samedi 3 mars 2012

பெருந் துறவு. 6


                                                             கபிலை சோகமும் சித்தார்த்தரின் உறுதியும்.


               சித்தார்த்தர் மெதுவாக நடந்து சென்று பார்க்கவரின் ஆச்சிரமத்தை அடைந்தார். அங்கு உள்ள தவமுனிவர்களை வணங்கினார். காவியுடையிலும் அவரது கம்பீரத்தையும் முகப் பொலிவையும் கண்டு தாபதர் எல்லோரும் அன்புடன் வரவேற்றனர். தாம் தவம் புரிய வேண்டும் என்பதால் பேச்சை ஆரம்பித்தார். "இன்று தான் என் வாழ்கையில் தவப்பள்ளியை காண்கிறேன். தவமுறை எதுவும் எனக்கு தெரியாததால் அதைபற்றி அடியேனுக்கு விபரமாக எடுத்துரைக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டார்.


                 வேதியராகிய பார்க்கவர் விளக்கிக் கூறினார். "உழுது பயிரிட்டு விளையும் உணவை நாம் உண்பது இல்லை, காட்டில் தாமாக விளையும் காய் கனிகள், தானியங்கள், கிழங்குளையே உண்போம். சிலர் புல்லை மட்டும் உண்கிறார்கள், சிலர் பாம்பை போல் காற்றை மட்டுமே சுவாசிக்கிறார்கள், சிலர் நீரிலும் நெருப்பிலும் நின்று தவம் புரிகிறார்கள். இப்படி உடலுக்கு கடுமையான துன்பங்களை கொடுப்பதனால் சுவர்க்கத்தை அடையலாம் என்று நம்புவதாக!" என்று பார்க்கவர் கூறினார்.


    ஆனால் சித்தார்த்தர் சிந்தித்தார். "இந்த தாபதர்கள் அடைவது அற்பமான சுவர்க்கமே.. அங்கும் மாறுதல்கள் இருக்கும். உலகவாழ்வில் ஆசை கொண்டவர்களுக்கும், சுவர்க்க ஆசை கொண்டவர்களுக்கும் என்ன பேதம். துன்பத்தால் புண்ணியம் என்றால் இன்பத்தை தேடுவதால் ஏன் புண்ணியமாகாது.!" என்று அவரது சிந்தனைகள் சிலநாட்கள் சென்றது, தவமுறைகளை அறிந்தபின் அங்கிருந்து புறப்பட முடிவெடுத்தார்.


                            அவர் அங்கிருந்து பிரிந்து செல்வதை விரும்பாது தங்களுடனே இருக்கும் படி தவசிகள் வேண்டி கொண்டனர். அதற்கு சித்தார்த்தர் "உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால் உங்கள் குறிக்கோள் சுவர்க்கம். எனது குறிக்கோள் பிறப்பை அறுத்தல். இரண்டும் வெவ்வேறு இலட்சியங்கள். அதனால் என் இலட்சியத்தை அடைய வெளியே செல்ல வேண்டும். எனக்கு விடை அழியுங்கள்..!" என்று வேண்டி கொண்டார். அப்போது அங்கிருந்த வேதியர்களில் ஒருவர் சித்தார்த்தரின் குறிகோளை பாராட்டி விந்திய கோஷ்தானத்தில் ஆலார காலாமரிடம் போய் உபதேசம் பெறுமாறு ஆலோசனை கூறிவிட்டு, ஆனால் அவரின் தத்துவங்களையும் கடந்து மெய்ஞானத்தை பெற்று உலகின் ஞானதேகராக விளங்க போகிறீர் என்று வாழ்த்தினார். "நல்லது அவ்வாறே செய்கிறேன்!" என்று கூறி அனைவரிடமும் விடைபெற்று கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் சித்தார்த்தர்.


                 மகதநாட்டு பாண்டார மலைக்குகையில் தவம்செய்யும் ஆலார காலாமரை சந்திப்பதற்காக, காட்டுவழியாக நடந்து களைத்து ஒரு மரத்தடியின் நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க உட்கார்ந்தார். அப்போது சித்தார்த்தரை தேடி வந்த அரசருடைய குலக்குருவும், மந்திரியும் அவரை கண்டு வணக்கம் கூறி அவர் அருகே அமர்ந்தனர். அவர்கள் சித்தார்த்தரை எப்படியாவது போராடி திரும்ப அரண்மனை அழைத்து வருவதாக சுத்தோதனருக்கு வாக்கு கொடுத்துவிட்டு வந்திருந்தனர். கபிலநகரின் சோகத்தை கூறலாயினர்.


                  சந்தகன் குதிரையோடு தலைநகருக்கு திரும்பிய போது நகர மக்களும் அரண்மனை ஆடவர், பெண்கள் அவனை பழித்து வெறுத்து பேசினர். அவன் அழுது கொண்டே சமாதானம் சொன்னான். ஆனால் யசோதரா உள்ளம் குமுறி கோபத்தால் "கொடியவனே என் நாதனை எங்கே விட்டு வந்தாய், இரக்கம் இன்றி எனக்கு துரோகம் செய்து அழைத்துப் போனதுக்கும் உன் கண்ணீருக்கும் என் சம்பந்தம்.. உன் செயலால் அரச வம்சத்திற்கே தாங்க முடியாத துயரம் வந்து விட்டது.!" என்று அழுது புலம்பினாள்.


                  சந்தகன் தேவியின் துயரம் தாங்காது நிகழ்ந்ததை விவரித்தான். "எல்லாம் தேவர்களின் செயல்..! என் செயலுக்கும் நான் பெறுப்பல்லை. என்னை செய்யும் படியாக தூண்டிய ஏதோ ஒரு கருவியாக நான் இருந்தேன். அரண்மனை கதவுகளையும், கோட்டை கதவுகளையும் திறந்து விட்டு அடைத்தது யார்..? கண்டகத்தின் குளம்புகளின் ஒசை கேட்காது தரையில் தேயாமல் ஓடும்படி செய்தது யார்..? ஆயிரக்கணக்கான காவலர் ஒரே சமயத்தில் உறங்கியது எப்படி..? என்னையும் கண்டகத்தையும் குறைகூறுவது வீண்பழியே ஆகும்..!" என்றான்.


    பச்சைக் குழந்தையையும் பரிதவிக்க விட்டு போனவர் மனம் இரும்பாகவே இருக்க வேண்டுமென தேவி கதறினாள். கன்றை பிரிந்த பசுவைப் போல் தாய் கெளதமி துடித்தாள். சுத்தோதனர் தனது சோகத்தை எல்லாம் அடக்கி கொண்டு தன் மைந்தன் மீண்டும் வர வேண்டுமென தவங்கிடந்தார். சந்தகன் தனியே வந்ததையும் மைந்தன் வனம் புகுந்ததையும் அறிந்து சித்தம் தடுமாற ஆரம்பித்தார். 


       குருவும் மந்திரியும் இத்தனையும் கூறி சில நீதிகளையும் சித்தார்த்தருக்கு விளக்கினர். "சிறிது காலம் ஆட்சி செய்துவிட்டு சாஸ்திரப்படி பின்னால் வனத்தை அடையலாம். அரசர் முதல் மக்கள் கடன் ஆற்ற வேண்டும், அரண்மனையிலேயே புலன் அடக்கத்துடன் உள்ளத்துறவு கொள்வதே சிறந்தது..!" என்று குலகுரு வற்புறுத்தினார். "நீ வெண் கொற்றக் குடையுடன் உன்னை ஒருமுறை கண்டு, அந்த மகிழ்ச்சியோடு நான் துறவு பூண்டு வனம் செல்ல வேண்டும்..!" என்று மன்னர் உனக்கு செய்தி அனுப்பியுள்ளார் என்றும் கூறினர்.


        சித்தார்த்தர் அரசரின் சோகத்திற்கும் மக்களின் துக்கத்துக்கும் நான் காரணம் இல்லை என்பதை விளக்கினார். "அறியாமையின் மயக்கத்திலே துக்கம் தோன்றுகிறது. உலகவிஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களே காலத்தை கவனிக்க வேண்டும். பேரின்பமான விடுதலைக்கு எக்காலமும் நற்காலமே. மரணம் காலத்தின் மீது முழு ஆதிக்கம் பெற்றிருப்பதால் மரணத்தை ஒழித்தால்தான் காலமும் மறையும்..!"


                    "செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்திற்கு இருப்பிடம். புத்திமான்கள் அங்கே வசிக்க மாட்டார்கள். அரசாட்சியையும் புலன் இன்பங்களையும் நான் புறக்கணித்து விட்டேன். சாந்தி நிறைந்த இந்த வனங்களை விட்டு மீண்டும் அரண்மனைக்கு வந்து இரவு பகலாக பாவ மூட்டைகளை பெருக்க நான் விரும்பவில்லை. மேலும் சாக்கிய மரபில் வந்த நான் முன்வைத்த காலை பின்வாங்குவது ஏளனமான இழி செயலே. அகத்திலே பேரின்ப ஆசையை வைத்து கொண்டு அரண்மனையில் வேடதாரியாக நடிக்க முடியாது. தீப்பற்றி எரியும் வீட்டில் இருந்து தப்பிய நான் மீண்டும் எவ்வாறு புகுவேன்..!"


                      "பிறப்பு, முதுமை, இறப்பு ஆகிய தீமைகளைக் கண்டு அவைகளால் விளையும் துக்கத்கதில் இருந்து தப்புவதற்காகத் துறவியான நான், மீண்டும் எவ்வாறு அவையுடன் குலாவுவேன். அரண்மனையில் இருந்து கொண்டே முக்தி பெற முயல்வது முடியாத காரியம். விடுதலை சாந்தியிலேயே விளையும், அரசனாயிருத்தல் துயரத்தையும் பாவத்தையும் பெருக்கிக் கொள்வதிலே முடியும். இவ்வாறு இருக்கையில் நான் எப்படி நாட்டுக்கு திரும்ப முடியும்..!" என்றார் சித்தார்த்தர்.


        சித்தார்த்தரின் காரணங்கள் பொருத்தமாக இருந்தாலும் வந்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதால் குருவும் மந்திரியும் மேலும் சிலதத்துவ நூல்களை எடுத்துரைத்தனர். "ஈசுவரனிடத்தில் இருந்தே சிருஷ்டி ஏற்படுவதால், ஜீவான்மா என்ன முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. உலகத்தை இயங்க வைப்பவனே அந்த இயக்கம் நிற்க வேண்டியதையும் கவனித்துக் கொள்வான்." என்றும் மேலும் பல விளக்கங்களை கூறினர்.


 சித்தார்த்தர் முடிவாக உறுதியாக கூறினார். "உண்மையாக உள்ளது எது என்பதை பற்றி நான் பிறருடைய கூற்றுக்களை நம்பியிருக்க முடியாது. தவத்தினால் அதைப் பற்றி அறிய கூடிய அனைத்தையும் நானே அறிந்து கொள்ள வேண்டும். நான் ஆராட்சியில்லாமல் ஏற்று கொள்வதற்கு இல்லை. பிறருடைய நம்பிக்கையில் எந்த அறிஞன் வாழ்வான். மனிதர் அனைவரும் குருடர் குருடருக்கு வழிகாட்டுவது போல குருட்டாட்டம் போடுகிறார்கள். எந்த சாஸ்திரமும் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. நம்பிக்கைக்கு உரியவர்கள் கூறியதே நன்மையாக இருக்கும்..!"


   "நம்பிக்கை என்பது மாசற்ற நிலையில் தோன்றுபவை. மாசற்றவர்கள் அசத்தியம் கூற மாட்டார்கள். ஆதலால் என் உறுதியை யாரும் கலைக்க முடியாது. கதிரவனே வானில் இருந்து மண்மீது விழுந்தாலும், இமயமலையே அசைந்தாலும் பெய்பொருளை அறியாது நான் அரண்மனைக்கு திரும்ப போவதில்லை. என் இலட்சியத்தை அடையாது அரண்மனைக்கு திரும்புவதை விட எரிகிற தழலில் மூழ்குவேன்..!" என்று இவ்வாறு கூறிய சித்தார்த்தர் அதை செயலில் காட்டுவதாக எழுந்து தனது வழியை நோக்கி நடந்து கொண்டு இருந்தார்.


   குலகுருவும் அமைச்சரின் கண்களிலும் மழைபோல கண்ணீர் பொழிந்து கொண்டு சித்தார்த்தர் செல்லும் திசையை அவர் மறையும் வரை பார்த்து கொண்டு நின்றனர்.


    அந்த உறுதியோடு காட்டு வழியாக இளவரசர் சித்தார்த்தராக ஓர் வனத்தில் புகுந்தவர் கெளதம பிக்குவாக வெளியே வந்தார். தேவர்கள் எல்லோரும் பூமாரி பொழிந்து வாழ்த்த,பெரும் தவமுனிவர் ஆனார். இனி அவரை கெளதமர் என்றே அழைப்போம்.

                                                                                (பெருந்துறவு தொடரும்..!)

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire