dimanche 5 février 2012

பெருந் துறவு. 1


                                                                                   முதற் காட்சி

                                                       சித்தார்த்தருக்கு வயது இருபத்தொன்பது ஆயிற்று. இவ்வுலக மூப்பு, பிணி, சாக்காடு எதுவும் அறியாமல் மாபெரும் மாளிகையில் மங்கையரின் மையலிலும் இசை வெள்ளத்திலும் மூழ்க வைத்திருந்தார் பேரரசர் சுத்தோதனர் . நாடு, மக்கள், தொழில்கள், வனங்கள், விலங்குகள் எதையும் நேரில் பார்க்காதவாறு சிறைப்பட்டு இருந்தார் சித்தார்த்தர்.                                               
                                                     ஒருநாள் இரவில் அந்தப்புரத்தில் சித்தார்த்தர் அமர்ந்திருந்த போது தேவகீதம் ஒன்று வெளியே இருந்து பூங்காற்றாய் அவர் காதில் இவ்வாறு விழுந்தது. "காற்றை போன்றது ககன வாழ்கை .. எவ்வளவுதான் உறுதியாக பற்றியிருப்பினும்.. இந்த வாழ்வு இறுதியில் உழுத்து போகும்.. நாம் எங்கிருந்து வந்தோம்..  எதற்காக வந்தோம்.. எதற்காக செல்கிறோம்.. என்ற செய்திகளை அறியாமல் மன்பதையெல்லாம் மயக்கி நிற்கின்றது.. மாநிலத்தின் துயரை எல்லாம் மாற்ற வந்துள்ள ஞானகதிரான சித்தார்த்தர் மேற்கொண்டு காலங்கடத்தாமல் துயில் நீங்கி துள்ளியெழுந்து வரவேண்டும்..!" என்று மெல்லிய இசையாக வந்தது.                            

                                                             இதை கேட்டதும் சித்தார்த்தருக்கு நிலை கொள்ளவில்லை. இதோடு பணிப்பெண் ஒருத்தி கூறிய கதைகளால் நாடு,நகரம்,நதி,ஏரி, சோலை எல்லாம் சிறிது நேரமாவது காணவேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டார். மகனின் ஆசையை கேள்வியுற்ற சுத்தோதனர் உடனே அதற்காக நகரம் எங்கும் விழாகோலமாக அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். அத்தோடு வழியெங்கும் சோகமோ,துயரமோ விளைவிக்கும் காட்சி எதுவும் இருக்க கூடாது என்றும்,  கூன்,குருடர், முடவர், நோயாளர் யாரும் வீதியில் வராதவாறு தடை செய்ய ஆணையிட்டார். நான்கு வெள்ளை புரவிகள் பூட்டிய தேர் தயாராக வந்து நின்றது. சுத்தோதனரிடம் ஆசி பெற்று ரதத்தில் புறப்பட்டார் சித்தார்த்தர்.                                              
                                             
                                                              திரள்திரளாக மக்கள் வந்து இளவரசரை வாழ்த்தினார்கள். எங்கும் மலர்ந்த முகங்களாய் விளங்கின. வாழ்த்தொலிகள் முழங்கின. எங்கும் மகிழ்ச்சியே நிறைந்து இருந்தது. அது சித்தார்த்தர் முகத்திலும் நிறைந்து இருந்தது. ரதம் நகரவாயிலை அடைந்ததும் ஒரு சோலையை கண்டதும் அந்த சோலையை நோக்கி ரதத்தை செலுத்தும் படி சாரதி சந்தகனிடம் கூறினார். ரதம் சோலை நோக்கி திரும்பியது.   அந்த நேரத்தில் தேவர்களில் ஒருவன் சாலை ஒரத்தில் வயோதிக பிச்சைக்காரனாக காட்சி யளித்தான். அவனது ஒட்டிய உடலும், சுருங்கிய தோலும், நரைத்த முடியும், குழிவிழுந்த கண்களும் பார்க்க பயங்கரமாக இருந்தன. கையில் கோல் உடன் கூனிய படி இரும்மி கொண்டே பிச்சை கேட்டான். இளவரசர் வருகிறார் என்று அவனை மக்கள் மறைத்தனர். ஆனால் அதற்குள் சித்தார்த்தர் தெளிவாக கண்டு கொண்டார்.

                                          அவர் சாந்தகனை பார்த்து, "இவன் எத்தகைய மனிதன்.. இவன்  வெப்பத்தால் உலர்ந்தானா.., அல்லது பிறவியிலேயே இப்படிதான் பிறந்தானா..?" என்று கேட்டார். சாரதி திடுக்கிட்டு உண்மையை சொல்ல அஞ்சினான். ஆனால் கிழவன் உருக்கொண்ட தேவனின் ஆற்றலால் அவன் உண்மையை கூறினான்.

                                              "இவன் வயதான கிழவன். நெடுநாள் வாழ்ந்ததால் ஆற்றல் வத்திவவிட்டது. நரம்புகள் தளர்ந்து விட்டது. இவனும் குழந்தையாக இருந்து வாலிபனாகி இப்போது முதுமையை அடைந்து விட்டான்." சித்தார்த்தரின் முகம் வாட்டமடைந்தது. உள்ளம் உருகியது. மீண்டும்.. "இது இவனுக்கு மட்டுந்தானா.. அல்லது எல்லோர்க்கும் இதே கதி தானா.. எனக்கும் வருமா..யசோதரையும் நரையும் திரையும் அடைவாளா..?" என்று கேட்டார். சாரதி சொன்னான். "ஆம் இளவரசே.. பிறவி எடுத்த அணைவருக்கு உண்டு.. இளமை மறைந்து முதுமை ஏற்படுவதே இயற்கையின் விதி..!"

                                                          இதைக் கேட்டதும் சித்தார்த்தரின் சித்தமே சோகத்தில்  கலங்கிவிட்டது. பெருமுச்சு விட்டு அந்த வயோதிகனையும் மக்களையும் பார்த்தபடி கூறினார். "முதுமை எல்லோரையும் அழித்து விடுகிறது.. நமது அழகு, வீரம், நினைவு எல்லாம் தொலைத்து விடுகிறது.. இதை அறிந்த பின்னும் உலகம் கவலையின்றி காலம் கழித்து வருகிறதே.. தனக்கும் ஏற்படபோகும் கதி கண் முன் அறிந்தும் எந்த சலனமடையவில்லையே.. முதுமை பற்றிய சிந்தனைகள் உள்ளத்தில் குமுறுகையில் சோலையிலே சென்று என்ன காட்சி காணப்போகிறோம்.. ரதத்தை அரண்மனை நோக்கி திருப்பி விடு..!" என்றார். அரண்மனை நோக்கி ரதம் திரும்பியது.

                                             அரண்மனை சென்ற சித்தார்த்தர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். எவரும் எந்த பொருளும் இன்பமளிக்கவில்லை. உணவு உறக்கமின்றி இரவுமுழுதும் சிந்தனையில் ஆழ்ந்தார். இதை கண்டு சுத்தோதனர் மிகவும் வருந்தினார். 

                                                   சித்தார்த்தர் மீண்டும் நகரையும் பூஞ்சோலையும் பார்த்து வரவேண்டும் என தந்தையிடம் வந்து கேட்டார். முன்னறிவிப்பு இல்லாமல் எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் அவர் மாறுவேடத்தில் சுற்றிவரத் தீர்மானித்திருந்தார். அரசரும் வெளியே சென்றால் மகனின் கவலை குறையுமென எண்ணி சம்மதித்தார். மறுநாள் நண்பகலில் சித்தார்த்தர் ஒரு வணிகனை போலவும், சந்தகன் வணிகனின் பணியாளராக வேடமிட்டு புறப்படலாயினர்...!                           

                                                                                              (பெருந் துறவு தொடரும்..!)


(சித்தார்த்தர் ரதத்தில் புறப்பட்ட அன்றே நான்கு காட்சிகளையும் கண்டார், என்று மிகசுருக்கமாக எழுதுவதற்காக கற்பனை செய்து கொண்டு மாற்றி விட்டனர். புத்தசரித்திர விரிவான நூலில் இவ்வாறு இருப்பதை சான்றோர்கள் அறிவார்கள். அதன்படியே சுருக்கமாக வர்ணைகளை மட்டும் குறைத்து நான் எழுதுகிறேன்.)

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire