பார்க்கிலும் விரிந்த சோதியோடு விளங்கிய அவர் திருமுகத்தை நோக்கிய வண்ணம் யாவரும் திடுக்கிட்டு நின்றனர்.


      பாவத்தைத் தொலைப்பதற்காகக் கொலையுடன் கூடிய யாகம் செய்தல் புதிய பாவத்தையே விளைவிக்கும். பிராணிகளின் உதிரத்தால் எவனும் தன்னைப் பரிசுத்தமாக்க முடியாது.தேவர்கள் நல்லவராயின், கொலையுடன் கூடிய ஊனுடைய வேள்வியால் உள்ளம் களிக்க மாட்டார்கள். அவர்கள் தீயோராயின், அத்தீயோரிடமிருந்து நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று வினவினர் விமலர்.


                                                  "வாழும் உயிரினை வாங்கிவிடல் இந்த               
                                                   மண்ணில் எவர்க்கும் எளிதாகும்,         
                                                   வீழும் உடலை எழுப்புதலோ ஒரு             
                                                   வேந்தன் நினைக்கினும் ஆகாதையா,         
                                                   பிள்ளையைக் கொன்று கறி சமைத்தீர்..!"


          உயிர்க்கொலையை தவிர்த்து உள்ளத்தால் ஊனமில் வேள்வியை நடத்தி வரும்படி மன்னர்க்கும் மற்றையோர்க்கும் பலவாறு உபதேசித்தார். யாகங்களால் மன்னர்க்குப் பெருமை என்றும், மறையோர்க்குப் புண்ணியம் என்றும், பலியிடப் பெறும் உயிர்களுக்குச் சொர்க்கம் என்றும் கூறுவர். பலியிடும் உயிர் உடனே சொர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியிட்டுச் சுவர்க்கத்திற்கு அனுப்பி விடலாமே,  அவரைவிடச் சிறந்த உயிர்தான் வேறு ஏது ஆதலால் உயிர்ப்பலி வேண்டாம். அவசியமானால் என்னையே பலியிடுங்கள் ஏழை ஆட்டின் உயிரை வாங்க வேண்டாம், என்று அவர் முரசு முழங்கியது போல் முழக்கம் செய்தார்.


        அருகே வந்து பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த மகத மன்னர், களங்கமற்ற மூர்த்தியைக் கண்குளிரக் கண்டு வணங்கி, செய்த பிழையைப் பொறுத்தருளும் படி வேண்டினார். இனி நாடெங்கிலும் கொலை தவிர்க்கும் படி நாளையே பறையறைவிப்பேன்.  என்று சபதமும் கொண்டார்.  வேதியர்களும் ஓம குண்டத்தீயை அவித்து விட்டு வேள்வியை நிறுத்திக் கொண்டனர்.


     பின்னர் உடல் நலம் பற்றி விசாரித்தார். கெளதமரும் இனிய முகத்துடன், தம் உள்ளமும் உடலும் செம்மை யுற்றிருப்பதாக மறுமொழி கூறினார். பின்னர் மன்னர் அவருக்குச் செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் செய்து அவரை தம்மோடு இருக்கும்படி வேண்டினார். ஆனால் கெளதம பிக்கு, தாம் வந்த காரியம் முடிந்ததென்று சொல்லிவிட்டு, மீண்டும் தன் குகை நோக்கி சென்றுவிட்டார். 


          சிரேணிய மன்னர் சித்தார்த்தருடைய துறவை எண்ணிக் கவலைப்பட்டார். இளம் வயதிலேயே மணிமுடி துறந்து, காவியுடுத்து முண்டிதமான தலையுடன் ஒளியுடன் விளங்கிய உருவத்தை அவர் சிறிது நேரம் கூட மறக்க முடியவில்லை. மறுநாட்காலை, அவர் மந்திர மறையோர்களையும், மந்திரிகளையும் அழைத்துக் கொண்டு கெளதமரை த் தரிசித்து வருவதற்காக வனத்தை நோக்கிப் புறப்பட்டார். 


       மலையின் மீது ஒரு மரத்தின் நிழலில் அசலம் போல அசைவில்லாமல் அமர்ந்திருந்த கொதமரை கண்டு அவர் வணங்கி, தம் உள்ளத்தில் இருந்ததை கூற தொடங்கினார். தங்களின் குலபெருமையை நன்கு நான் அறிவேன். இளமையும் எழிலும் கொண்ட தாங்கள் துறவு பூண்டது வியப்பாகவே இருக்கிறது. பலவீடுகளில் எப்படி பிச்சை எடுத்து உண்ண முடிகிறது. 


கெளதமர் சொன்னார்.., "முதலில் எனக்கும் கடினமாகவே இருந்தது இப்போது அவ்வாறு இல்லை, காவி உடையில் மனிதன் உடைக்கும் மனிதனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து விட்டேன். களங்கமற்ற மனம் இருந்தால் உண்ணும் உணவில் என்ன இருக்கிறது.கொலை களவாக எடுக்கும் தேனைவிட ஆற்று நீர் தித்திப்பாக இருக்கிறது எனக்கு.!"


    பிம்பசாரர் தொடர்ந்தார்.., "செங்கோல் பிடிக்க வேண்டிய தங்களின் கரங்களில் பிச்சை பாத்திரம் ஏந்தலாமா.. அண்டினோர்க்கு அபயமளிக்கு கரங்களுக்கு இது பொருத்தமில்லை.. தந்தையின் இராட்சியம் விரும்பா விட்டால் எனது இராட்சியத்தில் பாதியை ஆழலாம். தாங்கள் மனமுவந்து சம்மதிக்க வேண்டும். இன்பம், செல்வம், அறம் முண்றுமே அனுபவப்பவரே இளமை மனிதர். மூவுலகையும் வெற்றி கொண்டு ஆழுங்கள். முதுமைக்கே ஏற்றது துறவு. "


  மகத மன்னனின் அன்பு மொழிக்கு மறுமொழி கூறினார் கெளதமர், "விடங்கொண்ட நாகத்தைவிடவும்.. வானிலிருந்து விழும் இடியை விடவும் இந்த உலக இன்பங்களை கண்டு அஞ்சுகிறேன்.. இவை கானல் நீரே.. விறகிட்ட தீயைபோல் அதற்கு ஒய்வும் இல்லை அழிவும் இல்லை.. அதற்கு அடிமைப் பட்டவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் இல்லை. மயக்கத்தில் இந்த வலையில் வீழ்வதை அறிந்த பின் மீண்டும் எவ்வாறு அதை நாடுவேன்.. வையத்தை ஆண்டாலும் கடலுக்கு அப்பால் வேறு கண்டம் இருக்குமோ என்று அசைபடும் மனிதர் உள்ளம். அந்த ஆசையில் என்றுமே அமைதி இல்லை. ஆதலால் இன்பங்கள் என்ற கொடியவரோடு நான் உறவாட முடியாது."  


     "இராட்சியம் இல்லாமலே எனக்கு திருப்தி ஏற்பட்டு உள்ளது. திருப்தி உள்ள இடத்திலேயே பேதங்கள் மறையும். பிச்சையெடுத்து வாழும் துறவியை கண்டு இரங்கலாகாது. அவனே மரணத்தை வெல்லும் பாக்கியசாலி.. இவ்வுலகில் இணையற்ற ஆனந்தத்தையும் சாந்தியையும் அனுபவிப்பவன் அவனே. பெரும் செல்வத்தின் நடுவிலும் ஆசை அடங்காது சஞ்சலப்படுபவனுக்கே இரங்க வேண்டும். ஆதலால் இந்திர லோகத்தை ஆழும் பேற்றைகூட என்னால் ஏற்க முடியாது. பிறப்பும் இறப்பும் அற்ற உலகை அடைவதே மகோன்னதமான இலட்சியம். மரணம் எப்போது வரும் என்பதை அறியாத நிலையில் முதுமை வரட்டும் என்று காத்திருத்தல் ஆகாது."  


      "சத்தியத்தை நாடி ஞான குருவான ஆலர காலாமரை நான் சந்திக்க வேண்டும். அவரை தேடியே இங்கு வந்தேன், இன்றே புறப்பட வேண்டும். தங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்." என்று கூறிமுடித்தார். பிம்பசாரர் எழுந்து நின்று அவரை கைகூப்பி வணங்கி, "தங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். விரும்பிய சித்தியெல்லாம் பெற்ற பின், தாங்கள் என்னை மறவாது மறுபடி என் நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்.. என்று வேண்டிக்கொண்டார். கெளதமரும் அவ்வாறே வருவதாக உறுதிகூறி, அங்கிருந்து புறப்பட்டார். 


   ஆச்சிரமத்தில் ஆலர காலரும் சீடர்களும் கெளதமர் வருவதை கண்டு வணக்கம் கூறி அன்புடன் வரவேற்றனர்.  

                                                                                                (பெருந்துறவு தொடரும்..)

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire