lundi 2 janvier 2012

வாழ்வு ஒரு பெரும் கடல்.

அப்போது புத்தபெருமான் ஞானத்தை தேடி திரிந்த காலம்.., அவரின் உறவினர் ஆன ஆனந்தர்  வந்தார்..! அவர் புத்தரிடம்.., "சித்தார்த்தா.. நீ ஞானம் பெற்ற பின் குருவாகி விடுவாய்..! அப்போது நான் சொல்ல முடியாது.., அதனால் இப்போதே சொல்கிறேன்.. நான் உன் ஒன்றுவிட்ட தமையன்..! எனக்கு மூன்று வாக்குறுதிகள் நீ கொடுக்க வேண்டும்..!" என்றார். வியப்புடன் "என்ன அவை..?" என்று புத்தர் கேட்டார்.

                                                 "முதலாவது தூங்கும் நேரம் உற்பட நான் எப்போதும் உன்னோடுதான் இருப்பேன்.., இரண்டாவது என்னை போதனை செய்வது உட்பட எந்தகாரியத்துக்காகவும் யாருடனும் உன்னைவிட்டு போக  அனுமதிக்க கூடாது.., மூன்றாவது.. நான் யாரை அனுப்பினாலும் அவர்களுக்கு ஆசிதர மறுக்ககூடாது..!" என்றார். புத்தர் மென்சிரிப்புடன் சரியென தலையசைத்தார்.

நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடன் இணைபிரியாமல் நிழல்போலவே இருந்தார் ஆனந்தர்.. புத்தர் மரணமடையும் நாள் வந்தது. அன்றுதான் ஆனந்தர் வேதனையை அனுபவித்தார்.

                                         "உங்களின் பார்வையே பலபேருக்கு ஞானத்தை கொடுத்தது...! உங்களிடம் இத்தனை ஆண்டுகள் இருந்தும் எனக்கு ஞானம் வரவில்லையே..? நீங்கள் போனபின் எனக்கு நற்கதி ஏது..?" என்றார் வேதனையுடன். புத்தர் சொன்னார்.. "ஆனந்தா.. வாழ்வு ஒரு பெரும் கடல்.. அதை எப்போது கடைந்தாலும் ஞானம் திரண்டு வரும்.. ஒருவேளை நீ ஞானம் அடைவதற்கு நானே தடையாக இருந்து இருக்கலாம்.. நான் போனபின் நீ ஞானம் பெறவும் முடியும்..!"

"நீங்கள் எனக்கு தடையா..?" என்று அழுதார் ஆனந்தர்.

                                        "ஆம்.. நீ மூன்று நிபந்தனைகளை போட்டாய்.. அது உனக்கே தடையாக மாறும் என்பதை அறிவேன்.. நீ என்னைவிட மூத்தவன் என்ற நினைவில் இருந்தாய்..! உனக்கு மட்டுமே நான் வாக்கு கொடுத்திருப்பதாக எண்ணமும்.., நான் உன்னுடனே இருக்கிறேன் என்ற கர்வத்தை தந்தன.. உன் பெருமிதம், கர்வம், மூத்தவன் என்ற இந்த மூன்றும் சுவராக மாறி உனக்கு ஞானம் அடைய விடாது தடுத்து விட்டது. அந்த தடை நீங்குவதே நல்லது..!" என கூறி விட்டு புத்த பெருமான் மறைந்தார்.

                    புத்தரின் மறைவுக்கு பின் பெளத்த மகாசங்கம் கூடியது. ஆனந்தர் ஞானம் பெறவில்லை என்பதால் அவரை கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. அவர் மண்டபத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டார்.

                                    இந்த நிலையில் கடும் தியானத்தில் இறங்கினார் ஆனந்தர்.. நேரம் ஆக ஆக தியானத்தை கடுமைப்படுத்தினார்.. ஆனால் பயன் அற்ற நிலையில் அவரது மனம் வேதனையில் கண்ணீர் வழிந்தோட உடல் குலுங்க விம்மி.. விம்மி.. அழுதார். விடியற்காலை முயற்சிகள் அனைத்தையும் விட்டுவிட்டு.. மெல்ல தலை சாய்த்தார்.. அந்த கணத்தில் மின்னலென ஞானம் உதித்தது.

             மனம் கரைந்த நிலையில்.. கண்ணீர் ஆணவத்திரையை அகற்ற.. தான் என்ற நிலையற்று ஞானியானர் ஆனந்தர்.

                உள்ளிருந்த வந்த வயோதிக ரிஷி.., "நாற்பத்திரண்டு ஆண்டுகளாக பெறாததை ஒரே நாளில் பெற்று விட்டாயே..!" என்று பாராட்டி ஆனந்தரை உள்ளே அழைத்து போனார்.

அன்புடன் தபோ.. 

Aucun commentaire:

Enregistrer un commentaire