mardi 17 janvier 2012

வார்த்தைகள் பலவீனமானவை.

கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.


துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"


எமக்கு ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் எமது எண்ணங்கள் விபரீதமாக தோன்றி அந்த எண்ணங்கள் எம்மை பந்தபடுத்தி கொண்டே இருக்கின்றன.. ஆனால் புத்தரை போன்ற ஞானிகளை எந்த கர்மாக்களும் பந்தபடுத்துவதே இல்லை.. இதைதான் கிருஷ்ணர் கீதையில் ப்ரதிகர்மா என்று கூறுகிறார்.. கீதை நான்கு கர்மாக்களை கூறுகிறது.. கர்மா, அகர்மா, விகர்மா, ப்ரதிகர்மா..



நான் ஒரு சுத்தமான கண்ணாடி.


ஒருமுறை புத்தரை,இளைஞன் ஒருவன் சந்தித்தான்
அந்த இளைஞனுக்கு இவர்தான் புத்தர் என்று தெரியாது
புத்தரின் முகத்தில் இருந்த ,பிரகாசமும்
தோற்றத்தில் இருந்த பொலிவும்,
அந்த இளைஞனைப் புரட்டிப் போடும் அளவுக்கு கவர்ந்துவிட
பரவசப்பட்டுப்போன அவன் ,புத்தரிடம் கேட்டான்
"நீங்கள் கந்தர்வ லோகத்தை சேர்ந்தவரா?"
புத்தர் "இல்லை" என்று பதில் சொன்னார் .
"அப்படி என்றால் தேவலோகத்தில் இருந்து வருகின்றீர்களா?"என்று கேட்டான்
புத்தர் "இல்லை"என்றார்
"பின்னே இந்த பூலோகத்தைச் சேர்ந்த மனிதர்தானா?"என்றான்
புத்தர் "இல்லை"என்றார்
இளைஞன் பொறுமை இழந்துவிட்டான்
"பின்பு யார்தான் நீங்கள்?"என்றான்
"இந்த கேள்வியை ஆரம்பத்திலேயே கேட்டிருக்கலாமே இளைஞனே?"
என்று சொல்லிவிட்டு,புத்தர் சொன்னார்
"நான் ஒரு சுத்தமான கண்ணாடி "
புத்தரின் இந்த வாக்கியம் மிகவும் பிரசித்தமானது.
இதன் அர்த்தமோ மிகவும் ஆழமானது

"திறமைசாலி" என்று நம்மை ஒருவர்,ஒரு வார்த்தை பாராட்டினால்
நாம் என்னவெல்லாம் நினைக்கிறோம்?
"இவன் நம்மை அறிவாளி என்கின்றான் "
"விஷயம் தெரிந்தவன் என்கின்றான்"
"புத்திசாலி என்கின்றான்"
"சாணக்கியன் என்கின்றான்"
"வித்தை தெரிந்தவன்என்கின்றான் "
"நம் அறிவை இவன் வியக்கிறான்"
என்று, அவன் சொன்ன ஒற்றை வார்த்தையின்மீது,
ஓராயிரம் புகழ் வார்த்தைகளை அடுக்கிப்பார்த்து மகிழ்ந்து போகிறோம்
அதே போலவே "முட்டாளே ......"என்று யாராவது நம்மை திட்டிவிட்டால்
இந்த வார்த்தையின்மீது ஓராயிரம் இகழ்வார்த்தைகளை அடுக்கிப்பர்த்து
சோர்வடைந்து விடுகிறோம்
ஆனால் புத்தர் சொன்ன மாதிரி ,
நாம் வெறும் கண்ணாடியாக மட்டும் இருந்தால் ,
எதிராளி சொன்ன வார்த்தைகளை மட்டுமே பிரதிபலிப்போமானால்
"வார்த்தைகளில், எழுத்துக்களில் இருக்கிற
இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து,
சொல்லப்படாத அர்த்தங்களைத்
தேடிக்கொண்டிருக்க மாட்டோம் ..

அன்புடன் தபோ.

ஒரு கம்பளிப்பூச்சி.


                         ஒரு கம்பளிப்பூச்சி மற்ற கம்பளிப்பூச்சிகளைப் போலவே உண்ணவும் உறங்கவும் மட்டுமே தான் உதித்ததாக அது எண்ணிக் கொண்டிருந்தது. ஆனாலும் அது மகிழ்ச்சியின்றி இருந்தது. தன் வாழ்க்கையில், இன்னமும் தான் உணராத ஒரு பரிமாணம் இருப்பதை அது எப்படியோ பிறகு உணர்ந்து கொண்டது.

                                        ஒரு நாள், ஒரு விநோதமான ஏக்கத்தில், அசைவற்றும் அமைதியாகவும் இருக்க அது முடிவெடுத்தது. ஒரு மரத்தின் கிளையில் தொங்கிய அது, தன்னைச்சுற்றி ஒரு கூட்டை கட்டிக் கொண்டது. வசதியின்றி இருந்தபோதும், அந்தக்கூட்டுக்குள், விழிப்புணர்வுடன் காத்திருந்தது. அதனுடைய பொறுமை கடைசியில் பலன் கொடுத்தது. ஒரு நாள் அந்தக் கூடு வெடித்து அழகான, கண்ணைப் பறிக்கும், இறக்கைகளுடன் வெளிவந்து வானத்தை வட்டமிட்டது. இப்போது அது வெறுமனே புழுவாக இருப்பதிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திரமாகவும் எல்லையற்றதாகவும், அழகானதாகவும் ஆகி விட்டது.

                                    ஒரு முறை மாற்றம் நிகழ்ந்தபிறகு, அந்த வண்ணத்துப்பூச்சி, மீண்டும் புழுவாக மாறவே முடியாது. அது, கூட்டுக்குள் இருந்தபோது, தன் உள்நிலையுடன் ஒன்றிணைந்து இருந்தது.
அதுவே, அது, தன் இறுதி இயல்பை அடையக் காரணமாக இருந்தது. அந்தக் கூட்டுக்குள் அதற்கு என்ன நிகழ்ந்ததோ அதை யோகாவாக சித்தரிக்க முடியும். எல்லையற்றதாக மாற, எப்போதும், யோகா ஒரு வழியாக இருக்கிறது.

முக்தி.


ஒரு நாள் புத்தரிடம் அவருடைய சீடர், ""எவர் வேண்டுமானாலும் முக்தி அடையலாம் என்று நாள்தோறும் உபதேசம் செய்கிறீர்கள். இது எப்படி சாத்தியம் ஆகும்?'' என்று கேட்டார்.

"நல்லது! நீ இந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களின் விருப்பம் என்ன என்பதை அறிந்து வா!'' என்று அனுப்பினார். சீடரும் ஆர்வத்துடன் ஊர்முழுக்க விசாரித்துவிட்டு புத்தரிடம் வந்தார்.
"குருவே! மக்கள் அனைவரின் விருப்பமும் சொத்து, சுகம், பதவி, பணம் என்று தான் இருக்கிறதே ஒழிய யாரும் முக்தியை விரும்புவதாய் தெரியவில்லை'' என்று சொன்னார்.

"பார்த்தாயா? எந்த விஷயத்திலும் முதலில் ஆர்வம் இருந்தால் தான் அதைப் பற்றிய தேடுதல் உண்டாகும். எதை விரும்புகிறோமோ அதைத் தான் அடைய முடியும். பொருளைத் தேடுபவன் பொருளை அடைகிறான். ஆனால், உலகில் உள்ள அனைவரும் முக்தியடையத் தகுதி பெற்றவர்கள் தான். ஆனால், யாரும் அதை மனதால் கூட விரும்பத் தயாராய் இல்லை. அவ்வளவு தான்!'' என்று பதில் அளித்தார்.

சீற வேண்டிய நேரத்தில் சீறு.


                                                       ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு கொடுமையான நாகபாம்பு.. வழியிலே யாரையும் செல்லவிடாது.. அங்கு சென்ற பலரை தீண்டி கொண்றது.. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
                             
                                      அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது.. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய்.. கொலையாளி ஆகி என்ன  அடையப்போறாய்.. அதில் என்ன பயன்.." என கூறி அதற்கு தியானம் கற்றும் கொடுத்தார்.. அன்றில் இருந்து அந்த நாகம் தியானம் செய்ய தொடங்கியது..!

                                   யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள்  தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள்.. அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
                                        
                                                         ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது.. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து.. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுத்தாத தன்மை அடைந்ததால் "நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்" என்றது.. "அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு.." என கேட்டார்.. உள்ளூரில் இருப்பவர்கள்  என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
                          
                                                               "உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே.. சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல.. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய்.. நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள்.." என கூறி  அன்போடு தடவி விட்டு போனார் குரு..
            
                                           ஆம்.. நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள்..


அன்புடன் தபோ..

samedi 7 janvier 2012

அழகிக்கிழவி.

இராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழவி என்னும் கிழவி வசித்து வந்தார். ராஜா இவ்வளவு பெரிய தொண்டு செய்யும் போது என்னால் எதுவுமே கடவுளுக்கு செய்ய முடியவில்லையே என்று கவலையோடு இருந்தார். அப்பொழுது ஒரு சிறுவன் "கொழுத்தும் வெயிலில் நாக்கு வறண்டு விட்டது கொஞ்சம் மோர் கொடேன்.." என கேட்டு குடித்து விட்டு போனான். உடனே அந்த கிழவிக்கு சிற்பிகளுக்கு மோர்கொடுக்கலாம் என மனதில் ஒன்று பட்டது. அது போலவே தினமும் கோயில் கட்டும் சிற்பிகளுக்கு மோர் கொடுத்து வந்தார்.

சிற்பிதலைவர் கிழவியை பார்த்து கேட்டார் "கொழுத்தும் வெயிலில் எமக்கு மோர் கொண்டுவந்து தருகிறாயே உனக்கு எதாவது நாம் செய்ய வேணும் போல் உள்ளது எதாவது கேள்..?" என்றார். "எனக்கு ஒன்றும் வேணாம் சிப்பியே.. என் முத்தத்தில் ஒரு பெரியகருங்கல் இருக்கிறது அதை இந்த கோயில் கட்டும் பணிக்கு எடுத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்..! என்றார். உடனே சிற்பிகள் அந்த கல்லை யானையால் கட்டிஇழுத்து கொண்டுவந்து கோபுரவிதானத்துக்கு அழகாக அமைத்தார். 

கோவில் கட்டும் பணிநிறைவேறி கும்பாபிஷேகத்துக்கு முதல்நாள் சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார்.. "அழகிக்கிழவியின் நிழலில் நாம் இருப்பதில் பெருமை அடைகிறேன் மன்னா.." என்றார். கண்விழித்த சோழன் காலை யாரந்த அழகிக்கிழவி என்று அறிந்து கிழவியின் குடிசைக்கு சென்று அழகிக்கிழவிடம் "நாம் கட்டிய கோவிலைவிட தமது நிழலில் இருப்பதால் பெருமை என்று கூறினார். என்ன செய்தீர்கள்..?" என்று கேட்டார். கிழவி நடந்தவற்றை விளக்கினார். இறைவன் "அன்பெனும் பிடியினுள் அகப்படும் மலை என்பதை உங்களால் அறிந்தேன்.." என்று கிழவியை வணங்கிவிட்டு புறப்பட்டார் மன்னர். அழகிக்கிழவி ஆனந்தகண்ணீர் வடித்தார்.

இன்று இந்த அழகிழவி குடிசை இருந்த இடத்தில் அழகிக்குளம் என்று கோவிலுக்கு பக்கத்தில் அழியாது நிக்கிறது.
 

நான் என்னோடு சில நிமிடங்கள்.

(இந்த கட்டுரைக்குள் நீங்கள் போகும் முன் நான் சிலவற்றை கூறவேண்டும்.. இது ஆத்மஞானத்தை ஒரு எளிய நடைமுறையில் விளங்கி கொள்வதற்கான என் சிறுமுயற்சி.. லெளகீகமான வாழ்விலே மகிழ்ச்சியும் திருப்தியும் காண்பவர்கள் இதோடு நிறுத்தி கொண்டு வேறு பக்கம் திரும்புவது நல்லது.. ஏன் எனில் இதை உங்களால் புரிந்து ஏற்று  கொள்வது மிகவும் கடினம். மேலே செல்லும் என் ஆன்மீகநண்பர்கள்..நான் என்னோடு பேசிவதாய் எண்ணிகொள்ளாமல் நீங்கள் உங்களோடு பேசுவதாய் எண்ணி மகிழ்ச்சியாக செல்லுங்கள்..)

தாயின் கருவறையில் இருந்து வந்து கண்கள் திறந்ததும்  இந்த உலகைக் கண்டேன்.. எனக்கென அம்மா, அப்பா, சகோதரர், உறவினர், நண்பர்கள் ஆசிரியர் என பலர் சூழ என் உலகம் சுழன்று எந்த கவலையும் இன்றி அந்த குழந்தை பருவம் கடந்தும் போனது..!
                     
அதன்பின் வாழ்வின் பல இன்பதுன்பங்கள் வந்துபோக உலகை அறிந்து வென்று விட்டதாய் இந்த நிலையில் நின்று  நான் என்னோடு சில நிமிடங்கள் பேசுகிறேன்..!

நான் அனைத்தும் அறிந்து  விட்டேன்....!

இல்லை..! நீ சொல்வது பொய்.. அப்படியானால் ஏன் இன்னமும் உன் மனம் அச்சத்திலும் முழுமை அடையாத போராட்டங்களாகவே உள்ளது..? நிம்மதி ஏன் அவ்வப்போது வந்து மறைகிறது.. அந்த மகிழ்சியான உன் பிஞ்சு குழந்தை பருவம் ஏங்கே போனது..?

இந்த பெரிய உடல் பெற்றதால் அது தொலைந்து போனது..!

தினமும் நீ உண்ட உணவு கொடுத்ததுதானே இந்த உடல்..

ஆம்..ஆனால் என்னுடைய உணவுதானே..?

இல்லை.. அது இந்த பூமியுடையது.. பூமி கடன் கொடுத்த உணவின் இருப்பிடமான
உன் உடலை பிணமாக வாங்கிறதே..!

அப்படியால் இந்த உடல் எனதல்ல என்பது உறுதி.. அப்படியானால் மனம்தான் நானா.. ?

இல்லை இல்லை..அது எப்படி சாத்தியம்..உன் உடலின் புலன்களால் புகுந்தவைதானே உன் மனதில் இருக்கிறது.. நீ பார்த்ததும் கேட்டதும் படித்ததும் நுகர்ந்ததும் சுவைத்ததும் என ஏராளமாய் இருக்கிறது.. ஆழமாய் பார்.. அவை உன் சமூகத்தில் உன்னை கடந்து போனவர்கள் போட்ட குப்பைதொட்டியாகத்தான் இருக்க முடியும்..

ஆம் அதிலும் என்னை காணவில்லை.. ஞானியர்கள் சொன்னது சரிதான்.. மனிதன் தன்னை தானே வருத்தி கொள்கிறான் என்பது.. அது நான் இல்லாத மனம்தான்.. அப்படியானால் நான் என்பதே சுயமாக இல்லையா..?

ஏன் இல்லை.. இருக்கிறதே.. இல்லாவிட்டால் தூக்கத்தில் உன் புலன்களுடன் மனமும் தூங்கியபின்.. எப்படி உன்னால் அங்கே உயிரோடு இருக்க முடிகிறது.. ஆம்.. அதுதான் உன்னுடைய சுயமான நான்.. ஆனால் தூங்கிக்கொண்டு இருக்கிறது..

ம்.. அறிவுக்கு எட்டினாலும் அனுபவத்தில் உணர முடியவில்லையே..?

ஏன் முடியாது அதற்குதான் பகவான் ரமணர் ,புத்தர் போன்றோரின் வழி இருக்கிறதே..!   

ஆனால் அந்த வழியில் சென்றால் என் கடமை என்னாவது.. என்னை நம்பி இருப்பவர்கள் என்னாவது..? அதை மரணம் நெருங்கும் போது பாக்கலாம்..

உன் மரண திகதி கையில் வைத்திருக்கிறாயா.. தினமும் உன் மரணம் நெருங்கிறது.. நினைவு இருக்கட்டும்.. பறவாய் இல்லையா..? இந்த உலகில் வாழ்ந்த பல கோடி பேர்களை திரும்பி பார்..! மரணத்தின் போது பிறந்தோம் உண்டோம் தூங்கினோம் இனம்பெருக்கினோம் இப்போ எங்குபோகிறோமென தெரியாமல் பயந்த படியேதான்  போய் இருக்கிறார்கள்.. இதற்கு எதற்கு உனக்கு உயர்ந்த மனிதபிறவி..? இதை உன்னை விட அற்ப பூச்சிகள் சிறப்பாக செய்கிறதே..?

ஏன்  அடுத்தவர்களுக்கு சேவை செய்வதற்காக இருக்காதா..?

ஆம்.. அது உயர்ந்ததுதான் .. ஆனால் நீ மரணத்தை தொடும் போது நீயும் இங்கே வாழ்ந்து விட்டு போன பலகோடி பேர்களில் ஒருவனாய் தானே  மரணிப்பாய்..  புத்தர் போன்ற மகான்கள் கூட சேவைசெய்வதை விட தன்னை காண்பதிலேயே தன்னை அர்ப்பணித்து இருக்கிறார்கள்.. உழைத்து அடுத்தவர்களுக்கு கொடுப்பதே சிறந்தாக இருந்து இருந்தால் அவர்கள் எழிதாய் செய்திருக்க முடியுமே.. அதை பொருட்படுத்தாமல் ஏன் பிச்சை பாத்திரம் ஏந்த வேண்டும்.. அதைவிட தனது ஆன்மாவை அறிவதே உயர்வு என்பதால் தானே..  அதனால்தான் பலகோடிபேர் வாழ்து விட்டு போன உலகில் தன் உடலுக்கு மரணத்தை கொடுத்து விட்டு போனார்கள் அவர்கள்.. நீயும் அதை அறிய வேண்டாமா..?

அது என்னால் முடியுமா..?

ஆம் உன்னாலும் முடியும்.. அதற்கு தேவையான ஆர்வம் தான்
உன்னிடம் அதிகம் இருக்கிறதே..!

அன்புடன் தபோ..

vendredi 6 janvier 2012

கோபம்.

கெளதம புத்தர் தனது சிஷ்சியரான ஆனந்தாவுடன் பிட்ஷை எடுக்கபோனார். ஒரு வீட்டில் பிட்ஷை கேட்ட போது ஒரு பெண் "முட்டாளே உனக்கு பிட்ஷை எடுக்க வெட்கமாக இல்லையா..?"" என்று பலவாறு திட்ட தொடங்கினாள். ஆனந்தாவுக்கு மிகவும் கோபம் வந்தது .. அந்த பெண்ணை திட்ட முயன்றார். புத்தர் ஆனந்தாவை தடுத்து அவ்விடத்தில் இருந்து எதுவும் பேசாது விலகி வந்த பிறகு.. தனது திருவோடை ஆனந்தாவிடம் கொடுத்து "இதை மாலைப்பொழுதில் திருப்பி கொடு..!" என்றார். 


மலைபொழுது வந்ததும் ஆனந்தா புத்தர் கொடுத்த திருவோடை திருப்பி கொடுத்தார். அதற்கு புத்தர் "இல்லை இதை நீயே எடுத்து கொள்..!"என்றார்.


இரவானதும் தூங்கச்செல்லும் முன் ஆனந்தாவை பாத்து "இந்த திருவோடு யாருடையது..?" என்று கேட்டார் . "என்னுடையது..!" என்றார் ஆனந்தா. "அது எப்படி எனது திருவோடு உனது ஆனது..? எனகேட்டார். "நான் திருப்பி தரும்போது நீங்கள் ஏற்கமறுத்து விட்டீர்கள் அதனால் என்னுடையது ஆனது..!" என்றார் ஆனந்தா.


"இதே போல் தான்.. அந்த பெண் திட்டிய வார்த்தைளை நான் வாங்கி கொள்ளவில்லை.. அந்த வார்த்தைகள் அவளிடமே போய் சேர்ந்தது..!" என்றார் புத்தர்.சொல்லால்மட்டும் மல்லாமல் செயலாலும் புரியவைத்தார் புத்த பெருமான்.


யாராவது நம்மை முட்டாள் எனகூறினால் அதை ஏற்றுகொண்டு கோபப்பட்டு அதை உறுதிசெய்வதற்கு வாதம் செய்து கொண்டிருப்பதை நாம் உணர்வதே இல்லை.


அன்புடன் தபோ.

mercredi 4 janvier 2012

சுமைகளையும் சுகமாக்குங்கள்.

               ஜென் குருக்கள் தங்களின் தனிப்பட்ட தன்மையில் ஜென் மார்க்கத்தை பரப்வுவது அவர்களின் சிறப்பு . அதனால் ஒவ்வொரு குருக்களுக்கும் தனிச்சிறப்பு இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். அதில் ஜென்குருவான ஹீயூட்டி என்பவரின் எனக்கு மிகவும் பிடித்த  ஒரு சம்பவத்தைதான் உங்களுக்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

                                                 ஹீயூட்டி யாருக்கும் போதனைகள் கொடுப்பது இல்லை.  ஒரு  பெரியசாக்கு பையை சுமந்து கொண்டு போவார் . அதில் இனிப்புகளே அதிகம் இருக்கும். அவர் போகிற கிராமத்திலும் நகரத்திலும் அவரை குழந்தைகள் சூழ்ந்து கொள்வார்கள். இனிப்புக்களை அந்த குழந்தைகளுக்கு கொடுப்பார். யாராவது போதனை கேட்டால் எதுவும் பேசாது சிரித்துவிட்டு போவார்.

                                                                 ஒரு நாள் இவரது குருவான என்பன் தன்னிடம்   ஜென்னை கற்றுவிட்டு போய் இன்னமும் எதுவரை  ஹீயூட்டி கடைபிடிக்கிறார் என்பதை அறிய அவரை தேடி சென்றார்.அவரை கண்டதும் என்பன் மகிழ்ச்சியோடு  ஜென் என்றால் என்ன..  என்று கேட்டார். உடனே ஹீயுட்டி தன் தோலில் இருந்த சாக்குப் பையை கீழே போட்டுவிட்டு நிமிர்ந்து நின்றார். மகிழ்ச்சி கொண்ட என்பன் அடுத்து ஜென்னின் நோக்கம் என்ன.. என்று கேட்டார்..  ஹீயூட்டி மீண்டும் தன் சாக்குபையை தோலில் போட்டு கொண்டு சிரித்து கொண்டே போனார்.. தன் சீடன் ஜென்னில் பூரணமாய் இருப்பதை அறிந்து புன்முறுவலோடு என்பன் திரும்பினார்.

                                              உங்களுக்கும் புரிந்திருக்கும் அல்லவா.. ஆம் நம்மவர்களும் இதைதான் சொன்னார்கள்.. முதலில் உன் சுமைகளை எல்லாவற்றையும் இறக்கி வைத்து விட்டு.., நீ உன்னை கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்து விடு.. உன் முழுமையான  சுதந்திரத்தை அடை.. அதன் பிறகு அதனுடைய நோக்கம் உன்  சுமைகளை  மறுபடியும் எடுத்து பார்..  இப்போது  அதிகமான சுமையும் உன்னால் சுமக்க முடியும் என்பதை அறிவாய்..  ஏன் என்றால் இருப்பது போல் இருக்கிறது.. ஆனால் இல்லை என்ற தெளிவு மிகதெளிவாக தெரியுமல்வா உங்களுக்கு..


உன்னையறி.

அமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை "இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை" என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டது. தாயார் கவலை கொள்ளாமல் வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாய்யின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.. பின்னாளில்  ஆராட்சிகளில் ஈடுபட்டு   விஞ்ஞானியானார்.

இன்றும் அக்டோபர் 21ம் திகதி மாலை 9:59க்கு வீதி பயணவிளக்குகளை தவிர மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும்அணைத்து ஓருநிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.. "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருந்து இருக்கும்.." என்று.

மேலே நான் கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாலில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் அல்வா எடிசன் ஆவார். ஆகவே நண்பர்களே..நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள்.. உங்களை நீங்களே நிர்ணயபடுத்துங்கள். உங்களிடம் திறமை இருக்கிறது.. அதை பட்டை தீட்டுங்கள்.


mardi 3 janvier 2012

சமநிலை.

                                  ஒருவர் தன்வீட்டில் பூனையொன்றை வளர்த்து வந்தார்.. ஒரு நாள் எலியை பிடித்து கொன்று தின்றபோது மிகமகிழ்ச்சி யடைந்தார்.. அடுத்தநாள் அவர் அன்பாய் வளர்த்துவந்த கிளியை திடீர்என பூனை கவ்வி கொன்றது.. காப்பாற்வதற்குள் அந்த கிளி இறந்து போனது.. மிகவும் வேதனைப்பட்டு பூனையை திட்டி தீர்த்தார்... அழுது புலம்பினார்.. என்னொருநாள் முற்றத்தில் நின்ற சிட்டு குருவியை பாய்ந்து கவ்வி கொன்றதை கண்டார். அப்போதுதான் பூனை எதையாவது கவ்வி கொன்று தின்னும் என்பதை உணர்ந்தார்..


                                            இங்கே இவரை கவனித்தீர்களா.. தனக்கு எதிரியான எலியை கொன்றபோது மகிழ்ந்தும்.. தனக்கு அன்பான கிளியை கொன்றபோது வேதனையடைந்தும்.. தனக்கு வேண்டாத சிட்டுகுருவியை கொன்றபோது அது பூனையின் இயல்பு என்றும் கவலையோ மகிழவோ இல்லை. இதுதான் நாம்.. எமக்கு வேண்டாதவைக்கும் வேண்டியவைக்கும் இழக்கும் போது மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.. இது உலக இயல்பு என்பதை உணர்ந்து கொண்டால் நாம் இன்பத்துக்கு இன்ப படாமலும் துன்பத்துக்கு துன்ப படாமலும் யை அடையமுடியும்..


அன்புடன் தபோ.

எதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.

           ஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற பசு.., சாணத்தை அந்த குருவியின் மீது போட்டுவிட்டுச் சென்றது.. சாணத்தின் வெதுவெதுப்பில் குருவி உணர்வு பெற்று கீச்.. கீச்.. என்று கத்தியது.. அந்த பக்கமாக வந்த கழுகு ஒன்று குருவியின் சத்தம் கேட்டு சாணத்தை கிளறிக் குருவியை கொத்திப் போனது..!

புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் மீது சாணத்தை வீசுபவர்கள் உங்கள் எதிரியும் அல்ல.. அதில் இருந்து மீட்டு எடுப்பவர்கள் நண்பர்களும் அல்ல..!

lundi 2 janvier 2012

சிறந்த சீடர்.

புத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப்பப் புத்தராலேயே அனுப்பப்பட்டவர் அவர். எங்கிருந்த போதும் புத்தர் இருக்கும் திசை நோக்கிக் கை கூப்புவார். தரையில் விழுந்து வணங்குவார் அவர். மக்கள் ஆச்சரியப்படுவார்கள். "ஐயா.. தாங்களோ ஞானம் பெற்ற குரு.. தாங்கள் ஏன் இன்னமும் வணங்குகிறீர்கள்..?" என்று அவரிடம் அதிசயமாக வினவுவார்கள். "உங்களுக்கு புரியாது.. ஒரு புழுவை அழகிய வண்ணத்துப் பூச்சியாக்கியவர் அவர்தான்..! அவர் உள்ளவரை அவரை வணங்காமலிருக்க என்னால் முடியாது தவிரக் குரு என்பதோ சீடன என்பதோ அரசன் ஆண்டி என்ற ஏற்றத்தாழ்வு கொண்டது அல்ல.. அது எப்படியாயினும் அவர் இருக்கும் திசை நோக்கி  வணங்காமல் என் நாள் துவங்குவதே இல்லை..!" என்று பதில் சொல்வார் அவர்.

                                                        புத்தரின் இறுதி நெருங்கியது.. மகா காஸியபனை அழைத்து வர ஆணையிட்டார் புத்தர். சீடர்கள் பல திசையிலும் தேடி விரைந்தனர்..

                                          புத்தர சொன்னார்.. "ஆனந்தா.. காஸியபன் என்னைப் பிரிய விரும்பவேயில்லை.. நான் தான் அவனை அனுப்பினேன்.. அவன் அறியாலல் நான் இந்த உலகை விட்டுப் போகக்கூடாது என்று அவன் கேட்டுக் கொண்டான்..! நான் நாளை புறப்பட்டு விடுவேன்..! நாளை அதிகாலைக்குள் அவன் வராவிட்டால் நான் மரணத்திடம் சற்று நேரம் தாமதிக்கும்படி கெஞ்சவேண்டும்..! நான் யாரிடமும் எதுவும் கேட்டதேயில்லை.. ஆகவே அவனை விரந்து அழைத்து வர ஏற்பாடு செய்..!"

                காஸியபன் வந்து சேர்ந்ததும்.., புத்தர் மகிழ்ச்சியுடன்.., "காஸியப்பா.. நீ வருவாய் என்று நான் அறிவேன்.. என்னைச் சங்கடப்பட விடாமல் வந்து விட்டாய்.. நல்லது.. மரணமே..இனி நீ வரலாம்..!" என்றார்.

                                       புத்தரின் அத்தனை சீடர்களும் சுற்றி நின்று பாத்திருக்க.., மகாகாஸியபனின் மடியில் புத்தரின் உயிர் பிரிந்தது.. எவருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் எப்படி அவருக்கு கிடைத்தது..

                                                             காஸியபர் மட்டுமே கடைசி வரையிலும் சீடராகவே விளங்கினார்.. மற்றவர் வெளியே சென்றதும் அவரவரும் குருவாக மாறினார்கள்.. அதனால் தங்கள் குருவை மறந்தனர்.. அவர் வெளியே போனபின்பும் சிறந்த சீடராகவே இருந்தார்.. இப்போது புத்தருக்குப் பின் அவரே குரு..!

                       குரு என்பது ஒரு பொறுப்பு.. பெரும் பதவியல்ல.. அதை அடைய துடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. தகுதி உள்ளவர்க்கு தானே வரும்..! 

அன்புடன் தபோ.

வாழ்வு ஒரு பெரும் கடல்.

அப்போது புத்தபெருமான் ஞானத்தை தேடி திரிந்த காலம்.., அவரின் உறவினர் ஆன ஆனந்தர்  வந்தார்..! அவர் புத்தரிடம்.., "சித்தார்த்தா.. நீ ஞானம் பெற்ற பின் குருவாகி விடுவாய்..! அப்போது நான் சொல்ல முடியாது.., அதனால் இப்போதே சொல்கிறேன்.. நான் உன் ஒன்றுவிட்ட தமையன்..! எனக்கு மூன்று வாக்குறுதிகள் நீ கொடுக்க வேண்டும்..!" என்றார். வியப்புடன் "என்ன அவை..?" என்று புத்தர் கேட்டார்.

                                                 "முதலாவது தூங்கும் நேரம் உற்பட நான் எப்போதும் உன்னோடுதான் இருப்பேன்.., இரண்டாவது என்னை போதனை செய்வது உட்பட எந்தகாரியத்துக்காகவும் யாருடனும் உன்னைவிட்டு போக  அனுமதிக்க கூடாது.., மூன்றாவது.. நான் யாரை அனுப்பினாலும் அவர்களுக்கு ஆசிதர மறுக்ககூடாது..!" என்றார். புத்தர் மென்சிரிப்புடன் சரியென தலையசைத்தார்.

நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடன் இணைபிரியாமல் நிழல்போலவே இருந்தார் ஆனந்தர்.. புத்தர் மரணமடையும் நாள் வந்தது. அன்றுதான் ஆனந்தர் வேதனையை அனுபவித்தார்.

                                         "உங்களின் பார்வையே பலபேருக்கு ஞானத்தை கொடுத்தது...! உங்களிடம் இத்தனை ஆண்டுகள் இருந்தும் எனக்கு ஞானம் வரவில்லையே..? நீங்கள் போனபின் எனக்கு நற்கதி ஏது..?" என்றார் வேதனையுடன். புத்தர் சொன்னார்.. "ஆனந்தா.. வாழ்வு ஒரு பெரும் கடல்.. அதை எப்போது கடைந்தாலும் ஞானம் திரண்டு வரும்.. ஒருவேளை நீ ஞானம் அடைவதற்கு நானே தடையாக இருந்து இருக்கலாம்.. நான் போனபின் நீ ஞானம் பெறவும் முடியும்..!"

"நீங்கள் எனக்கு தடையா..?" என்று அழுதார் ஆனந்தர்.

                                        "ஆம்.. நீ மூன்று நிபந்தனைகளை போட்டாய்.. அது உனக்கே தடையாக மாறும் என்பதை அறிவேன்.. நீ என்னைவிட மூத்தவன் என்ற நினைவில் இருந்தாய்..! உனக்கு மட்டுமே நான் வாக்கு கொடுத்திருப்பதாக எண்ணமும்.., நான் உன்னுடனே இருக்கிறேன் என்ற கர்வத்தை தந்தன.. உன் பெருமிதம், கர்வம், மூத்தவன் என்ற இந்த மூன்றும் சுவராக மாறி உனக்கு ஞானம் அடைய விடாது தடுத்து விட்டது. அந்த தடை நீங்குவதே நல்லது..!" என கூறி விட்டு புத்த பெருமான் மறைந்தார்.

                    புத்தரின் மறைவுக்கு பின் பெளத்த மகாசங்கம் கூடியது. ஆனந்தர் ஞானம் பெறவில்லை என்பதால் அவரை கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. அவர் மண்டபத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டார்.

                                    இந்த நிலையில் கடும் தியானத்தில் இறங்கினார் ஆனந்தர்.. நேரம் ஆக ஆக தியானத்தை கடுமைப்படுத்தினார்.. ஆனால் பயன் அற்ற நிலையில் அவரது மனம் வேதனையில் கண்ணீர் வழிந்தோட உடல் குலுங்க விம்மி.. விம்மி.. அழுதார். விடியற்காலை முயற்சிகள் அனைத்தையும் விட்டுவிட்டு.. மெல்ல தலை சாய்த்தார்.. அந்த கணத்தில் மின்னலென ஞானம் உதித்தது.

             மனம் கரைந்த நிலையில்.. கண்ணீர் ஆணவத்திரையை அகற்ற.. தான் என்ற நிலையற்று ஞானியானர் ஆனந்தர்.

                உள்ளிருந்த வந்த வயோதிக ரிஷி.., "நாற்பத்திரண்டு ஆண்டுகளாக பெறாததை ஒரே நாளில் பெற்று விட்டாயே..!" என்று பாராட்டி ஆனந்தரை உள்ளே அழைத்து போனார்.

அன்புடன் தபோ.. 

கணப்பொழுது

கெளதம புத்தர் மரத்தடியி நிழலில் சாந்தமாக இருந்தார்.. அவரை சுற்றி சீடர்கள் உற்கார்ந்து அவர்  முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர்.. மெளனம் கலைத்ததாய் புத்தர் அவர்களை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார்.

                      "ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்..?"
                                   
சீடர்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். அதிலும் இப்படி புத்தர் ஏன் திடீரென இப்படி ஒரு சாதாரண  கேள்வியைத் தங்களை பார்த்து கேட்க வேண்டும் ? எது எப்படி என்றாலும் கேள்விக்கு பதில் அளித்தாக வேண்டுமே..
                              
                               "எழுபது வருடங்கள்..!" என்றான் ஒரு சீடன்.
                              
                               "தவறு..!" புத்தரின் குரல் மென்மையாக வந்தது.
                              
                                "அறுபவது வருடங்கள்.." என்றான் மற்றோரு சீடன்.
                             
                                 "இதுவும் தவறு..." அதே இனிய குரலில் புத்தர்.
                                                                 
                        இவை அனைத்தும் அதிகம் போலும் என எண்ணிய வேறொரு சீடன் "ஐம்பது வருடங்கள்.." என்றான்.
                                      
                               "இதுவும் தவறு.." என்று புன்னகை பூத்தார் புத்தர்.

                            சீடர்களுக்கு எதுவும் விளங்கவில்லை..சிறிது நேரம் அவர்களையே பார்த்து கொண்ருந்த புத்தர்..,

                               "ஒரு மூச்சு விடும் நேரம்..!" என்றார் புன்முறுவலுடன்.

                           சீடர்கள் வியப்படைந்தனர்.. !"மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தானே..!" என்றான் ஒரு சீடன் ஆச்சரியத்துடன்.

                                            "உண்மை.. மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தான்..! ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது..! ஆகவே ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்..! அந்த கணத்தில் முழுமையாக வாழவேண்டும்..!"  என்றார் அதே புன்முறுவலுடன் புத்தர் பெருமான்.

உண்மைதானே.. நாம் கடந்த கால மகிழ்ச்சியிலும்.. எதிர்கால அச்சத்திலும்.. வாழ்கிறோம்.. அதிலே பல கோட்டை விட்டவர்களே நாம். ஆனால் ஞானிருக்கோ நேற்று இறந்து போனது.. நாளை காணவே முடியாது.. நிகழ்காலம் மட்டுமே நமது ஆழுமைக்கு உற்பட்டது என்பதை ஆழமாக உணர்ந்தவர்கள் அவர்களே..!

அன்புடன் தபோ. 

ஆபத்து எங்கே இருக்கிறது.

ஒரு முறை பிரெஞ்சு ராணுவத்தின் ஜெனரல் செரின் தன் சிப்பாய்களை எதிரிகள் முகாமை ஒட்டியிருந்த இடிபாடுகளில் நடத்திக் கொண்டிருந்தார்.. "சீரான வேகத்தில் நடந்து  இந்த ஆபத்தான பகுதியைக் கடந்துவிட வேண்டும்..!" என்று சிப்பாய்களிடம் அவர் சொன்னார்.
                                                                        "சொல்வது சுலபம்.. உங்களுக்கென்ன.. வசதியாக குதிரை மீது  அமர்ந்து வருகிறீர்கள்.. நடப்பவர்களுக்கு இருக்கும் ஆபத்தைப்பற்றி உங்களுக்கு எங்கே தெரியபோது..!" என்று ஒர் சிப்பாய்  முணுமுணுத்தான். இது செரினின் காதில் விழுந்ததுவிட்டது. அவர் குதிரையில் இருந்து இறங்கினார்.. அந்த சிப்பாய்யைக் குதிரையில் வரச் சொல்லிவிட்டு, அவர் மற்றவர்களுடன் நடந்தார்.

                                                                    சிறிது தூரம் கூட கடக்கவில்லை.. எதிரி முகாமில் இருந்து துப்பாக்கிகள் வெடித்தன.. நடந்து சென்று கொண்டு இருந்த சிப்பாய்கள் சட்டென்று குனிந்து படுத்து தோட்டாக்களிடம் இருந்து தப்பினார்..  குதிரை மீது அமர்ந்திருந்த சிப்பாயின் நெஞ்சில் தோட்டா பாய்ந்தது..

                                                             "உயரத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்தில்லை என்று நினைப்பது எவ்வளவு தவறு என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.. கவனம் எங்கு குறைவாக இருக்கிறதோ அங்கேதான் ஆபத்து இருக்கிறது..!" என்றார் செரின்.  ஏனுங்.. இப்போ உங்களுக்கும் ஆபத்து எங்கே இருக்கென்று புரிந்திருக்கனுமே..

அன்புடன் தபோ. 

அற்ப விடயங்கள்.

ஆற்றங்கரைக்கு தன் மகனை அழத்துப் போயிருந்தார் ஒருவர்.    அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய கற்களை காண்பித்தார் . "இந்த பையை அந்த கற்களால் நிறப்பு.." என்றார். மகன் நிறப்பி எடுத்து வந்து.. "இதற்கு மேல் நிறப்ப முடியாது.." என்றான். அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டு குலுக்கினார். அவை கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லாது போனது.

                          "இப்போதாவது நிறம்பிவிட்டதாக ஒப்பு கொள்வீர்களா.." கேட்டான் மகன். தந்தை   அங்கிருந்த மணலை அள்ளி பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார். கற்கள், குழாங்கற்கள் இவற்றுக்கிடையில் இருந்த இடைவெளியிகளில் மணல் இறங்கியது. "இதே பையை மணலால் நிறப்பி இருந்தால் பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா.." "இருந்திருக்காது.." என்று ஒப்புக்கொண்டான் மகன்.

                                            "வாழ்வை மேம்படுத்தக் கூடிய அன்பு, கருணை, உடல்ஆரோக்கியம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்களை போன்றவை.. தொழில், இல்லம், செல்வம் போன்றவை கூழாங்கற்களுக்கு சமனானவை.. கேளிக்கை, நகைசுவை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை என்றார் தந்தை.

                           முதலில் பெரிய விடயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடு.. அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். உன் சக்தியை அற்பமான விஷயங்களுக்கு செலவழித்தால் முக்கியமான விடயங்களுக்கு இடம் இருக்காது என்பதை இச்சிறுகதை சிறந்த எடுத்து காட்டுகிறது.

அன்புடன் தபோ.

நாம் இடும் முடிச்சு.

உபதேசத்துக்காக விடியகாலை வந்த புத்தர்.. தனது சீடர்கள் முன்னால் கையில் ஒரு சிறு துணியுடன் வந்து அமர்ந்தார்.. எதுவும் பேசாமல் அத்துணியில் ஜந்து முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர். ஐந்து முடிச்சுகளை போட்டபின்பு பேச தொடங்கினார் புத்தர்..

"நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன்.. இதை அவிழ்க்கப்போகிறேன்.. ஆனால்.. அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன்.. இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி.. முன்பு இருந்த துணிதானா..? அல்லது வேறு துணியா..?"

ஆனந்தா எழுந்து,  ஒருவகையில் எல்லாமே ஒன்றுதான்.. முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றேதான்.. முடிச்சுகளில் மட்டுமே வேறுபாடு.. ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது அவ்வளவே... முன்பு இருந்த துணி சுதந்திரமானது.. முடிச்சுகள் விழுந்ததும் இதன் சுதந்திரம் போய்விட்டது.. இப்போதுள்ள துணி அடிமையாகி இருக்கிறது.. என்றார்..

அதற்குப் புத்தர்...
“ஆம் ஆனந்தா.. நீ சொன்னது சரியே... ஒரு வகையில் ஒரே துணிதான். மற்றொரு வகையில் வேறுபட்டுள்ளது.. எல்லோரும் இயல்பில் சுதந்திரமானவர்கள் தான்..! முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர். அதனால் தனித்தனி உலகங்களாகவே மாறிப்போய்விடுகின்றர்.. சரி எனது அடுத்த கேள்வி...
இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்யவேண்டும்..?

சாரி எழுந்தார்...
“குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்கவேண்டும்.. முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளது என்று அறியாதவரை.., அவற்றை அவிழ்க்கவும் வழியில்லை.. முடிச்சுப் போடப்பட்டதற்கான முறையை அறிந்தால் அவிழ்க்க எளிதாக இருக்கும்.. நெருங்கிப் பார்த்து அறியாமல் எதுவும் செய்ய இயலாது.. நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும்.. நினைவின்றி விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவையே. .சில நேரம் அவிழ்க்கவே முடியாமல் போய்விடும் என்றார்.

அதற்கு புத்தர்..
“சாரி.. நீ மிகவும் சரியாகச் சொன்னாய்.. அதுதான் வாழ்க்கை.. அதுதான் வாழ்க்கையின் சிக்கல்..“ என்றார் புத்தர்.

நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான்.. நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம்..


அன்புடன் தபோ..