samedi 21 juillet 2012

பெருந் துறவு.10


முதற் சீடர்களும்  பிரும்மாவின் வேண்டுகோளும்.

போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் கழித்தார். சுயாதை அழித்த இன்னமுதுக்குப் பின்னால் அத்தனை வாரங்களிலும் அவர் உணவு கொள்ளவில்லை. நாள்தோறும் நெடுநேரம் அவர் சமாதியில் அமர்ந்திருந்து, உலக நிகழ்ச்சிகளையும், ஜீவன்கள் படும் அவதிகளையும் அறிவுக் கண்ணால் பார்வையிட்டு வந்தார். அவர் உள்ளத்திலே இன்பம் தேங்கி நின்று திளைத்துக் கொண்டிருந்தது. போக்குவரவற்ற பூரண நிலையை அவர் பெற்றிருந்தார். அவருடைய பனிமதி முகத்திலே புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

அந்த நிலையில் அவ் வழியாகச் சென்று கொண்டிருந்த செல்வம் மிகுந்த திரிபுஷன், பல்லிகன் என்ற இரு வர்த்தகரும் போதியடியில் ஒளிமயமாக விளங்கிக் கொண்டிருந்த சுகதரைக் கண்டனர் அவர்கள் வடக்கு உத்கல நாட்டினர். ஐந்தாறு வண்டிகளில் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்ற பாதையில், அவர்கள் ததாகரைத் தரிசித்து, தேனும், சக்கரையும், நெய்யும் அளித்து வணங்கினர். அவரும் அவைகளை அன்போடு பெற்றுக் கொண்டு உண்டார். போதியடைந்த பின்பு அவர் உட்கொண்ட முதல் உணவுகள் அவையே.


புத்தர் அவர்களுக்கு நிருவாண முக்தியை அடையும் மார்க்கத்தை உபதேசித்தார். அவர்களும் அவரிடம் முழு நம்பிக்கை கொண்டு, அவரையும் தருமத்தையும் சரணாலயமாக ஏற்றுக் கொண்டனர். இல்லறத்தில் இருந்து கொண்டு புத்தருக்கு முதன் முதல் சீடர்களாகச் சேர்ந்தவர்கள் அந்த இருவர்களே. 

உலகில் மக்கள் அடையும் துக்கங்களைக் கண்ட புத்தரின் மனம் உருகிக் கொண்டிருந்தது. தாம் பெற்ற இன்பத்தை அவர்களும் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காகவே அவர் ஆதியில் சபதம் செய்துகொண்டு நாடு விட்டுக் காடு அடைந்ததை எண்ணினார். ஆனால் ஜனங்கள் அவருடைய அமுத மொழிகளைக் கேட்பார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.


மகா உன்னதமான உண்மையை நன் உணர்ந்திருக்கிறேன். அது உள்ளத்தை உருக்குவதாயும் சாந்தியளிப்பதாயும் உள்ளது. ஆனால் தெரிந்து கொள்ள கடினமானது.


ஏனெனில் பெரும்பாலான மக்கள் உலகியல் விஷயங்களிலேயே ஈடுபட்டு அவைகளிலேயே இன்பம் காண்கின்றனர்.


உலகப் பற்றுள்ளவன் எனது தர்மத்தை உணர்ந்து கொள்ளமாட்டான். ஏனெனில் நன் என்னும் அகங்கரத்திலேயே அவனுக்கு இன்பம் இருக்கிறது. சத்தியத்தோடு முற்றிலும் அடிபணிந்து சரணடைவதிலுள்ள இன்பத்தை அவன் உணர முடியாது.


போதி பெற்றவர் பேரின்பம் என்று கூறுவதை அவன் துறவு என்பான். நிறைவு பெற்ற பெரியோர் நித்திய வாழ்வு என்று கண்டதை, அவன் அழிவு என்பான். தம்மையே வென்று கொண்டு அகங்காரத்தை அகற்றிய வெற்றியாளர் அழியாவாழ்வு என்று அறிந்ததை,அவன் மரணம் என்று கருதுவான்.


வெறுப்புக்கும் விருப்புக்கும் அடிமைப்பட்டுள்ளவனுக்கு உண்மை மறந்தே நிற்கும். மேகங்கள் சூழ்ந்தது  போல் உலக ஆசைகள் அடர்ந்துள்ள பேதைமையுள்ள மனத்திற்கு நிருவாண முக்தி உணர்ந்துகொள்ள முடியாத மர்மமாகவேயிருக்கும். 


நான் தரும உபதேசம் செய்து மனித குலம் அதைப் புரிந்துகொள்ளாவிடில், எனக்குக் களைப்பும் சிரமமுமே மிச்சமாகும்.


அந்த நிலையில் மகாபிரும்மா தேவருலகிலிருந்து இறங்கி வந்து மனித குலத்திற்காக மனம் இரங்கித் தமது தருமத்தை உபதேசிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் வீணாக அழிந்து விடுவார் என்றும் புத்தர்பிரானை வேண்டிக் கொண்டார்.


உலகில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் உலகப் பாசங்களைக் கடந்தவர்கள். அவர்களுக்குத் தரும உபதேசம் செய்யாவிடில், அவர்களை நாம் இழக்க நேரும். அவர்கள் அறிவுரையைக் கேட்டால், அதை நம்பி உயர்ந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். 


பகவரும் அங்கிருந்தபடியே உலக மக்களை அறிவுக் கண்ணால் நோக்கிக் கவனித்தார். சிலருடைய உள்ளங்களை உலகப் பற்றுக்கள் கவராமல் இருந்ததைக் கண்டார். காமம், பாவம் முதலியவற்றின் துயரங்களை அறிந்த சிலர் இருந்தனர். அப்போது அவர் கேள்விக்கு ஏற்ற செவிகளை உடையவர்களுக்கு  நித்திய வாழ்வின் கதவை விசாலமாகத் திறந்து வைக்கிறேன். தருமத்தை அவர்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளட்டும் என்று கூறினார். 


அதைக் கேட்டு பிரும்மா தம் கருத்து நிறைவேறி விட்டது என்று மகிழ்ச்சி அடைந்தார்.


தருமத்தை நான் முதலில் யாருக்குப் பிரசாரம் செய்யலாம்? என்று புத்தர் பிரான் எண்ணும் போது, ஆலார காலாமர், உருத்திரகர், இருவரைப் பற்றியும் கருதினார். இவ்விருவரும் ஆனந்தத்தோடு தமது தருமத்தை ஏற்றுக் கொள்வர் என்று அவர் எண்ணினார். ஆலார காலாமர் ஏழு நாட்களுக்கு முன்பு இறந்து போனதாயும், உருத்திரகர் முந்திய நாள் மாலையில் மரித்து விட்டதாயும் பிரும்மா கூறினார்.


அடுத்தாற் போல் பகவர் உருவேலா வனத்தில் தம்மோடு இருந்த ஐந்து தாபதர்களைப் பற்றி எண்ணமிட்டார். அவர்களைத் தேடிச்சென்று, என் விடுதலை மார்க்கத்தை முதன் முறையாக அவர்களுக்கே உபதேசம் செய்கிறேன்! என்று அவர் கூறிக்கொண்டார்.


அக்காலத்தில் அந்த ஐந்து சீடர்களும் கங்கை நதிக் கரையிலிருந்த காசிமா நகரில், சாரநாத் என்னுமிடத்தில் மிருகதாவனம் என்ற மான் தோட்டத்தில் தங்கியிருந்தனர். புத்தர் தாம் ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் தம்மைக் கைவிட்டுச் சென்றதை எண்ணாமல், அவர்கள் முன்னால் செய்த உதவிகளையும், அவர்கள் நோற்ற கடுமையான நோன்புகள் பயனற்றுப் போவதையும் எண்ணினார். அவர் உள்ளத்தில் அவர்கள் மீது கருணையே நிறைந்திருந்தது. எனவே அவர் காசியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.


போதி மரத்திலிருந்து கயை நகருக்குச் செல்லும் பாதையில் உபாகர் என்ற ஆஜிவக சமயத் துறவி அவரைச் சந்தித்தார். உபாகர், வாலிபர், வேதியர், புத்தருக்கு அவர் முன்பே தெரிந்தவர். அவர் புத்தரின் முகத்தில் பொழிந்த தேசையும் அமைதியையும் கண்டு நண்பரே உமது தோற்றம் சாந்தி நிறைந்திருக்கிறது. பரிசுத்தமும் பேரின்பமும் பெற்ற மகா புருடர்களின் கண்களைப் போல, உமது கண்கள் சுடர் விடுகின்றனவே! என்று கூறினார்.


புத்த பகவர், நான் அகங்காரத்தை அழித்து விடுதலை அடைந்துள்ளேன். எனது உடல்  புனிதமாகியுள்ளது. எனது உள்ளம் ஆசையற்ருள்ளது. எனது இதயத்தில் உண்மை உறைந்துள்ளது. நான் நிருவாண முக்தியைப் பெற்றுள்ளேன். அதனால் தான் என் தோற்றம் சாந்தி நிறைந்திருக்கின்றது. என் கண்கள் பிரகாசிக்கின்றன. இப்போது பூமியிலே எனது சத்திய இராச்யத்தை அமைக்க விரும்புகிறேன். இருளால் சூழப்பட்டவர்களுக்கு ஒளியளித்து, மக்களுக்கு நித்திய வாழ்வின் வாயிலைத் திறந்து வைக்க விரும்புகிறேன்! என்று பதிலுரைத்தார்.   


அப்படியானால் நீர் உலகத்தை வென்ற சிநேன்திரர் என்றே உம்மைக் கருதுகிறீரா? என்று கேட்டார்  உபாகர்.


தங்களைத் தாங்களே வெற்றிகொண்டு, அகங்காரத்தால் வரும் உணர்ச்சிகளை அடக்குவோர் அனைவரும் சினேந்திரர்களே. மனத்தை அடக்கிப் பாவத்திலிருந்து விலகியவர்களே வெற்றியாளர்கள். ஆதலால் உபாக, நான் ஒரு சினேந்திரனே! என்றார் வள்ளலும்.


தங்களுடைய குரு யாரோ?


நான் யாவற்றையும் வென்றவன்,நான் யாவற்றையும் அறிந்தவன், வாழ்வின் நிலைகள் யாவற்றிலும் நான் ஒட்டு பற்றில்லாதவன். எல்லாவற்றையும் நான் துறந்தாயிற்று. அவாவை அழித்தால் நான் முக்தியடைந்தவன். எல்லாவற்றையும் நானே கற்றுக் கொண்டபின், எவரை என் குரு என்று காட்டுவேன்?


உபாகர் தலையை அசைத்துக் கொண்டு புனித கௌதமரே! நீர் செல்ல வேண்டிய வழி அதோ இருக்கிறது! என்று புனித மூர்த்திக்கு,வழி காட்டிவிட்டுத் தாம் தம் வழியே சென்றார். போகும் வழியிலே சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் சற்று நின்று, ததாகரின் புதிய தருமத்தைப் பற்றிச் சிந்தனை செய்துகொண்டே சென்றார். 
 ததாகரும், மெல்ல மெல்ல நடந்து, கங்கையைக் கடந்து, காசிமாநகரை அடைந்தார்.


தமது ஞான ஆசிரியர் தம்மைத் தேடி வருவதைப் பொருட்படுத்தாமல், அவரை வரவேற்று உபசரிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.அத்தகைய சீடர்களைத் தேடி அண்ணல் தம் அடிகள் வருந்தும்படி நடந்து வந்தது ஏன்? அத்தகைய சீடர்களே அவருக்குத் தேவையாயிருந்தனர். ஆசிரியரே தவறு செய்வதால், அவரைக் கண்டித்து ஒதுக்கிவிட்டுத் தமது இலட்சியத்தை அடைய வேண்டும் என்று பிடிவாதத்துடன் தவம் புரிந்த தவசிகள் அல்லவா அவர்கள்! உண்மையை உணர்ந்து கொண்டால், அவர்கள் தமக்கும், தமது தருமத்திற்கும் உறுதுணையாக விளங்குவார்கள் என்று பெருமான் எண்ணியது முற்றிலும் பொருத்தமே!


உடலிலிருந்து ஒளி வீசிய வண்ணம் போதிவேந்தர்,ஒரு கையில் திருவோடும், மறுகையில் ஒரு தண்டும் ஏந்திப் புன்னகை செய்து கொண்டே, மெல்ல மெல்ல நடந்து, மான் சோலையில் அமைத்திருந்த அவர்களுடன் தவப்பள்ளியுள் நுழைந்தார். அதுவரை ஐவரும் எழுந்திருக்கவேயில்லை. ஆனால், விரைவிலே அவர்கள் சித்தம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அவரை வணங்கி உபசரிப்பதில் போட்டியிட்டனர். ஒருவர் அவருடைய கழியையும், திருவோட்டையும் வாங்கி வைத்தார். ஒருவர் அவருடைய திருப்பாதங்களைச் சுத்தி செய்ய நீர் அணிவித்தார். மற்றவர்கள் ஆசனம் அமைத்தும், உடைகள் எடுத்து வந்தும் மரியாதையை செய்தனர். அவர்களால் வேறு முறையில் நடந்து கொள்ள முடியவில்லை. ஐய, தங்கள் உடல்நலம் எப்படியுள்ளது? என்று அவர்கள் கேட்டனர்.


புத்தர் எல்லாமே நலமே எல்லா விதத்திலும் நாம் நன்மையே அடிந்துள்ளோம் அடைவதற்கு அரிதான ஞானத்தை அடைந்தாயிற்று! என்றார்! பின்னும் அவர் சீடர்களை நோக்கி ஆனால் நீங்கள் ததாகரைப் பெயர் சொல்லியோ, நண்பர் என்றோ அழைத்தல் தகாது, ஏனெனில் அவர் புத்தர்; போதியடைந்த புனிதர்! புத்தர் எல்லா உயிர்களிடத்தும் ஒரே தகைமையான அன்புடன் விளங்குவதால், அவர் அனைவருக்கும் தந்தையாக விளங்குகின்றார். தந்தையை இழிவுபடுத்தல் தகாது. அவரை வெறுத்தல் பாவம்! என்று கூறினார்.


பிறகு உடலை வருத்திக் கொடுமையான தவங்கள் செய்யாமலும், உடலின் இன்பங்களில் ஆழ்ந்திராமலும், முக்தி அடைவதற்குரிய நடுநிலை வழியைத் தம் கண்டு கொண்டிருப்பதாக அவர் கூறினார்.


மனிதன்  மயக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும், மீன், புலால், முதலிய உணவுகளை விலங்குவதாலோ, அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, சடை வளர்ப்பதாலோ, உடலில் அசுத்தமான பொருளைப் பூசிக்கொள்வதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகிவிட முடியாது என்றும் அவர் பல நீதிகளை விளக்கிச் சொல்லிவிட்டுத் தாம் மெய்யறிவு பெற்றுக் கண்டுள்ள மத்திமவழி யாகிய தரும மார்க்கத்தை அவர்களுக்கு உபதேசம் செய்யப் போவதாக உரைத்தார்.  

ஐந்து சீடர்களும் அமையோடு ஆயத்தமாக அமர்ந்திருந்தனர். தேவர்களும், நாகர்களும் உருக் கரந்து வந்து, மான்சோலையிலே மறைந்து நின்று, செவிமடுத்துக் கொண்டிருந்தனர். பூதல மக்கள் செய்த புண்ணிய வசத்தால் புத்தர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்.

(பெருந்துறவு தொடரும்..!)



                                                                    (பெருந்துறவு தொடரும்..!)

1 commentaire: