lundi 30 avril 2012

உலகமே ஒரு துயர மேடை..!

அவர் முகம் முழுவதும் ஒரு பிரகாசம். மூடியகண்களுள் சுடர் தெறிப்பது போல் ஒரு பிரமை. பார்ப்பவர்களை எல்லாம் பரவசப்படுத்துவதற்காகவே தோன்றியது போல் அமர்ந்திருந்தது போதி மரம் தந்த அந்த ஞான சூரியன். பொழுது புலர முற்பட்டது. மெல்லக் கதிரொளி எங்கும் பரவுவதுபோல் அவரிடமிருந்து ஒரு மெல்லிய அமைதி எங்கும் பரவிக் கொண்டிருந்தது. அந்த அமைதியே தானாகியது போல் அதனுள் மூழ்கி அமைதியாக வீற்றிருந்தார்.

அப்போது அந்த சூழ்நிலையின் பேரமைதியைக் குலைப்பது போன்ற ஒரு விசும்பல் ஒலி எங்கிருந்தோ கேட்டது. அலைகள் அடுத்தடுத்து வந்து மோதுவது போல் அந்த தேம்பல் ஒலி திரும்பத் திரும்பச் செவிப் பறையைத் தாக்கவே அவரது கண்கள் மெல்ல மலர்ந்தன. எதிரே ஒர் அபலைப் பெண் கண்களில் கண்ணீர் மல்க நின்றிருந்தாள்.

என்ன.. என்று கேட்காமலே கேட்பது போல் மலர்ந்த அவருடைய அருள் விழிகளைக் கண்டதுமே அழுதபடி மண்டியிட்டாள் அந்த தாய். "சுவாமி..! பறிகொடுத்து விட்டேனே..! என் வாழ்வின் ஒரே விளக்காயிருந்த என் அன்பு மகன் மாண்டு விட்டானே..! இனி நான் யாருக்காக வாழ்வது..? எனக்கு இனி யார் பாதுகாப்பு..?" என்று கதறினாள்.

தொடர்ந்து நெடுநேரம் அவளது அந்தப் பிரலாபத்தை அமைதியாக செவிமடுத்தார் அவர். அவர் முகத்தில் நிர்ச்சலனம். இறுதியாக அவரது இதழ்கள் திறந்தன.
"எப்படியம்மா.. நிகழ்ந்தது..?"
"கருநாகம் தீண்டி விட்டது. பெரிய விஷநாகம். ஒரே நாழிகையில் என் குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது..!"
முகத்தில் சலனமின்றி மீண்டும் மெல்ல வினாவினார் அவர்.
"இப்போது நீ வேண்டுவது என்ன அம்மா..?"
"எனது ஒரே மகன் இவன். எப்படியாவது இவனை உயிர்ப்பித்துத் தாருங்கள்..!"
அதை கேட்ட அவர் முகத்தில் மெல்லிய முறுவல் தோன்றியது.
"அதை தொடர்ந்து, அவசியம் செய்யலாம்..!" என்றார் அவர்.
இதை கேட்டதும் அந்த தாயின் அழுகை சட்டென்று நின்றது. பரபரப்புடன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

"உன் மகனை நிச்சயம் உயிர்ப்பிக்கிறேன். அதற்காக வேண்டி நீ போய்ச் சாவு இல்லாத ஒரு வீட்டிலிருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கி வா.. அது போதும், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்..!"

அவள் ஓட்டமும், நடையுமாக விரைந்தாள். வீடு வீடாக ஏறினாள், இறங்கினாள். "ஒரு பிடி கடுகுதானே.. அவசியம் தருகிறோம்." என்றவர்கள் வீட்டிலே சாவு உண்டா என்ற கேள்விக்கு வகை வகையாக கதைகளை சொன்னார்கள். "மகன் இறந்து மூண்று மாதமாகிறது", "சென்ற வருடம்தான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.", "போன வாரம்தான் என் தாயார் காலமானார்." வீடு வீடாக ஏறி இறங்கியவள் உண்மையை உணர்ந்தாள். உலகமே ஒரு துயர மேடையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் இதில் தனக்கென்ன தனித் துயரம் என்று தெளிந்தாள்.

திரும்பி வந்தாள். அவரை அடிபணிந்தாள். "உண்மையை உணர்ந்தேன் ப்ரபோ.. சாவு என்பது அனைவருக்கும் பொதுவானது. அது எல்லா வீட்டிலும் கண்டிப்பாக நுழையும் என்பதை புரிந்து கொண்டேன். இனி என் கடமையைப் புரிவேன்..!" என்றாள்.

புத்தரின் முகத்தில் மலர்ந்த முறுவல் புன்னகையாகக் கனிந்து ஒளிந்தது.

(இரவும் பகலும் மாறி மாறிச் சுழல்வது போல் பிறப்பும், இறப்பும் மாறிமாறி வருவன. பிறவாதான் மட்டுமே இறவாதான். மரணம் என்பது முடிவுரையல்ல.. அது வாழ்வின் மறுகரை..!)

Aucun commentaire:

Enregistrer un commentaire