lundi 6 février 2012

பெருந் துறவு. 2


                                                                         இரண்டு காட்சிகள் 

                                       மறுநாள் கோட்டை வாயிலில் அரசருடைய முத்திரையை காட்டியதும் காவலர்கள் நெடுங்கதவு திறந்து வழிவிட்டனர். காவலர் கூட அவர்களை அடையாளம் காண முடியவில்லை. நகர மக்களும் அவர்களை இனம் கண்டு கொள்ள முடிய வில்லை.  அதனால் அவர்களும் அமைதியாக நகர மக்களின் அன்றாடம் வேலைகளில் ஈடுபடும் வாழ்வியலை பார்க்க முடிந்தது. சித்தார்த்தருக்கு எல்லாம் புதுமையாகவே இருந்தது. அனைத்தையும் பார்த்த வண்ணம் உரோகினி நதிக்கு செல்லும் சாலைப் பக்கமாக திரும்பி சென்றனர்.


                              அந்த சாலை திரும்பியதும், தேவர்களின் சூழ்ச்சியால் நோயாளி ஒருவன் அவர்கள் முன் தோன்றினான். மெலிந்து, நலிந்து, வயிறு வீங்கியிருந்த அந்த நோயாளி தரைமீது தத்தளித்து கொண்டு இருந்தான். புற்களைப் பற்றி கொண்டு அவன் எழுந்திருக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. "அம்மா.. அப்பா.. யாரேனும் உதவமாட்டீர்களா..?"  என்று வேதனை தாங்காது மெல்ல கூவினான். சித்தாத்தர் ஒடிச் சென்று, மெதுவாக அவன் தலையை மடிமீது வைத்துக் கொண்டு, "உனக்கு என்ன செய்கிறது சகோதரா.. நீ ஏன் எழுந்திருக்க முடியவில்லை..?" என்று கேட்டார். சாந்தகனை பார்த்து "சந்தகா.. இவன் உடல் எல்லாம் நடுங்குகிறது.வாய் பேச முடியவில்லை.. கைகளும் கால்களும் காய்ந்த குச்சிகளாக இருக்கிறதே.. இவன் யார்..?" என்று கேட்டார்.

                                                 இவன் நோயாளி. ஏதோ ஒரு கொடிய நோய் பற்றி விட்டது. இவன் அங்கங்கள் எல்லாம் தளர்ந்து போய் விட்டன. இவன் சாகவேண்டியவன். ஆனால் பட வேண்டிய வேதனை எஞ்சியிருப்பதால் அந்த குறையையும் அனுபவிப்பதற்காக உயிரோடு இருக்கிறான். இளவரசே.. இவனை தாங்கள் தீண்டுதலும் ஆகாது. இவன் நோய் தங்களையும் பற்றி கொள்ளும். என்று கூறினான் சந்தகன்.

                                                                       "இந்த நோய் இவனுக்கு மட்டும் ஏற்பட்டதா..?  இல்லை எனில் எல்லோருக்கும் இது இயற்கையா..?"

                                                              "மனிதர் யாவருக்கும் நோய் பொதுவானது, அது பல உருவங்களில் தோன்றும். உடல் படைத்தவர் எல்லோரும் எந்த இடத்திலும் இதை எதிர்பார்க்க வேண்டியது தான்..!"

                          "நோய் வருவது முன்னதாக நமக்கு தெரியாதா..?"

                          "தெரியாது இளவரசே.. மறைந்திருந்து கொத்தும் நாகம் போன்றது நோய்..!"

                        "அப்படியானால் எல்லா மக்களும் நோய்களுக்கு அஞ்சித்தான் வாழ்கிறார்களா..?"

                        "ஆம் அரசே..!"

                                             "இந்த துயரை எல்லாம் பார்த்த பின்னும் இந்த மக்கள் புன்னகையோடு திரிவதை பார்த்தால் இவர்களின் அறிவு சிதறிவிட்டதாகவே தெரிகிறது. சந்தகா..! இந்த பிணிக்கு அப்பால் மனிதருக்கு என்ன நேரிடும்..?" என்று வினாவினார்.
                               
                                          "ஒரே முடிவுதான்.. மரணம்..!"

                                         "மரணமா..?"  

                               திடுக்கிட்டார் சித்தார்த்தர்.அந்த கேள்விக்கு பதில் சொல்வது போல சிறிது தூரத்தில் ஒரு சங்கின் அலறல் கேட்டது. ஒருவன் கைகளில் தீச்சட்டி ஏந்திவர அவனுக்கு பின்னால் நான்கு மனிதர்கள் ஒரு பாடையைத் தூக்கி கொண்டு வருவதையும் சித்தார்த்தர் கண்டார். சோகம் தேக்கிய முகங்களுடன் கண்ணீர் பெருகிக் கொண்டே வேறு சிலரும் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தார்கள்.

"இது என்ன ஊர்வலம் சந்தகா..?"

"எவனோ ஒரு ஏழை இறந்து விட்டான். அவன் உதிரம் உறைந்து விட்டது. கண்கள் பார்வையை இழந்து விட்டது. செவிகள் ஒலிகளை ஒழிந்தது. இப்போது அந்த உடல் மரக்கட்டை போலவே.. இனி அந்த உடலுக்கு இன்பமோ, துன்பமோ இல்லை. அதற்கு நீரும் ஒன்றுதான், நெருப்பும் ஒன்றுதான்..!"

                     "சாவு என்பது இவனுக்கு மட்டுந்தானா..? இல்லை எல்லோர்க்கும் ஏற்படுவதா..?"

                     "பிறந்தவர் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே, பலசாலிகள், வாலிபர்கள், வயோதிகர்கள், யாராக இருந்தாலும் முடிவு இதுதான் ..!"

                                                    இதை கேட்டதும் சித்தார்த்தருக்கு மூச்சு விடுவதே கடினமாகி விட்டது. மேலும் அவர் மனம் துயருற்று கலங்கியது. பதறிய குரலில் சில வார்த்தைகள் வெளிவந்தன. "உலக மக்களே..!எவ்வளவு அநியாயமாக நீங்கள் ஏமாறியிருக்கிறீர்கள்.. எந்த உடலும் சாம்பலாகி விடுவதை கண்ட பின்னரும், கருத்தேயில்லாமல் வாழ்கிறீர்களே..! இதயம் என்பது கல்லா கட்டையா..? எல்லாம் மறையும் என்ற உண்மையைப் பற்றி ஏன் சிந்திப்பதே இல்லை..?" என்று கண்ணீர் விட்டு கூறிக் கொண்டே வானத்தையும் பூமியையும் மாறிமாறி பார்த்தார். அந்த பார்வையில் ஏதோ உன்னத லட்சியம் உதயமாக தோன்றியது. சோலையிலே சிறிது நோரம் தங்கி இருந்தால் அவர் உள்ளம் மாறிவிடும் என்று சாந்தகன் வற்புறுத்தி அங்கே அழைத்து சென்றான்.


                                                 சோலையில் மன்னரின் ஆணைப்படி உதாயி என்ற தோழன் இசை, நடனகுழுவுடன் சித்தார்த்தனின் வரவை காத்திருந்தான். சித்தார்த்தர் அங்கு வந்ததும் இசையும் நடமும் ஆரம்பமாயின. ஆனால் மாநிலத்தின் சோகத்தை எல்லாம் தமது முகத்தில் தேக்கி வைத்து ஒரே சிந்தனையின் ஆழ்ந்திருந்தார் சித்தார்த்தர் .

                                                       அவரின் சோகத்தை அறிந்த உதாயி அருகே வந்து பல ஆறுதல் மொழிகள், நீதிகதைகளை எல்லாம் அவர் முன் விரித்துரைத்தான். சித்தார்த்தர் பொறுமையோடு கேட்டு விட்டு நான் உலகை உதறி தள்ளவில்லை. ஆனால் நிலையாமை ஒன்றே இங்கு நிலைத்து நிக்கிறது. ஆதலால் உலகப் பொருள்களில் நான் இன்பம் காண முடியவில்லை. என்று கூறிவிட்டு அந்தி மாலையானதும் நகரை நோக்கி அனைவரும் சென்றனர்.

                                                                  நகருக்குள் நுழையும் போது தூதுவர்கள் ஓடி வந்து, இளவரசருக்கு ஆண்மகவு பிறந்திருப்பதாக நற்செய்தியை கூறினார்கள். அதை கேட்ட சித்தார்த்தர், "மகனா.. எனக்கு மேலும் ஒரு தளை இராகுலன் பிறந்திருக்கிறான்..!" என்றார்.  வேதனையில் அவர் கூறிய பெயரே பின்னால் நிலைத்து விட்டது. இரவுமுழுவதும் உறக்கம் கொள்ளாது சிந்தித்து கொண்டே இருந்தார்.

                                                                             "இந்த உலகத்தின் துயரம் கடலைவிட பெரியது, ஆழமானது. துக்கத்துக்கும் மரணத்துக்கும் பாலம் அமைவது போல் வாழ்க்கை விளங்குகிறது. மோகம் ஊட்டும் இளமை முதுமையிலும், காதல் பிரிவிலும், வாழ்கை வெறுக்கதக்க மரணத்திலும் முடிகிறது. இந்த ஏமாற்றத்தில் நானும் இவ்வளவு காலமாக இருந்து விட்டேன். இதோ மறைந்திருந்த திரை கிழிந்து வீழ்ந்து விட்டது. எனக்கும் என்னைப் போன்ற சடலம் எடுத்தவர்களுக்கும் உதவியாக நான் உண்மையை உணர்ந்து கொள்வேன். தெய்வங்களை இரங்கி பயன் இல்லை. பிரமனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்த வேண்டும்..?" இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சித்தார்தரின் கண்கள் அன்று மலர்ந்த தாமரை மலர்களாய் தூக்கம் இன்றி இருந்தன..!

                                                                              (பெருந் துறவு தொடரும்..!)

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire