vendredi 17 février 2012

பெருந் துறவு. 5


                                                         சந்தகன் துயரம்

                    காலை இளம் பரிதி கீழ்த்திசையில் பல கோடி கதிர்களைப் பரப்பி கொண்டு இருந்த நேரம், கண்டகம் இரவு எங்கு நில்லாது இருபது மைல் தூரம் ஒரே பாச்சலாக அநோம நதிகரையை அடைந்தது. தாம் அடைய வேண்டிய கானகம் அதுவே என சித்தார்த்தர் கருதினார். குதிரையை விட்டு சந்தகனும் அவரும் கீழே இறங்கினர். உன்னால் எல்லாம் இனிதாகவே முடிந்தது என்று குதிரையை தட்டி கொடுத்து வாழ்த்தினார் சித்தார்த்தர் .


                          சந்தகனை் ஒப்பற்ற உதவியைச் செய்துவிட்டான். இதற்காக அவனைச் சித்தார்த்தர் பாராட்டினார். "உற்ற உறவினர் கூட ஒருவனுடைய அதிர்ஷ்டம் குறையும் போது வேற்றாராகி விலகிவிடுவார். நீயோ, பயன் கருதாமல், கடைசி வரை எனக்குப் பணிவிடை செய்து வந்திருக்கிறாய். உனக்கு நான் என்ன கைமாறு அளிக்க முடியும்..!" என்று கூறினார்.                 

                             இனி அவனை ஊருக்கு அனுப்பி விட வேண்டும் என்று கருதி "அன்பா நீ என்னிடம் பேரன்பு கொண்டு உதவி புரிந்தாய்! இந்த உதவி உனக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்மை விளைவிக்கும். இனியும் நீ ஓர் உதவி செய்ய வேண்டும். நான் அடைய வேண்டிய வணத்தை அடைந்து விட்டேன். இனி நீ குதிரையை அழைத்துக்கொண்டு நகருக்குத் திரும்பிவிட வேண்டும்.!" என்று அவனைக் கேட்டுக் கொ ண்டார். அவர் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி அவனுக்குப் பரிசாக அளித்தார். அரச உடைகளையும் மணிகள் இழைத்த உடைவாளையும் கழற்றிக் கொடுத்தார். பின்னர் மிகவும் ஒளிவீசிக் கொண்டிருந்த தமது முடிமணியையும் எடுத்து அவன் கையில் கொடுத்தார். அப்போது அவர கூறியதாவது..


                     "சந்தகா..! அரண்மனையிலே மன்னருக்குப் என் வணக்கம் கூறி, இம்மணியையும், மற்றவைகளையும் அவரிடம் எனக்காகச் செலுத்துவாயாக.. அவர் துக்கத்தை ஆற்றி, மேற்கொண்டு என் பொருட்டாக வருந்த வேண்டாம் என்று சொல்லவும். சுவர்க்க ஆசையினால் நான் இங்கு வரவில்லை. முதுமையையும் மரணத்தையும் வென்று அழிப்பதற்காகவே வந்துள்ளேன். என் பிரிவுக்காக நீயும் வருந்தலாகாது. சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் முடிவில் என்றாவது பிரியத்தான் வேண்டும். ஆதலால் விடுதலை வேட்கையோடு வந்துள்ள எனக்காக வருந்துவதை விட்டுப் புலனடக்கமில்லாது போகங்களில் ஆழ்ந்திருப்பவர்களுக்காக வருந்துவதே முறை..!"


                " என்றுமே மரணம் நம்மை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கையில், நாம் முந்திக் கொள்வதே முறையாகும். இவைகளையெல்லாம் என் தந்தையாரிடம் கூறுவதோடு, நீயும் உன் திறமையால் அவருக்கு நய உரைகள் சொல்லி, அவர் என்னை மறந்து விடும்படி செய்ய வேண்டுகிறேன். அன்புக்கு உரியவர் பிரிவதாலேயே துக்கம் வருகிறது. அன்பு அற்றவிடத்திலே துக்கமும் அற்றுப் போகும். உலகைக் காப்பதற்காகவே நான் உலகைத் துறக்கிறேன். என் இலட்சியத்தில் வெற்றி பெற்றால், என் வழியை உலகம் பின்பற்றும். உலகமே எனதாகும் என்பதையும் அரசரிடம் கூறு..!"


                                      இதுவரை அவர் சொல்லியபடியெல்லாம் சந்தகன்  செய்து வந்தான். அவர் கொடுத்த நகைகளையும் வாங்கி வைத்துக்கொண்டான். ஆனால் சித்தார்த்தர் ஒரே உறுதியுடன் முடிவாகக் கூறிய சொற்களை அவனால் தாங்க முடியவில்லை. அவன் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டிருந்தது. கைகளைக் கட்டிக்கொண்டு, அவன் மறுமொழி கூற முற்பட்டான். ஆனால் தொண்டை அடைத்து விட்டது. சிறிது நேரத்திற்குப்பின் அவன் மெல்லப் பேசலானான்.


               "உற்றார் அனைவருக்கும் துக்கத்தை அளிக்க தாங்கள் செய்யும் காரியத்தால், என் உள்ளம் தத்தளிக்கிறது. இரும்பு நெஞ்சு உடையவர்களையும் தங்களுடைய பிடிவாதமான  செயல் அழவைத்துவிடும். அப்படியிருக்கையில், அன்பினால் துடித்துத் கொண்டிருக்கும் இதயம் இத்துன்பத்தை எவ்வாறு தாங்தமுடியும். தாங்கள் அழைத்தவுடன் குதிரையை கொண்டு வந்தேனே அது நான் அல்ல விதி. மறுபடி எப்படி குதிரையை கொண்டு நகருக்கு போவது. சோகம் விளைவிக்கும் செய்தியோடு எப்படி போவது. தங்களின் தாயை, தந்தையை,தேவியை ஒருமுறை எண்ணி பாருங்கள், அவர்களை கைவிட துணியலாமா.. உங்கள் பாதத்தை சரணடைந்த என்னை கைவிடுவது நியாயமா..? கொடிய கானதத்தில் உங்களை தனியாக விட்டு செல்ல முடியுமா. நான் மட்டும் நகருக்கு சென்றால் அரசருக்கும் தேவிக்கும் என்ன பதில் கூறுவேன். என்மீது கருணை காட்டி உடனே வாருங்கள்..!"


                              சித்தார்த்தர் அவனுக்கு மேலும் புரிய வைப்பதற்காக பல நீதிகளை எடுத்து கூறினார். "பந்துகளிடம் பாசம் வைத்து வந்தாலும் பின்னாலில் மரணம் எங்களைப் பிரிப்பது உறுதி. இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டிய ஜீவன்களுக்கு மரணம் இயற்கை அல்லவா.! என்னை பெற்றெடுத்த தாயை எண்ணி பார். எங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது. நாம் சேந்து இருக்கிறோம் என்று எண்ணுவதே ஒரு கனவு. அப்படி இருக்கையில் யார் எமதாக முடியும். இதை உணராமல் ஒருவரை ஒருவர் நாம் ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். ஆதலால் நீ சோகத்தை விட்டுத் திரும்பி செல்.! பின்னாலில் ஒருமுறை வந்து பார்த்து கொள்.!"


                           "கபிலவாஸ்து மக்களிடம் என் உறுதியை கூறு, வயோதிகத்தையும் சாவையும் அழித்து கொண்டு அவர் விரைவில் வருவார். இல்லாவிட்டால் தம்மை தாமே அழிந்து விடுவார்  என்று தெரிவித்து விடு..!"


                         இந்த சொற்களை கேட்ட கண்டகம் அவர் பாதங்களை நாவினால் வருடி, கண்ணீர் துளிகள் வடித்தது. அதன் உணர்வை கவனித்த சித்தார்த்தர், "பரிகளுக்குரிய நன்றியை நீ நன்கு காட்டி விட்டாய். நீ செய்த சேவைக்கு விரைவில் பயன் பெறுவாய்..!" என்று கூறினார்.


                         பின்னர் சந்தகன் கையில் கொடுத்த உடைவாளை வாங்கி அதை தலைக்கு மேல் உயர்த்தித் தமது தலைமுடியை கையோடு சேர்த்து அறுத்தெடுத்து, அதை இடது கையால் ஆகாயத்தில் எறிந்தார். அந்த நேரத்தில் காவியுடை அணிந்த வேடன் ஒருவன் வந்தான். அவன் உடைக்கும் வில்லுக்கும் பொருத்தம் இல்லையென திகைத்தார் சித்தார்த்தர் . வேடனே அதை விளக்கினான். "காவியுடையில் தன்னை கண்ட விலங்குகள் துறவியென நினைத்து ஓடாமல் நின்றுவிடும். எனக்கு வேட்டையாட இலகுவாகி விடும்!" என்றான் வேடன்.


                                  அவ்வேடனுடைய காவியுடையிலே சித்தார்த்தர் கண்கள் பதிந்திருந்தன. "நாம் இருவரும் உடைகளை மாற்றி கொள்வோமா ..?" என்று இளவரசர் வேடனை கேட்டார். அவனும் சித்தார்த்தரின் வெண்பட்டு உடைக்கு ஆசைப்பட்டு ஏற்று கொண்டு மறைந்து விட்டான். அவன் போகும்முன் உயிர்வதை பாவம் என்று உபதேசம் செய்து அனுப்பினார். அவ்வேடனும் ஒரு தேவன் என்றே வரலாறுகள் கூறுகிறது.


                சந்தகன் அவருடைய கோலத்தை பார்த்து துக்கம் தாங்காமல் அழுது புலம்பினான். பிறகு குதிரையை அணைத்து அழைத்து கொண்டு நகரை நோக்கி திரும்பினான். வழியெங்கும் புலம்பி கொண்டே அடிக்கடி தவறி விழுந்து கொண்டே அவன் சென்றான். கண்டகமும் கண்ணீர் விட்ட படியே வள்ளல் நிற்கும் வனத்தை பார்த்து கனைத்து கொண்டே சென்றது. சித்தார்த்தர் காவியுடை உடன் சந்தகனுக்கு விடை சொல்லி விட்டு, அருகே இருந்த பார்க்கவரின் ஆச்சிரமத்தை நோக்கி நடக்கலானார்.

                                            
                                                                               (பெருந்துறவு தொடரும்.)

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire