mercredi 8 février 2012


                                                                      கடைசிக் காட்சி


          அப்போது பூக்கள் பூத்து நறுமணம் வீசிக்கொண்டு இருந்த வசந்த காலம். சித்தார்த்தர் மீண்டும் வனங்களை சென்று பார்க்க வேண்டுமென ஆசை கொண்டார். கொஞ்சும் கிளி, கூவும் குயில், வண்டுகளின் இசை இவை மனதுக்கு அமைதி தருமென தந்தையிடம் அனுமதி வேண்டினார். அரசரும் மகிழ்ந்து பரிவாளங்களுடன் அனுப்பி வைத்தார். குதிரையில் சித்தார்த்தர் ஏறி சென்றார்.

                  சாலையின் இருமருங்கிலும் உழவர்கள் கழனியில் உழுவதை பார்வை இட்டு கொண்டு வனத்தை அடைந்தார். வனத்தை அடைந்ததும் குதிரை விட்டு இறங்கி அங்கே தமது தோழர்களை ஒர் இடத்தில் இருத்தி விட்டுச் சிறிது தூரத்துக்கு அப்பால் சென்று, இலைகள் அடர்ந்த ஒரு நாவல் மரத்தை அடைந்தார். இயற்கையின் சாந்தி அவர் உள்ளத்திலும் நிறைய சிந்தனையை தொடர்ந்தார்.

                     மரணத்தால் விளையும் அழிவுகள் தெளிவாய் விளங்கின. "இங்கே என்னை போன்ற தன்மையுள்ளவரை நான் வெறுத்து ஒதுக்குவது அழகாகுமா, அது நியாயமா.. இவ்வுடலோடு வாழ்வது சிறை வாழ்வை ஒத்ததே.. சிறையில் அடைபட்டு துயரில் வாழ்பவன் விலங்குளை உடைத்து தப்பி செல்லவே துடிப்பான். அதேபோல் பிறவி தோறும் எல்லையற்ற துன்பம் நிறைந்த சிறையே மனிதனை எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இந்த அறிவை விட்டு மதி மயங்கி திரியும் மக்கள் நற்கதி பெறுவது எங்கனம்..?"  என்று சிந்தித்தார். அப்போது காவி உடை அணிந்த துறவி ஒருவர் யாரும் அறியா வண்ணம் அவர் முன் தோன்றினார்.

                     சித்தார்த்தர் "யார் நீங்கள்..?"
                 
                "நான் சிராமணன். முக்தி வழிநாடி என் வீட்டை விட்டு வெளியேறியவன். எல்லா பொருட்களும் அழிவை நோக்கியே செல்கின்றன, நான் அழிவில்லா ஆனந்தத்தை நாடுகிறேன். அதுவே ஆதியும் அந்தமும் இல்லாத வாழ்வு. உணவுக்காக பிச்சை எடுத்து கொண்டு ஒரு குகையில் என் குறிகோளை அடைய ஏகாந்தமாக வாழ்கிறேன்."

                               "இன்பங்களின் வெறுமையை கண்டு கொண்டேன். வாழ்கைகூட தாங்க முடியாத துயரமாகி விட்டது, சஞ்சலமிகுந்த உலகில் சாந்தி பெறமுடியுமா..?"

                         "உயிர்கள் வேதனைகளில் உட்பட்டு இருக்கிறது என்றால் அவை இன்பத்துக்கும் ஆற்றல் உடையவையே.. ஆனால் நாம் கண்ணை திறந்து கண்டு கொள்ள வேண்டும். பாவத்தை கழுவி நீக்குவதற்கு நித்திய ஆனந்த நிருவாண நிலையை தேடுவாயாக..!"

                 "தாங்கள் இந்த நேரத்தில் கூறியது எனக்கு நற்செய்தி ஆகும். ஆனால் உலக சம்பந்தமான கடமைகளை பெருமை அளிக்கும் வகையில் நிறைவேற்ற சொல்லி என்  தந்தையார் எனக்கு அறிவுறுத்துகிறார்..!"

                   "உண்மையான ஆன்மீக வாழ்வுக்கு ஒவ்வாத காலம் எதுவுமே இல்லை என்பதை நீ உணர்ந்திருக்க வேண்டும்..!"


                     சித்தார்தரின் உள்ளத்தில் திடீரென்று உவகை மலர்ந்தது. "சத்தியத்தை நாட, பாசங்களை அறுத்து கொள்ள, ஆரணியத்தில் திரிந்து அரும் பசி தீர்க்க, விடுதலை மார்க்கத்தை அடைய இதுவே தருணம்..!" என கூறி கொண்டார். 

                       துறவி வேடம் பூண்ட தேவரும் "ஆம் உண்மையை நாடுவதற்கு இதுவே தருணம். சித்தார்த்தா.. வெளியே சென்று உன் இலட்சியத்தை நிறைவேற்று. உலகை காப்பாற்ற வந்த இரட்சகன் நீ.. இடைவிடாமல் உன் கடமையை உறுதியுடன் செய்து வந்தால் நீ தேடுவதை அடைந்தே தீருவாய்..!" என கூறிவிட்டு அவர் விரைவாக வானத்தில் பறந்து மறைந்தார். சித்தார்தரின் மனம் அமைதி கொண்டது.  தோழர்கள் தங்கியிருந்த இடத்துக்கு சென்று மீண்டும் தமது பரியின்மீது அமர்ந்து நகரை நோக்கி சென்றார்.

                      அரண்மனையை அடைந்த சித்தார்த்தர். அரசரிடம் சென்று, "மன்னா.. எனக்கு வரம் ஒன்று வேண்டும். நான் முக்தியை நாடி துறவியாக விரும்புகிறேன். உலகில் எல்லாம் முடிவில் பிரிந்தே செல்கிறது. பிரிவே எனக்கும் ஏற்பட்ட விதி. ஆதலால் நான் வனம் செல்ல அன்புடன் விடைதர வேண்டும்." என்று வேண்டினார்.

                                அம்மொழி கேட்ட மன்னர் பதறிவிட்டார். கண்ணீர் விட்டு நடுங்கியபடி "என் அருமை குமரா.., இந்த எண்ணம் வேண்டாம். துறவு வாழ்கைக்கு இது ஏற்ற பருவமன்று. ஆசைப் புலன்களை உடைய இளைஞன் தவத்திற்கேற்ற உறுதி இன்றி திரும்பி விடுவான். நாயகமே.. எனக்கு வயதாகி விட்டது. நாடாளும் பொறுப்பை உன்னிடம் தந்து விட்டு, நான் தவம் செய்ய செல்கிறேன். உன் எண்ணத்தை கைவிட்டு விடு..!"

                             இளவரசர் பதிலுரைத்தார், "அரசே.. நான்கு விஷயங்களை நிறைவேற்றி கொடுத்தால் நான் வனம் செல்ல மாட்டேன். என் வாழ்கையில் மரணம் நேரலாகாது, என் உடல் நலத்தை நோய்கள் கெடுதலாகாது, என் இளமையை முதுமை வந்து பாழாக்கக் கூடாது. என் இன்பத்தை பீடை எதுவும் குலைத்து விட கூடாது..!"

                                 வேந்தர் "வேண்டாம் கண்ணே.. நாட்டை விட்டு அகலும் எண்ணத்தை, அகற்றிவிட இயலாத செயல்களில் முனைந்து நிற்பது ஏளனமாகும்.!" என்று கூறி விட்டு மெளனமானர்.

                           "நான் கேட்டதை செய்ய இயலாது போனால், என் வழியை தடை செய்யலாகாது! உலகில் எல்லோரும் பிரிய வேண்டியவர்களே. அந்த பிரிவை யாரும் தடுக்க முடியாது. அதற்கு முன்னதாக இப்போது பெரியதோர் இலட்சியத்துக்காக நானாக பிரிவை வேண்டுகிறேன்.!" என்று உறுதியுன் நின்றார். அவருடைய உறுதியை கண்ட அரசர் மேற்கொண்டு வாதாடுவதில்  பயனில்லை என்று கருதி, "உன் பிரிவு உசிதமில்லை..!" என்று மட்டும் கூறி நிறுத்தி கொண்டார்.

                    கனிகிற துயரோடு கண்ணீர் பெருகிக் கொண்டிருந்த தந்தையரை காண சகிக்காமல், சித்தார்த்தர் தமது அரண்மனைக்கு திரும்பினார். சுத்தோனர் முக்கியமான பிரதானிகளை அழைத்துப் பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளை நீதி நூல் முறைப்படி சித்தார்தருக்கு எடுத்து உரைக்கும்படி அனுப்பி வைத்தார். வழக்கம் போல இளவரசரின் அரண்மனைக்கு வெளியேயும், நகர வாயில்களும் அதிக காவலர்களும் நியமிக்கப் பெற்றனர். மன்னரின் சகோதரர்களும் காவலை நேரிற்சென்று கண்காணித்து வந்தனர்.

                      மாலை அகன்று இரவு வானவீதியில் முழுமதி தண்ணொளி பரப்பி கொண்டு இருந்தது. அரண்மனையில் வழமைக்கு அதிகமாகவே மேனகை போன்ற பெண்களின் நடனங்கள் வீணை இசைகளும் அரங்கேறின. ஆனால் ஆடலும் பாடலும் திடீரென்று தேவர்களின் சூழ்ச்சியால் நிறுத்தப்பட்டு இருந்த இடங்களிலேயே அமர்ந்து அயர்ந்து விட்டனர்.  தோகை கொண்ட தோகையரை ஏறிட்டு பார்த்தார் சித்தார்த்தர்.

              அலங்கோலமாக துயில் கொண்ட நங்கைகளை பார்த்து, பாவம்.., பசும் பொன்னால் செய்த உயிர் பாவைகள் போன்ற பெண்கள் உறக்கம் வந்ததும் எவ்வளவு அலங்கோலமாக காட்சியளிக்கிறார்கள். இவர்களில் மயங்கும் ஆண்கள் இப்போது இவர்களின் எழிலை பார்த்தால்.. உண்மை நிலை அறிந்து கொள்வார்கள். என்று அவருக்கு தோன்றியது. 

                        மெதுவாக இசை மண்டபத்தின் அருகே இருந்த மணவறைக்கு போனார். அங்கு தேவி யசோதரை மலரணைமீது துயின்று கொண்டு இருந்தாள். அவள் பக்கத்தில் வாடிய முளரிபோல், இராகுலன் கண்ணயர்ந்துதிருந்தான். அன்னையின் மலர்க்கரம் அவன் தலைமீது கவிந்திருந்தது. கண் இமைக்காது சிறிது நேரம் மெளனமாக பார்த்து கொண்டு இருந்தார் சித்தார்த்தர். 
                                 
                                                                               (பெருந் துறவு தொடரும்..!)


               (புத்த சரிதத்தில் மனித சக்திக்கு அப்பாற்ப்பட சம்பவங்கள் அதிகமாகவே இருக்கின்றன. புத்தரை ஏற்று கொண்ட பகுத்தறிவாளர்கள் அவற்றை எவ்வாறு எடுத்து கொள்வார்களோ எனக்கு தெரியாது. அதற்காக சரித்திரத்தை மாற்றி அமைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.)

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire